full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

சிகிச்சை பெற்ற ஜெயலலிதா புகைப்படம் விரைவில் வெளியிடப்படும் : தினகரன் ஆதரவாளர்

ஜெயலலிதா மரணம் அடைந்ததால் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அ.தி.மு.க. இரண்டாக பிளவுப்பட்டது. இந்த இரு அணிகளையும் இணைப்பதற்கு கடந்த சில தினங்களாக முயற்சிகள் நடந்தன. ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை.

இரு அணிகளும் ஒன்று சேர வேண்டுமானால் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட்டு மர்மத்தை போக்க வேண்டும், சசிகலா குடும்பத்தினரை அ.தி.மு.க.வில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியினர் இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்தனர்.

ஆனால் இந்த நிபந்தனைகளை சசிகலா அணி அ.தி.மு.க.வினர் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் ஜெயலலிதா மரணம் மற்றும் சிகிச்சை தொடர்பான கேள்விகளை ஓ.பி.எஸ். அணியினர் தொடர்ந்து எழுப்பி வருகிறார்கள். அடுத்த கட்டமாக ஓ.பி.எஸ். அணியினர் தமிழ்நாடு முழுவதும் நாளை மறுநாள் முதல் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. தொண்டர்களை சந்திக்க உள்ளனர். அப்போதும் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள மர்மம் குறித்து கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளனர்.

ஓ.பி.எஸ். அணியினரின் இந்த திட்டத்தை முறியடிக்க சசிகலா தரப்பினரும் தயாராகி உள்ளனர். அதன் ஒரு கட்டமாக இன்று தினகரன் ஆதரவாளரான கர்நாடக மாநில அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி தலைமையில் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். அவர்கள் தினகரன் மீது மத்திய அரசு பொய் வழக்கு போடுவதாக கண்டன கோ‌ஷம் எழுப்பினர்.

போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கர்நாடக அ.தி.மு.க. அம்மா அணி செயலாளர் புகழேந்தி, ” ஜெயலலிதாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அதில் மர்மம் இருப்பதாக சிலர் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும். அதற்கான அனுமதிக்காக காத்திருக்கிறோம்.

அந்த புகைப்படங்கள் வெளியானால் பலரது முகத்திரை கிழியும். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உடன் இருந்த ஓ.பன்னீர்செல்வம் தற்போது சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார். உண்மைகள் விரைவில் வெளிவரும். மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு 33 ஆண்டுகள் உற்ற தோழியாக, தாயாக இருந்து தியாகம் செய்தார் சசிகலா. அவரது தியாகத்தை மறந்தால் நாம் அ.தி.மு.க. காரனாக இருக்க முடியாது.

ஜெயலலிதா இறந்த பின்பு தாயில்லா பிள்ளையாக இருந்த நம்மை அரவணைத்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தியவர் சசிகலா. அவரது வழியில் துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் கட்சி பணியாற்றினார். அ.தி.முக. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு சசிகலாவும், தினகரனும் எடுத்த முயற்சிகள் நன்றி மறக்க கூடியது அல்ல. சசிகலாவும், தினகரனும் இல்லாவிட்டால் அ.தி.முக. அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயித்திருக்க முடியாது.

எனவே மனிதனுக்கு நன்றி வேண்டும். ஆனால் நன்றி கெட்டவர்கள் பற்றி கவலை இல்லை. நல்ல உள்ளம் கொண்ட தொண்டர்கள் இங்கே கூடி இருக்கிறோம். அ.தி.மு.க. தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொய் வழக்கில் இருந்து தினகரனை விடுதலை செய்ய வேண்டும்.” கூறினார்.