full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

“ரிலீஸுக்கு பிறகும் விவாதிக்க வைக்கும் கதைகள் தான் எனது தேடல்” – மனம் திறக்கும் கதிர்”

மதயானைக்கூட்டம் படத்தில் அறிமுகமான கதிர், தனது முதல் படத்திலேயே கவனிக்க வைத்தவர். அடுத்தடுத்து கிருமி, விக்ரம் வேதா என முக்கியமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தன்னை அழுத்தமாக பதிய வைத்த கதிர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வம் டைரக்சனில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தனது திரையுலக வாழக்கையில் திருப்புமுனை தரப்போகும் படமாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தை மிகவும் எதிர்பார்க்கும் கதிர். படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தப்படம் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார்.

“பரியேறும் பெருமாள் படம் நானாக தேடிப்போய் வாங்கிய வாய்ப்பு. நண்பர் ஒருவர் மூலமாக இயக்குனர் மாரி செல்வத்திடம் இப்படி ஒரு கதை இருக்கிறது என கேள்விப்பட்டதும் மறுநாளே அவரை தேடிப்போய் நின்றேன்.. அவருக்கும் நான் சரியாக இருப்பேன் என பட்டது. இந்தப்படத்தில் ஒரு நிஜ வாழ்க்கை இருக்கிறது.. அது பிரெஷ்ஷாக இருக்கிறது.. அதனாலேயே இந்தப்படத்தில் என் நடிப்பை விதவிதமாக வெளிப்படுத்த நிறைய இடம் இருந்தது.

திருநெல்வேலியில் 47 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.. மாலையில் கூட ஓய்வெடுக்க நேரம் இருக்காது. அந்த சமயத்தில் தான் ஒரு கி.மீ தூரத்திற்கும் அதிகமாக ஓடுவது குதிப்பது, கீழே விழுவது ஆகிய காட்சிகளை படமாக்குவோம்.. மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி நடந்து வருவோம் இல்லையா அந்த நடை தான் எனக்கு ஒய்வு நேரம் என்பதே. இதுவாவது பரவாயில்லை.. மொட்டை வெயிலில் பொட்டல் வெளியில் நடக்கும் ஷூட்டிங்கில் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும் என்றாலும் மரத்தை தேடி போக வேண்டும். அதற்கும் ஒரு மைல் நடக்க வேண்டும்.. அப்படி நடந்து களைப்படைவதற்கு பதிலாக வெயிலே பெட்டர் என உட்கார்ந்து விடுவேன்..

என்னுடன் நடித்த நாய் கருப்பி, வேட்டை நாய் ரகம்.. பார்க்க பயங்கரமாக இருந்தாலும் பாசம் காட்டுவதிலும் அசர வைத்துவிடும். ஆரம்ப நாட்களில் வேட்டைக்குத்தான் போகிறோம் என நினைத்துக்கொண்டு எங்களுடன் துள்ளிகுதித்து ஓடியது. அப்புறம் நான்கு நாட்களில், அதற்கே ஷூட்டிங் எடுக்கிறார்கள் என தெரிந்து, ஆக்சன் கட்டிற்கு ஏற்ற மாதிரி நடிக்க பழகி விட்டது. நாய்க்கு இணையாக வேகமாக ஓடி ஓடி கடைசி ஒரு வாரம் எனது முட்டிக்கு கட்டுப்போட்டுக்கொண்டால் தான், நடக்கவே முடிந்தது.

கதாநாயகன் எந்த மன நிலையில் இருக்கிறான் என்பதை உணர்ச்சிகரமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு காட்சி. அதற்காக இரண்டு பக்கமும் பரபரப்பாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும், சென்டர் மீடியன் இல்லாத திருநெல்வேலி ஹைவே ரோட்டில், திடீரென நடுவில் உட்கார்ந்து விடுவது போல ஒரு காட்சியை படமாக்கினார்கள். எந்த வித திட்டமிடலும் இல்லாமல் திடீரென எடுக்கப்பட காட்சி அது. ஏதோ ஒரு வாகனம் எதிர்பாராமல் ஓவர்டேக் பண்ணுவதற்காக சற்றே ஏறி வந்திருந்தாலும் என் கதை முடிந்திருக்கும்.. எப்படி அந்த காட்சியில் நடித்து முடித்தேன் என்பதே தெரியவில்லை. ஆனால் அன்று இரவு முழுதும் என்னால் தூங்கவே முடியவில்லை. அந்த பாதிப்பிலிருந்து மீளவே ஒருநாள் ஆனது. இனி அப்படி ஒரு காட்சியில் நடிக்கவே மாட்டேன்.

வழக்கமான பார்முலாவில் கடகடவென படங்களில் நடித்து விட்டுப் போகாமல் எதற்காக இப்படி மெனக்கெடுகிறீர்கள் என பலரும் கேட்கிறார்கள். பத்துப்படம் தான் பண்றோம்.. ஆனால் ஏதோ ஒருவிதத்துல புதிதாக பண்ணனும்.. அந்தப்படம் ரிலீசான பின்னாடி அப்டியே மறந்து போய் விடாமல், ரசிகர்களை கொஞ்ச நாளாவது படத்தை பற்றி விவாதம் பண்ண வைக்கணும்.. அதனால் தான் பார்த்து பார்த்து கதைகளை தேர்வு செய்கிறேன்..

அடுத்து வெளியாக இருக்கும் ‘சிகை’ படத்தில் கூட வித்தியாசமான கதைக்களமும் கேரக்டரும் தான். அதில் நான் நடித்துள்ள இரு வித கெட்டப்புகளில் முக்கியமான கெட்டப் ஒன்று மட்டும் நாற்பது நிமிடம் இடம்பெறும்.. அது படத்தைப்பற்றி, என்னைப் பற்றி நிறைய நாள் பேசவைக்கும்.

தற்போது குமரன் என்பவர் டைரக்சனில் ஒரு படம் நடித்து வருகிறேன். விக்ரம் வேதாவுல கிடைச்ச மாதிரி ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துற கேரக்டர்கள் கிடைச்சா இரண்டு ஹீரோக்களில் ஒருவராகவும், ஏன் குணசித்திர வேடத்திலும் நடிக்கவும் கூட தயங்கமாட்டேன்..

இயக்குனர் ராம் படம் பார்த்துவிட்டு, படம் ரிலீசானதும் கமர்ஷியல் வேல்யூ உள்ள நடிகரா மாறுவீங்க என்று சொன்னார். இதைவிட பெரிய பாராட்டு என்ன வேண்டும்..? மணிரத்னம் சார் டைரக்சனில் மல்டி ஸ்டாரர் படமாக உருவாகியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ படம் இன்று வெளியாகி இருந்தாலும் கூட, ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மீதும் ரசிகர்கள் மீதும் எங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையில் தான் இந்தப்படத்தை ரிலீஸ் செய்திருக்கிறோம்” என்கிறார் கதிர் கண்களில் நம்பிக்கை மின்ன..