full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்

 

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘தமிழாற்றுப்படை’ நூலின் 10ஆம் பதிப்பு சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அமெட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.திருவாசகம் நூலை வெளியிட மூத்தபாட கிபி.சுசீலா முதற்படி பெற்றுக்கொண்டார். ஏற்புரையில் கவிஞர்வைரமுத்து பேசியதாவது:

“வாசிக்கும் பழக்கம் அற்றுக்கொண்டிருக்கிறது என்றுயாரும் வருந்தவேண்டாம். நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துவாசிக்கும் வழக்கம் தொடங்கியிருக்கிறது. இல்லையென்றால் ‘தமிழாற்றுப்படை’ 90 நாட்களில் பத்துப்பதிப்புகண்டிருக்க முடியாது. தமிழாற்றுப்படையை உயர்த்திப்பிடித்த ஊடகங்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி சொல்வதில் நான் நாகரிகமடைகிறேன்.

தமிழ் பெருமையுறுவது போல் ஒரு தோற்றம்தெரிகிறது. ஆனால் அதுமாயமான் தோற்றம் போல் மறைந்துவிடக்கூடாது என்ற கவலையும் வருகிறது. உலக மொழிகளில் 18ஆம் இடத்திலும் இந்திய மொழிகளில் 5 ஆம் இடத்திலும் தமிழ்திகழ்கிறது. இது வெறும் எண்ணிக்கைக்கணக்குதான். எல்லாத் தருணங்களிலும் எண்ணிக்கையே தர்மமாகிவிடாது. சனிகிரகத்துக்கு  82 நிலவுகள் இருப்பதாக அறிவியல் அறிவிக்கிறது. ஆனால், ஒற்றை நிலவு கொண்ட பூமியில்தான் உயிரினங்கள் வாழ வசதியிருக்கிறது. எண்ணிக்கையிலேயே எல்லாவற்றையும் தீர்மானித்துவிட முடியாது.

தொன்மை-இலக்கியம்-வரலாறு- பண்பாடு என அனைத்திலும் தமிழ் மூத்தமொழியாக விளங்குவதால் தான் ஐ.நா.சபையில் பிரதமரால் தமிழை மேற்கோள் காட்டமுடிந்தது. ‘மதிப்பிற்குரிய விருந்தினரே!‘ என சீன அதிபரைத் தமிழில் விளிக்க முடிந்தது. ஆனால் மேற்கோள் மட்டுமே தமிழை வளர்ந்து விடுமா என்று அறிவுலகம் அய்ய முறுகிறது. மத்திய அரசு, மொழி அரசியலைக் கையிலெடுக்கிறதோ என்றும் கருத்துலகம் கவலையோடு கருதுகிறது. ‘சொல் என்பது பித்தளை; செயல் தான் தங்கம்’ என்பார்கள். மத்திய அரசு செயல் வடிவில் தமிழை வளர்ப்பதையே தமிழர்கள் விரும்புவார்கள். மொழி வளர்ச்சி என்பது தமிழை மட்டும் வளர்ப்பதில்லை. தமிழர்களையும் வளர்ப்பதுதான்.

தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் மெய் யன்பு காட்டுவதானால் கீழ்க்கண்டவற்றை ஆசையோடு அமல்படுத்த வேண்டும்.

  • தமிழும் ஆட்சி மொழியாய் அறிவிக்கப்பட வேண்டும்.
  • நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்.
  • அதற்கு முன்னோட்டமாய் மாநிலங்களில் விளங்கும் மத்தியஅரசு அலுவலகங்கள் தமிழிலும் இயங்க வேண்டும் .நீதி மன்றங்களில் தமிழ் வழக்காடு  மொழியாக  வேண்டும்.
  • தமிழ் பயின்றவர்களுக்கும் தமிழில் பயின்றவர்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
  • வேலைவாய்ப்புத் தேர்வுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்படக்கூடாது.
  • செம் மொழித் தமிழாய்வு நிறுவனம் செம்மைப்படுத்தப்பட வேண்டும். தமிழாய்ந்த அதிகாரிகளால் அதுதலை நிமிர வேண்டும்.
  • தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியே ஆங்கிலம்,  ஸ்பானிஷ்,  மாண்டரின்,  ரஷ்யன் போன்ற உலகமொழிகளை த்தமிழ் சென்றடைய வேண்டும்.

வரலாற்று வழியெங்கும் தமிழர்கள் நிறைய இழந்திருக்கிறார்கள். உரோமம் உள்ள விலங்குகள் நெருப்புக்கு அஞ்சுவது மாதிரி பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னொரு மொழியின் திணிப்புக்கு அஞ்சுகிறார்கள். சமஸ்கிருதத்துக்கும் இந்திக்கும் காட்டப்படும் முன்னுரிமையை மூத்தமொழியான தமிழுக்கும் மத்தியஅரசு வழங்க வேண்டும். பிரதமர் தமிழ் உச்சரித்ததில் எங்கள் செவிகுளிர்ந்தது. ஆனால், இதயத்தை க்குளிரவைக்க இன்னும் ஏராளம் இருக்கிறது.”

இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.

இவ்விழாவில் தொழிலதிபர் வெங்கடேஷ், வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். நிதி ஆலோசகர் கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார்.தொழிலதிபர் கணபதி மந்திரம் நன்றியுரையாற்றினார். விழாவில் 200க்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்துகொண்டனர்.