full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

‘நாகேஷ் திரையரங்கம்’ வெளியிட 50 லட்சம் இழப்பீடு

நடிகர் ஆரி, ஆஷ்னா சவேரி உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘நாகேஷ் திரையரங்கம்’. இந்த படத்தை டிரான்ஸ் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நடிகர் நாகேஷின் மகனும், பிரபல நடிகருமான ஆனந்த்பாபு ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதில், “என்னுடைய தந்தை நாகேஷ், 1958-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரை ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் பல கதாபாத்திரங்களில் நடித்துள்ள மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்.

அவர் சென்னை தியாகராய நகரில், நாகேஷ் தியேட்டர் என்ற ஒரு திரையரங்கை சொந்தமாக நடத்தினார். டிரான்ஸ் இந்தியா நிறுவன தயாரிப்பில், ஐசக் என்ற முகமது இசாக் என்பவர் இயக்கத்தில், ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. திகில் திரைப்படமான இது மிகவிரைவில் வெளியாக உள்ளது.

திரைப்படத்துக்கு ‘நாகேஷ் திரையரங்கம்’ என்று பெயர் வைப்பதற்கு முன்பு, எங்கள் குடும்பத்தினரிடம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பில் எந்த முன் அனுமதியும் பெறவில்லை. என்னுடைய தந்தையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக இந்த திரைப்படத்தின் பெயர் உள்ளது.

எனவே, ‘நாகேஷ் திரையரங்கம்’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். எங்கள் அனுமதி இல்லாமல் எங்களது தந்தையின் பெயரை பயன்படுத்தியதற்காக ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்.” என்று கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி வி.பார்த்திபன், மனுவுக்கு பதில் அளிக்கும்படி அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.