full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

தீவுகளையெல்லாம் சிங்கப்பூராக மாற்றும் திட்டத்துடன் மோடி

குஜராத் சட்டசபைக்கு வருகிற 9,14-ந் தேதிகளில் 2 கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே இருப்பதால் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

பிரதமர் மோடி நேற்றும் இன்றும் குஜராத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

நேற்று நர்மதா நதிக் கரையில் அமோத் சர்க்கரை ஆலை அருகில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அப்போது மும்பை- அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை எதிர்க்கும் காங்கிரசை கடுமையாக தாக்கிப் பேசிய அவர், “மும்பை, அகமதாபாத் இடையேயான அதிவேக புல்லட் ரெயில் திட்டத்தை மத்திய அரசும் ஜப்பான் நாட்டு நிறுவனமும் இணைந்து செயல்படுத்துகிறது. இதன்மூலம் குஜராத்துக்கு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பரூச் பகுதி மக்களுக்கு எவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதற்கு ஜப்பானில் இருந்தா சிமெண்ட் வருகிறது? இரும்பு, தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள். இவை எல்லாம் இந்தியாவில் இருந்து தானே வருகிறது. நாம் அதை ஜப்பானிடம் இருந்தா வாங்குகிறோம், இல்லையே. இது மிகப்பெரிய ஒப்பந்தம் அல்லவா?

முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் அரசும் இந்த திட்டத்தை கொண்டு வர விரும்பியது. ஆனால் அவர்களால் கொண்டுவர முடியவில்லை. காங்கிரஸ் அரசு அதற்கு அதிக செலவாகும் என்பதால் புறக்கணித்துவிட்டது. இதனால் அந்த திட்டத்தை விரும்பவில்லை.

இப்போது புல்லட் ரெயிலை காங்கிரஸ் எதிர்க்கிறது. புல்லட் ரெயிலை எதிர்ப்பவர்கள் மாட்டு வண்டியில் போகட்டும். அதுபற்றி எனக்கு கவலை இல்லை.

நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குஜராத் மக்களுக்காகவும், இந்த மாநிலத்துக்காகவும் எந்த நன்மையும் செய்யவில்லை. மத்தியில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்பும், நான் குஜராத் முதலமைச்சராக இருந்த போதும் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கட்ச் மற்றும் பரூச் மாவட்டங்களில் அதிக அளவில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குஜராத்தில் உருவாகும் ஒற்றுமை சதுக்கத்தில் உலகில் மிகப்பெரிய சர்தார் வல்லபாய் பட்டேலின் உருவச்சிலை நிறுவப்படுகிறது. இதுவும் வளர்ச்சித் திட்டம்தான். இதன்மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர முடியும்.

குஜராத் கடல் பகுதியில் 1,300க்கும் மேற்பட்ட சிறு சிறு தீவுகள் திட்டுகள் உள்ளன. அவைகள் அனைத்தும் சிங்கப்பூரை விட பெரியவை. அவைகளை சிங்கப்பூர் போல் மாற்றும் திட்டம் உள்ளது. அதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். எனவே நாளை குஜராத்தை சிறந்த மாநிலமாக மாற்ற பா.ஜனதாவுக்கு வாக்களியுங்கள்.” என்று பேசினார்.