full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

எதிர்காலத் தலைமுறையின் வாழ்வை முடக்கும் திட்டம் நீட் : தங்கர்பச்சான்

நீட் தேர்வு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பாஜக கட்சியின் நேர்மையற்ற அரசியல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்திற்கு இழைத்து வந்த துரோகத்திற்கும், அநீதிக்கும் நாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.

இதுவரை தங்களுக்கு எதிராக எது நடந்தாலும் அனைத்தையும் சகித்துக் கொண்ட மக்களும், நமக்கு இதில் என்ன பலன் கிடைக்கும் என்று நடந்து கொண்ட அரசியல் கட்சிகளும் இனியாவது மாற வேண்டும்.

தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் வாழ்வை முடக்கும் அடுத்தத் திட்டங்களில் ஒன்று தான் “நீட்” தேர்வு. இந்த சதியை மாணவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இப்போது அவர்களுக்கு பக்க பலமாக இருந்து இனி எக்காலத்திலும் தமிழகத்திற்குள் அனுமதிக்காத முறையில் சட்டத்தை உருவாக்கி மாநில அரசின் உரிமையை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. இதை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு போராட்டம் நடத்தி வேலை நிறுத்தம் செய்து தமிழக மக்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் பகையை மறந்துவிட்டு ஓரணியில் திரண்டு சாதித்துக் காட்ட வேண்டும்.

மாணவர்களும், இளைஞர்களும் காலம் தாழ்த்தாமல் இந்தக் கோரிக்கையை அரசியல் கட்சிகளுக்கும், மக்களுக்கும் உடனே விடுக்க வேண்டும்.

இதைத் தவிர்த்து ஒவ்வொருவரும் தனித்தனியாக போராட்டம் நடத்தினால் எக்காலத்திலும் நம் உரிமையை பெற முடியாது. எனவே தமிழக மக்கள் அனைவரும் சாதி, மதம், மொழி, இனம், கட்சி பாகுபாடு கடந்து நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கட்சிகளையும் ஓரணியில் திரள கேட்டுக்கொள்வோம்! நமது உரிமையை நிலைநாட்டுவோம்!.” என்று குறிப்பிட்டுள்ளார்.