full screen background image
Search
Saturday 27 April 2024
  • :
  • :
Latest Update

கொடிவீரன் – விமர்சனம்!

சினிமாவை வெறும் சினிமாவா மட்டும் பாருங்க.. அலசி ஆராயாதீங்க! என்கிற வாதத்தின் பின்னால் நின்று கொண்டு தான் முத்தையா போன்ற இயக்குநர்கள் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். குட்டிப்புலி தொடங்கி மருது வரை முத்தையா எடுத்திருக்கும் படங்கள் எல்லாமே “மண்வாசனை” என்ற பெயரில் “ரத்த வாடை” கொண்டவையாகவே இருந்திருக்கின்றன. மிக நுணுக்கமான அவரது “கொம்பு சீவும்” வேலையை கொடிவீரன் படத்திலும் தயவு தாட்சண்யமே பார்க்காமல் “செய்திருக்கிறார்”.

சரி.. இப்போது கொடிவீரனை வெறும் திரைப்படமாக மட்டுமே பார்ப்போம்.

முத்தையா படம், கண்டிப்பா ஹீரோ பேண்ட் போடமாட்டார். வேட்டி, இல்லனா கைலி தான் கட்டுவார். கொடிவீரனும் அப்படிப்பட்டவர் தான்.
முத்தையா படம், கண்டிப்பா ஹீரோ முறுக்கு மீசை தான் வச்சிருப்பார். கொடிவீரனும் அப்படிப்பட்டவர் தான்.
முத்தையா படம், கண்டிப்பா ஹீரோ அம்மா மேலயோ, அப்பத்தா மேலயோ, மாமனார் மேலயோ பாசமா இருப்பார். கொடிவீரனும் அப்படிப்பட்டவர் தான். இந்த தடவை தங்கச்சி.
முத்தையா படம், ஹீரோ அடிதடிக்காரனா இருந்தாலும் ஊரே மெச்சும்படியா தான் இருப்பார். கொடிவீரனும் அப்படித்தான், “குலத்துக்கே” சாமி.  
முத்தையா படம், ஹீரோயின் படிச்ச பொண்ணாவே இருந்தாலும் படிக்காத ஹீரோவை கரெக்டா லவ் பண்ணிரும். கொடிவீரனிலும் அப்படித்தான், இதில் ஹீரோயின் டீச்சர் வேற.
ம்ம்.. மறந்தாச்சு.. முத்தையா படம், “ தாட்டியரே தாட்டியரே” டைப்பில் உறுமி சத்தத்தோடு ஒரு ஓப்பனிங் சாங்க் இருக்கும். கொடிவீரனிலும் இருக்கிறது, இமான் தேதி கிடைக்காமல் ரகுநந்தனை இமான் மாதிரியே இசையமைத்துத் தரும்படி கேட்டிருப்பார்கள் போல. ரகுநந்தனும், முத்தையாவின் முந்தைய படங்களிலிருந்து சற்றும் விலகாமல் “உறுமி” தள்ளியிருக்கிறார்.

கதை? தங்கச்சி மேல உசுரையே வச்சிருக்கிற ஹீரோ அண்ணன். தங்கச்சி மேல உசுரையே வச்சிருக்கிற வில்லன் அண்ணன். ஹீரோ அண்ணன் நல்ல தங்கச்சியோட வாழ்க்கைக்காக, வில்லன் அண்ணனோட கெட்ட தங்கச்சி புருசனை கொல்றார். தாலியறுக்கிற கெட்ட தங்கச்சி வில்லன் அண்ணன் கிட்ட, எனக்கு ஹீரோ அண்ணனோட தங்கச்சி தாலிய அற்றுத்துத் தான்னு கேட்கிறார். வில்லன் அண்ணனும், ஹீரோ அண்ணனோட தங்கச்சி தாலிய அறுப்பேன் என்று சபதம் போடுகிறார். இதில் ஹீரோ அண்ணன் ஜெயித்தாரா? வில்லன் அண்ணன் ஜெயித்தாரா? என்பது தான் படம்.

இந்திய சினிமா வரலாற்றில் இப்படி ஒரு அண்ணன் – தங்கச்சி சினிமாவை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். பொதுவாகவே தங்கச்சி செண்டிமெண்ட் படங்களை கண்ணீர் தெறிக்க தெறிக்க தான் எடுப்பார்கள். முத்தையா புது முயற்சியாக ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு தங்கச்சிகளுக்கான காவியத்தை செதுக்கியிருக்கிறார். கொடிவீரனுக்குப் பிறகு தங்கச்சிகள் அண்ணன்களுக்கு உசுப்பேற்றி விட்டு கொலைகாரனாக மாற்ற முயற்சிக்கலாம். அண்ணன்கள் ஜாக்கிரதை. ஏனெனில் தங்கச்சிக்காக அண்ணன் எத்தனை கொலை வேணும்னாலும் பண்ணலாம்.

படத்தின் ஆரம்பத்தில் சசிகுமாரின் தாய் தற்கொலை செய்துகொள்ளும் காட்சி ஒருகணம் உலுக்கியது. மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும் படி ஒன்றுமே இல்லை. சசிகுமாருக்கு இருக்கும் நெருக்கடியில் “கொடிவீரன்” நிச்சயமாக அவருக்கு மேலும் நெருக்கடியாக அமைந்து விட்டதை நினைக்கும் போது, சொல்ல வார்த்தைகள் இல்லை. தயவு செய்து இன்னொரு முறை தெரிந்தே முத்தையாவிடம் தலையைக் கொடுத்து விடாதீர்கள் சசிகுமார்.

மற்றபடி படத்தில் நடித்தவர்களைப் பற்றியோ, தொழிற்நுட்பக் கலைஞர்களைப் பற்றியோ குறை கூற ஒன்றுமில்லை. எல்லோருமே தங்களுக்கு தந்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக பால சரவணனின் காமெடி படத்தின் கொலைகளுக்கு நடுவே கொஞ்சம் ஆறுதல் தரும்.

ஒருவேளை விஜய் சேதுபதியின் “கருப்பன்” வருவதற்கு முன்பு வந்திருந்தாலாவது சசிகுமாருக்கு நல்லது செய்திருப்பான் “கொடிவீரன்”!