full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

சூர்யா சாருடன் நடித்ததில் பெருமைப்படுகிறேன் – ‘ஜெய் பீம் ‘ ராவ் ரமேஷ்.

நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள்.அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல் ஆச்சரியப்படுத்திய ஒரு நடிகர் ,அட்டர்னி ஜெனரல் ஆக வந்த ராவ் ரமேஷ்.அவரது பார்வை, பேச்சு, உடல்மொழி அனைத்துமே அவர் ஒரு பண்பட்ட நடிகர் என்று உணர்த்தியது. அது உண்மைதான். அவர் தெலுங்கில் கிட்டத்தட்ட 120 படங்களுக்கு மேல் அத்தனை முன்னணி ஹீரோக்களுடனும் பலதரப்பட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.அந்தப்படங்களில் அவரது அசாதாரண நடிப்பாற்றலைப் பார்த்தே ஜெய் பீம் பட இயக்குனர் த.செ.ஞானவேல் அவரை AG வேடத்துக்கு தேர்வு செய்திருக்கிறார்.

“நான்தான் அந்த வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பேன் என்று என்னைக் கேட்டதில் எனக்கு ஆச்சரியமான சந்தோஷம். இயக்குனர் ஞானவேல் சார் என்னைக் கேட்டதும், அதை சூர்யா சார் ஒத்துக் கொண்டதும் என் நன்றிக்குரிய விஷயங்கள். ஆனால் நான் அதில் நடிக்க ஒரு அன்பான கண்டிஷன் போட்டேன்..!” என்று சிரிக்கிறார் ராவ் ரமேஷ்.

Rao Ramesh's Big Step Into Tamil Film Industry

“நான் நடித்தால் அதற்கு நான்தான் டப்பிங் பேசுவேன் என்பதுதான் அந்த கண்டிஷன்…” என்றவர் தொடர்ந்தார்.

“எந்தக் கேரக்டராக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும் அதில் நாமே நடித்து நம் மாடுலேஷனில் பேசினால்தான் அதற்கு ஜீவன் இருக்கும் – அந்தக் கேரக்டர் மேம்படும் என்ற கருத்து கொண்டவன் நான். அதனால்தான் அப்படிக் கேட்டேன். அதற்கு அவர் ஒத்துக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சியுடன் நடித்தேன்.அது மட்டுமல்லாமல் தமிழ் ஒரு அழகான மொழி. அதனால்தான் தமிழ் நாட்டுக்கு வந்து வாழும் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் தமிழிலேயே பேச ஆரம்பித்து விடுகிறார்கள் ..” என்றார்.Rao Ramesh Age, Wife, Children, Family, Biography & More » StarsUnfolded

“தெலுங்கு நடிகரான உங்களால் எப்படி சுத்தமாக தமிழ் பேசி நடிக்க முடிந்தது..?”

“நான் வளர்ந்தது முழுக்க சென்னையில் தான். தி.நகர் ராமகிருஷ்ணாவில் தான் பள்ளிக்கல்வி படித்தேன்.அதனால் பிறமொழிக் கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ் பேச முடியும்..!” என்றவர் ஜெய் பீம் படத்தில் தான் நடிப்புக்குக் கிடைத்த பாராட்டுகளில் மகிழ்ந்து போயிருக்கிறார்.தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியானதில் அத்தனை மொழி பேசுபவர்களும் பார்தது, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களே பாராட்டுவது போல் இருக்கிறது.

I Felt Ashamed While Watching Yatra Movie - Rao Ramesh | Tupaki English

ரசிகர்கள் என்றில்லாமல் பல துறை சேர்ந்தவர்களும் குறிப்பாக சட்டத்துறை நிபுணர்களும் என்னிடம் “அட்டர்னி ஜெனரல் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எப்படி உங்களால் அப்படி நடிக்க முடிந்தது ..?” 

அதற்குக் காரணம் முழுக்க இயக்குனர் ஞானவேல் சார்தான். அவர்தான் என் கேரக்டரை அணு அணுவாக என்னுள் ஏற்றினார். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த ஸ்கேல் மாறாமல் என்னிடம் நடிப்பை வாங்கினார்.ஏனென்றால் அந்தக் கேரக்டர் சூர்யாவுக்கு எதிரானவரே தவிர வில்லன் இல்லை. உண்மையில் பொறுப்புள்ள அதிகாரி. அவர் பொறுப்பை அவர் நிறைவாக செய்ய வேண்டும். அவரை நம்பிதான் ஒட்டுமொத்தக் காவல்துறையின் கௌரவம் காக்கப்பட இருக்கிறது. மட்டுமல்லாமல் அரசுக்கும் களங்கம் வராமல் அந்த வழக்கை வழி நடத்த வேண்டும். அந்தப் பொறுப்பு அவர் பேசுவதில் இருந்தே வெளிப்பட வேண்டும். அவர் நடத்தையில் தெரிய வேண்டும்.”நான்தான் இன்னைக்கு ஆஜர் ஆகறேன்னு ஜட்ஜ்கிட்ட சொன்னிங்களா..?” என்று கேட்டு நான் கோர்ட்க்குள் வர அத்தனை வழக்கறிஞர்களும் எழுந்து வணக்கம் சொல்வதும், ஜட்ஜே நலம் விசாரிப்பதுமான காட்சி அந்தப் பாத்திரத்தின் மேன்மையை அப்படியே சொன்னது. படம் பார்த்த அனைவருமே அந்த நடிப்பில் என்னைப் பாராட்டினார்கள்.அப்படி ஒரு காட்சியை அமைத்த இயக்குனருக்குதான் அத்தனைப் பாராட்டுகளும் போய்ச் சேர வேண்டும். அதனால்தான் அந்தக் கேரக்டரில் நடிக்கும்போது அந்த பாடி லாங்குவேஜ் தானாகவே எனக்கு வந்தது..!” என்றார்.

Rao Ramesh Wiki, Biography, Age, Movies, Family, Images - News Bugz

“ஒரு புகழ் பெற்ற நடிகரின் வாரிசு நீங்கள் என்பதும் நடிப்பு இரத்தத்தில் ஊறியது என்பதுவும் கூட காரணமாக இருக்குமா..?” என்றால்,

“உண்மைதான். என் அப்பா, ராவ் கோபால் ராவ் தெலுங்கில் நானூறு படங்களுக்கு மேல் நடித்த சாதனையாளர். அவர் அப்போதிருந்த எல்லா ஹீரோக்களுக்கும் வில்லன் ஆனவர். அந்தத் திறமை என்னுள் இயல்பாகவே இருப்பது உண்மைதான்.ஆனால், அவர் சொல்லியோ அல்லது அவரைப் பார்த்து நானோ நடிக்க முடிவெடுக்கவில்லை. இன்னும் கேட்டால் எனக்கு நடிக்கும் ஆசையோ, நோக்கமோ இல்லை.எனக்கு புகைப்படக்கலையின் மீது ஆர்வம் இருந்தது. என் வாழ்க்கையை புகைப்பட கலைஞராகத்தான் சென்னையில் தொடங்கினேன். பிறகு உதவி ஒளிப்பதிவாளர் ஆகி பல படங்களில் பணியாற்றினேன். அதை முழுமையாகக் கற்று பிறகு இயக்குனர் ஆகும் எண்ணம் வந்தது. இந்நிலையில் எதிர்பாராமல் என் அப்பா காலமானார்.எனக்குக் குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பு ஏற்பட, அம்மா (கமலா குமாரி) விடம் இயக்குநராகும் ஆசையைச் சொன்னேன். அம்மாவோ, “உன்னை நம்பி யார் படம் கொடுப்பார்கள்..? அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நீ மற்றவர்களை நடிக்க வைக்க வேண்டும் என்றால் நீ முதலில் நடிப்பைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும். அதை முதலில் கற்றுக்கொள்..!” என்றார்.அம்மா சொன்னதில் இருந்த நியாயம் புரிந்து நான் நடிக்க ஆரம்பித்தேன். என் நடிப்பைப் பார்த்த அம்மா, ” இனிமேல் நீ, என்னிடம் கூட பேச நேரம் இல்லாத அளவுக்கு பிஸியாக இருப்பாய்..!” என்றார்கள். 5000 மேடைகளில் ஹரி கதா காலட்சேபம் செய்த அம்மாவின் சத்திய வாக்கு அப்படியே பலித்து இன்றைக்கு பிஸியான நடிகனாக இருக்கிறேன்..!”

Jai Bhim trailer out: Suriya turns advocate Chandru in gripping courtroom  drama

தன் கதையெய் சொல்லி முடித்த ராவ் ரமேஷிடம் சூர்யாவுடன் நடித்த அனுபவம் பற்றிக் கேட்டால் சிலிர்க்கிறார்.

“உண்மையில் என் நடிப்பு மிளிர்ந்ததற்குக் காரணம் சூர்யா சாரின் இயல்பான தன்மைதான். ஒரு முன்னணி ஹீரோ என்ற பந்தாவோ, பகட்டோ அவரிடம் இல்லை. செட்டில் எல்லோருடனும் மிக இயல்பாக மரியாதையுடன் பழகினார். அந்தத் தன்மைதான் என்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் நன்றாக நடிக்க வைத்தது.அவர் உச்ச ஹீரோ மட்டுமல்லாமல் சிறந்த நடிகர். அது மட்டுமல்லாமல் சிறந்த மனிதர். செட்டில் அவர் பற்றி பிறர் சொல்லக் கேள்விப்பட்ட போது மலைத்துப் போனேன். அவர் நடத்தி வரும் அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உயர் கல்வி பெறுகிறார்கள் என்ற போது பிரமிப்பாக இருந்தது.இப்போது இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக சமூக மேம்பாட்டுச் செய்தி சொன்னவர், இதில் கிடைத்த லாபத்தில் ஒரு கோடியைப் பழங்குடி இன மக்களின் நல்வாழ்வுக்கு வழங்கி இருக்கிறார். இந்த உயர்ந்த உள்ளம் யாருக்கு வரும்..? அவர் குடும்பத்தில் அனைவருமே கண்ணியமானவர்கள். அவர் படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடன் நடித்ததில் பெருமைப் படுகிறேன்..!”

Revealing Layers of Hidden Injustices, 'Jai Bhim' Leaves A Mark on Its  Viewers

“தொடர்ந்து தமிழில் நடிக்கும் திட்டம் இருக்கிறதா..?”

“இருக்காதா பின்னே – நான் நேசிக்கும் தமிழில்… நான் வளர்ந்த தமிழ் நாட்டில் நடிப்பை தொடர..? ஜெய் பீம் பார்த்துவிட்டு பெரிய இயக்குனர்கள் பேசி இருக்கிறார்கள். அந்தப் படங்கள் முடிவானதும் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்..!”