full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

`சத்யமேவ ஜயதே’ குறித்த கேள்விக்கு கமலின் பதில்

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக் பாஸ். இதன் முதல் பார்வை வெளியான நாளில் இருந்தே இது எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. இதைத் தொகுத்து வழங்க இருப்பது உலகநாயகன் கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. 5 வயதில் இருந்து, கடந்த 58 வருடமாக சினிமாவிலேயே இருந்து கலைச்சேவை ஆற்றி வரும் சகலகலா வல்லவன் கமல்ஹாசனை விட சிறப்பான ஒரு தொகுப்பாளர் கிடைக்க மாட்டார்.

இந்நிலையில், பிக் பாஸ் புரோமோவை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது, “சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன்.

இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன். அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன். கேமராக்கள் இருப்பதால் யதார்த்தம் போய் விடும் என்பது தவறு. பிக் பாஸ் வீட்டுக்குள் போன கொஞ்ச நேரத்தில் கேமரா இருப்பதையே பிரபலங்கள் மறந்து விட்டு, இயல்பாகி விடுவார்கள். நிச்சயம் இது யதார்த்தமான ஒரு நிகழ்ச்சியாக அமையும் என நம்புகிறேன். பல சமயங்களில் நாங்கள் கூட கேமரா இருப்பதை மறந்து ஏதோதே பேசி சர்ச்சையில் சிக்கியதுண்டு என்று தன் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன்.

இந்தியில் அமீர்கான் செய்த `சத்யமேவ ஜயதே’ போல நிகழ்ச்சி ஏதும் செய்யாமல், இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறீர்களே? என ஒரு நிருபர் கேட்டதற்கு, அந்த மாதிரி விஷயங்களை நிகழ்ச்சி மூலம் தான் செய்ய வேண்டுமென்று இல்லை. அவரை விடவும் அதிகமாக, நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன்” என்றார் கமல்ஹாசன்.

ஜூன் 25-ஆம் தேதி முதல் தொடங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ளது.