full screen background image
Search
Wednesday 24 April 2024
  • :
  • :
Latest Update

கேணி – விமர்சனம்!

ஆக்ரோஷ சண்டைகளில்லாமல், இரட்டை அர்த்த கொஜமுஜா வசனங்கள் இல்லாமல் அழகாய் ஒரு தமிழ் சினிமா. பசுமைக்கும் வறட்சிக்கும் சூத்திரமாய், மனிதனின் வாழ்வாதாரமாய் விளங்கும் தண்ணீரையும், அந்த தண்ணீர் எப்படி அரசியல் படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லியிருக்கும் திரைப்படம் “கேணி”.

கேரள – தமிழ்நாடு எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்ட கதையில், அந்தக் கேணி காட்டப்படும் போதெல்லாம் “முல்லைப் பெரியாறு அணை” தான் நினைவுக்கு வந்துவந்து போகிறது. ஒரு கட்டத்தில் அந்தக் கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, நாம் நினைத்ததில் தவறில்லை என்பது புரிகிறது.

படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத் ஒரு மலையாளி. படத்தைத் தயாரித்திருக்கும் சஜீவ் பி.கே மற்றும் ஆன் சஜீவ் இருவருமே மலையாளிகள். இப்படி மலையாளிகளால் எடுக்கப்பட்டிருக்கும் ஒரு திரைப்படம் தமிழர்களுக்கான உரிமையைப் பேசுகிறது என்பது மிகப்பெரிய ஆச்சரியம். அதிலும் இயக்குநர் நிஷாத்திற்கு சமூகத்தின் மீது இருக்கிற அக்கறையும்.. மொழி, இன, சாதி, மத அடிப்படைகளைக் கடந்து மனிதநேயமே உயர்ந்தது என்று கூறிய துணிச்சலும் நிச்சயம் பாராட்டிற்குரியது.

நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி இந்திரா. கணவர் திடீரென இறந்துவிட, அவரின் கடைசி ஆசைக்கேற்ப சொந்த கிராமத்திற்கு இடம் பெயர்கிறார். அவரோடு தீவிரவாதி என சந்தேகிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இசுலாமிய இளைஞனின் மனைவியும் கூட வருகிறார். வரும் இடத்தில் மக்கள் தண்ணீரின்றி தினந்தினம் செத்து மடிவதைக் கண்டு மனம் வருந்துகிறார். அதே நேரத்தில் தன் தோட்டக் கேணியில் வற்றாத நீர்வளம் இருப்பதைக் காண்கிறார். தண்ணீரின்றி கஷ்டப்படும் அந்த ஊர் மக்களுக்காக கேணியைத் தர முடிவெடுக்கிறார். அதன் பின்னர் தான் அந்தக் கேணிக்குப் பின்னால் இருக்கும் எல்லைப் பிரச்சினையும், அரசியல் வதிகளின் சூழ்ச்சியும் இருப்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால் மக்களின் தாகத்தைப் போக்கியேத் தீருவது என தீர்க்கமாய் களமிறங்கி இந்திரா போராடுவதே “கேணி” திரைப்படத்தின் கதை.

தாஸ் ராம் பாலாவின் வசனம் ஒவ்வொன்றிலும் அரசியல் தெறிக்கிறது. தெளிந்த அரசியல் புரிதல் கொண்டவர்களால் மட்டுமே இம்மாதிரியான கூர்மையான வசனங்களை எழுத முடியும். அந்த வகையில் படம் பேச முனைந்திருப்பதை தன் வசனங்களின் மூலம் நூறு சதவீதம் நிறைவாய் வெளிப்படுத்தியிருக்கிறார் தாஸ் ராம்பாலா. ஆனால், தீவிரவதியை “முஸ்லீம் தீவிரவாதி” என ஏன் எழுதினீர்கள் பாலா சார்?

“நடிகை குழந்தை பெத்துகிட்டா அவ புருஷன் சந்தோஷப் படாம பக்கத்து வீட்டுக் காரனாடா சந்தோஷப்படுவான்.. அதையெல்லாம் செய்தியாக்குறீங்க?”

“10 நடிகன், 20 அரசியல்வாதி, 30 விளையாட்டு வீரன் இவனுங்க 50 பேர் மட்டுமா இந்தியா?, 125 கோடி பேர் இருக்கான்.. அவனுங்களையும் பாருங்க”

“ ராக்கெட் விடுறோம், ஏவுகணை தயாரிக்கிறோம்.. ஆனா இன்னும் மனுஷன் பேண்டதை மனுஷன் தானே அள்ளிட்ருக்கான்.. அதை என்னைக்காவது பேசியிருக்கோமோ?”

என படம் முழுக்க பட்டாசாய்த் தெரிக்கின்றன வசனங்கள்..

யாருங்க அந்த நௌஷாத் ஷெரிப்?, ப்ப்ப்பா, ஒளிப்பதிவில் மிரட்டியிருக்கிறார் ஆள். பச்சைப் பசேலென விரியும் நிலப்பரப்பையும், வறண்டு வெடித்துக் கிடக்கிற பொட்டலையும் அப்படியே அள்ளித் தந்திருக்கிறார் தன் ஒளி வண்ணத்தில். ஒவ்வொரு ஃபிரேமும் கண்களுக்குள் இன்னும் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இந்திராவாக வரும் ஜெயப்பிரதா தன் அனுபவத்தின் முதிர்ச்சியை  நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். பார்த்திபன் பஞ்சயாத்து தலைவராக இடையிடயே வந்து நியாயம் பேசுகிறார், கூடவே அவரது குறும்பும். நாசர், ரேவதி, அனு ஹாசன், ரேகா, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஜாய் மேத்யூ, சாம்ஸ், பிளாக் பாண்டி என அனைவருமே நிறைவாக நடித்து படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

ஜெயச்சந்திரன் இசையில் பாடல்கள் அனைத்தும் ஜீவனாய் நிற்கின்றன படத்திற்கு. “அய்யா சாமி” பாடலும், “கலையும் மேகமே” பாடலும் பிரமாதம். “விக்ரம் வேதா” சாம்.சி.எஸ் பின்னணி இசையில் முத்திரை பதித்திருக்கிறார். பழனிபாரதியின் வரிகளில் அவரது தனித்துவமும், தமிழும் மிளிர்கிறது.

தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது, படத்தின் முக்கியத்துவம் கருதி உழைத்திருக்கிறார். படம் சொல்ல வரும் செய்தி எந்த விதத்திலும் சிதைந்து விடாமல் இருக்கும்படி காட்சிகளை கவனமாக வெட்டி-ஒட்டியிருக்கிறார். 

மொத்தத்தில் “கேணி” சொல்லும் செய்திக்காகவும், இயக்குநரின் சமூக அக்கறைக்காகவும், அரசியல் தெறிக்கும் வசனங்களுக்காகவும், கண்களில் நிழலாடும் ஒளிப்பதிவிற்காகவும் நிச்சயமாக “கேணி” பார்க்க வேண்டிய படம் தான்.