full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

முதல் பார்வை: டகால்டி

முதல் பார்வை: டகால்டி

10 கோடி ரூபாய் பணத்துக்காக திருச்செந்தூர் பெண்ணை நைச்சியமாகப் பேசி மும்பைக்கு அழைத்து வந்து வில்லனிடம் விற்கும் நாயகனின் கதையே ‘டகால்டி’.

மும்பையில் சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார் சந்தானம். ராதாரவியின் பொருளைக் கடத்தி வரும்போது போலீஸில் சிக்காமல் இருக்க பொருளை விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிறார். இதனால் ராதாரவியின் கோபத்துக்கு ஆளாகும் சந்தானம் அவர் தரும் தண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு பொய் சொல்கிறார். நாயகி ரித்திகாவைத் தனக்குத் தெரியும் என்றும், அவரைக் கையோடு அழைத்து வருகிறேன் என்றும் ராதாரவியிடம் சொல்லி அட்வான்ஸ் பணம் பெற்றுக்கொண்டு திருச்செந்தூர் விரைகிறார். அங்கு இயக்குநர் கனவுடன் சில பல அலப்பறைகளுடன் ரித்திகா சென் வலம் வருகிறார்.

 இயக்குநர் கனவுக்கு அணை போடும் அப்பா, ரித்திகா சென்னுக்கு கல்யாணம் செய்துவைக்க முடிவெடுக்கிறார். ரித்திகா இரவோடு இரவாக வீட்டை விட்டு ஓடிப் போகிறார். அந்த சமயத்தில் ரித்திகாவைத் தேடி சந்தானம் திருச்செந்தூர் வருகிறார். ரித்திகாவின் மாமா நமோ நாராயணனோ சந்தானம்தான் ரித்திகாவைக் கடத்தியதாக நினைத்து அடியாட்களுடன் அதிரடியாய் மிரட்டுகிறார். இவர்களை எல்லாம் சமாளிக்கும் சந்தானம், வழியில் வரும் ரவுடிகளை அடித்து, ரித்திகாவை எப்படி மும்பைக்கு அழைத்து வருகிறார், ஏன் 10 கோடி ரூபாய் பேரத்துக்கு அடிபணிகிறார், பின் பணம் கிடைத்ததும் என்ன செய்கிறார் போன்ற கேள்விகளுக்கு ரொம்பவே பழைய பாணியில் அலுப்பூட்டும் விதத்தில் சொல்கிறது திரைக்கதை.

ஒரு நகைச்சுவைப் படத்துக்கான எல்லா அம்சங்களையும் சரியாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர் விஜய் ஆனந்த். ஆள் மாறாட்டம், கடத்தல் என சுவாரசியத்துக்கான சங்கதிகள் இருந்தும் திரைக்கதையில் தடுமாறியுள்ளார்.

ஓஹோ ஆஹோ என்று எதுவும் சொல்ல முடியாத நிலைக்கு இக்கட்டான நிலைமைக்குத் தள்ளிவிடுகிறார் சந்தானம். சென்னை, ஆந்திராவில் திறமை காட்டிய சந்தானம் மும்பை லொக்கேஷனில் இடம் மாறினாலும் அப்படியே இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் சிரிப்பு மூட்டும் விதமாகவும் இல்லாமல், மாஸாகவும் இல்லாமல் லேசுபாசாக இருப்பதும் பலவீனம். ஒன்லைனர்களை மட்டும் நம்பியவர் கதையிலும் கவனம் செலுத்தி இருக்கலாம். சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு படம் என்பதைத் தாண்டி அவருக்கு இப்படத்தால் எந்தப் பெருமையும் கிட்டாது என்பதுதான் சோகம். இனிமே புதுப்பாதை மேலே மேலே போவேன் என்று படத்தின் இறுதியில் ஒரு பாடல் வருகிறது. அது இந்தப் பாதையாக இருந்தால் சந்தானம் தன் பாதையை மாற்றிக்கொள்வது நல்லது.

பழைய முன்னணி ஹீரோயின்களுக்கு டப்பிங் கொடுத்தவர் ரித்திகா சென்னுக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். ரித்திகா சென்னின் நடிப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அப்பாவியாக நடிக்கவும் முடியாமல் லூஸுப் பெண் இமேஜை சுமக்கவும் முடியாமல் அவர் தடுமாறுவதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறது.

ராதாரவி, சந்தானபாரதி, ரேகா, மனோபாலா, நமோ நாராயணா ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். ஆனால், சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. இவ்வளவு பலவீனமான படத்தில் தருண் அரோரா கம்பீரமாக அறிமுகம் ஆகி கடைசியில் ஹீரோவிடம் அடிவாங்கி அடங்கிப் போகிறார். அதில் செயற்கைத்தனமே மிஞ்சி நிற்கிறது.

 

 

விஜய் நரேன் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை ரகம். தீபக் குமார் மும்பை, திருச்செந்தூர், சென்னையை நன்கு காட்சிப்படுத்தியுள்ளார். டி.எஸ்.சுரேஷ் இயக்குநரின் ஒத்துழைப்புடன் பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்

சந்தானம் – யோகி பாபு சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும் சிரிக்க வைக்கின்றன. இன்னும் எத்தனை படங்களில்தான் யோகி பாபுவை உருவ கேலி செய்வார்கள் என்று தெரியவில்லை. சக நடிகரான யோகி பாபுவை சந்தானம் குரங்குடன் ஒப்பிட்டுப் பேசுவதெல்லாம் கண்டிக்கத்தக்கது.

 

 

சந்தானம் என்ன பொருளை போலீஸுக்கு பயந்து விட்டுவிட்டுச் செல்கிறார், ராதாரவியின் தண்டனையில் இருந்து தப்பிக்க ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையை எப்படி சீர்குலைக்கப் பார்க்கிறார், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சந்தானத்தால் எப்படி பொய் சொல்ல முடிகிறது, பார்க்கிற நபர்களை எல்லாம் அடித்துத் தூக்கிப் போட்டு நாயகியைக் காப்பாற்ற முடியும் அளவுக்கு சந்தானம் பலம் படைத்தவரா, எந்தக் கேள்வியும் கேட்காமல் ஹீரோயின் எப்படி நாய்க்குட்டி மாதிரி சந்தானத்தின் பின்னாடியே வருகிறார் என்று ஏகப்பட்ட கேள்விகளும், லாஜிக் இடறல்களும் உள்ளன.

சந்தானம், யோகி பாபு, பிரம்மானந்தம் என 3 பேர் இருந்தும் சிரிப்புக்குப் பஞ்சம் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இதையெல்லாம் தாண்டி கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்படுத்துவது ஆள் மாறாட்டக் காட்சிகள்தான்.

மொத்தத்தில் ‘டகால்டி’ டல்லடிக்கிறது.