full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! 

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” பத்திரிக்கையாளர் சந்திப்பு ! 

துல்கர் சல்மான், ரிது வர்மா, கௌதம் மேனன் நடித்துள்ள காதல், ஆக்‌ஷன் கலந்த கமர்ஷியல் படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. Anto Joseph Film company நிறுவனம் Viacom 18 Motion pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. புதுமுக இயக்குநர் தேசிங்கு பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.  பிப்ரவரி 28 அன்று வெளியாகும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.


இச்சந்திப்பில் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் பேசியது…

இந்தப்படத்திற்கு பின்னணி இசை மற்றும் ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறேன். உங்களுக்கு மிக பிடிக்கும் என நம்புகிறேன். வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் பாஸ்கர் பேசியது…

கௌதம் சாருக்கு நன்றி அவருடன் வேலை செய்ய வேண்டுமென்பது நெடுநாள் கனவு. துல்கர் மிக எளிமையான மனிதர். படப்பிடிப்பில் அவர் இருந்தால் சந்தோஷமாக இருக்கும். ரிது வர்மா அழகான ஹீரோயின். மிக திறமை வாய்ந்தவர். படம் நன்றாக வந்துள்ளது. எல்லோருக்கும் நன்றி.

உடை வடிவமைப்பாளர் நிரஞ்சனி பேசியது ….
இயக்குநருக்கு நன்றி. இது கனவு மாதிரி இருக்கிறது. ஆனால் இன்று இங்கு நிற்க இயக்குநர்  தான் காரணம்.  உடை வடிவமைப்பிற்காக தான்  சென்றேன் ஆனால் என்னை நடிக்க வைத்து விட்டனர். என்னை நம்பி வாய்ப்பளித்தற்கு நன்றி. கௌதம் சார்  படத்தில் வேலை செய்திருக்கிறேன் ஆனால் இப்படத்தில் கௌதம் சாருக்கு உடை வடிவமைத்திருக்கிறேன் அது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. இந்தபடத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். ரிது வர்மா மிகவும் நட்பாக இருந்தார். துல்கர் நன்றாக நடித்திருக்கிறார். நான் நடித்திருக்கும் படத்தை திரையில் காண நானும் ஆவலுடன்  எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நன்றி.
நாயகி ரிது வர்மா பேசியது:

எல்லோருக்கும் வணக்கம். தமிழ் எனக்கு குறைவாகவே தெரியும். இது தமிழில் எனது முதல் மிகப்பெரிய படம்.  நிறைய எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். இயக்குநர் வெகு காலமாக இந்தப்படத்திற்காக உழைத்திருக்கிறார். துல்கர் மிகச்சிறந்த நடிகர் அவரின் காந்த ஈர்ப்பு 10 சதவீதம் என்னிடம் இருந்தாலே போதுமென நினைப்பேன். கௌதம் சார் என்னை வைத்து படம் இயக்கியுள்ளார்.  அவருடன் இந்தப்படத்தில் பங்கு கொண்டது மகிழ்ச்சி. படம் எல்லோருக்கும் பிடிக்கும்படி இருக்கும்.  நன்றி.

நடிகர் ரக்‌ஷன் பேசியது…:

டிவியில் வேலை செய்யும் போது படம் நடிக்க ஆசைப்பட்டேன். தேசிங்கு அண்ணன் இந்த வாய்ப்பை தந்துள்ளார். அவருக்கு நன்றி. துல்கர் என்னை ஒரு சகோதரன் போல் பார்த்து கொண்டார். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.  எல்லோருக்கும் நன்றி.
கௌதம் வாசுதேவ் மேனன் பேசியது…

ஒரு நடிகராக புதிய பயணம் தொடங்கியிருக்கிறது. இது எதுவுமே திட்டமிட்டது இல்லை ஆனால் நன்றாகவே இருக்கிறது. தேசிங்கு என்னை அணுகிய விதம் எனக்கு பிடித்திருந்தது. எஸ் ஜே சூர்யா நடிக்க வேண்டிய பாத்திரம். துல்கரை எனக்கு தெரியும் அவர் தேர்ந்தெடுத்தால் கதை நன்றாக இருக்குமென தெரியும். துல்கருடன் பணிபுரிந்தது சந்தோஷம். ரிது வர்மா, நிரஞ்சனி என்னிடம் வேலை செய்திருக்கிறார்கள். அவர்களுடன் இந்தபடத்தில் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இளைஞர்கள் புத்துணர்வுடன் வேலை செய்துள்ளார்கள். நான் நடித்த பகுதிகள் பார்த்தேன் எனக்கு பிடித்திருந்தது. படம் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி  பேசியது…

இது எனக்கு முதல் மேடை. பத்திரிக்கைகள்  தான் என்னை முதலில் அறிமுகப்படுத்தியது. படம் அறிவித்த போதே என் பெயர் இயக்குநர் என வந்துவிட்டது. எல்லா அறிமுக இயக்குநரும்  பட்ட கஷ்டங்களை பட்டே இந்தப்படத்தை நானும் இயக்கினேன். துல்கரை மட்டுமே மனதில் வைத்து இந்தப்படத்தின் கதையை எழுதினேன். அவர் வந்துவிட்டதால் இந்தப்படத்தின் மீது மற்றவர்களுக்கு பெரிய நம்பிக்கை வந்துவிட்டது. பெல்லி சூப்புலு பார்த்து ரிது வர்மாவை இந்தப்படத்தில்  நடிக்க வைத்தோம். அருமையாக நடித்திருக்கிறார். கௌதம் சார் நினைத்தால் மிகப்பெரிய படங்களில் நடிக்கலாம் ஆனால் என்னை நம்பி ஒரு அறிமுக இயக்குநருக்கு உதவியாக இருக்குமென்றே அவர் நடித்திருக்கிறார். அவர் இந்தப்படத்தில் அசத்தியிருக்கிறார். துல்கர் எந்த தலையீடும் இல்லாமல், எந்த ஈகோவும் இல்லாமல், அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடித்து தந்தார். கால் உடைந்த மிக கடினமான நேரத்திலும் எங்களுக்கு ஒத்துழைப்பு தந்தார். எனது படக்குழு என் மீது மிகவும் அன்பானவர்கள். எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் உழைத்த என் உதவி இயக்குநர்களுக்கு நன்றி. இந்தப்படத்தில் நிறைய ஆச்சர்யங்கள் இருக்கிறது. உங்களுக்கு பிடிக்கும். பட ரிலீஸுக்கு பிறகு மீண்டும் பேசுவோம் நன்றி.

துல்கர் சல்மான் பேசியது….

இந்தப்படத்தின் விளம்பரத்தை ஆரம்பித்தபோது எல்லோரும் என்னிடம் “ஏன் இந்த இடைவெளி” என கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னை மறக்காமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்தக்கதை கேட்டவுடனே மிக உற்சாகமாக இருந்தது. எப்போது இந்தப்படம் செய்யலாம் எனக் காத்திருந்தேன். நான் முதலில் பயந்திருந்தேன் படக்குழு புதிது எப்படி இருக்கும் என நினத்தேன். என் மீது எல்லோரும் அன்பாக இருந்தார்கள். ரிது வர்மாவின் பெல்லி சூப்புலு பார்த்துள்ளேன் அவர் மிகத்திறமை வாய்ந்தவர். அவர் ஒரு தமிழ்பெண் போலவே இப்படத்தில் இருப்பார். படப்பிப்பிடிப்பில் பெரும் ஒத்துழைப்பு தந்தார். கௌதம் சார் தான் இந்தப்படத்தின் மிகப்பெரிய பலம். அவர் இல்லாவிட்டால் இந்தப்படம் காமெடியாக இருந்திருக்கும். இந்தப்படத்தின் சூப்பர்ஸ்டார் அவர் தான். அவர் விசிறியாக படப்பிடிப்பில்  நிறைய பேசிக்கொண்டிருந்தோம் . அவருடன் கண்டிப்பாக ஒரு காதல் படம் நடிப்பேன். இயக்குநர் தேசிங்கு பயங்கர தெளிவானவர், அவரது கனவு இந்தப்படம்.  எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இந்தப்படம் கண்டிப்பாக இருக்கும். எல்லோரும் பாருங்கள் நன்றி.