full screen background image
Search
Thursday 25 April 2024
  • :
  • :
Latest Update

நெஞ்சில் துணிவிருந்தால் – விமர்சனம்!

வலுவான கதைதளத்துடனும், ஆழமான உறவுப் பின்னல்களையும் கொண்டு படம் செய்யக் கூடிய இயக்குனர் சுசீந்திரனின் மேல் நமக்கிருக்கும் அதீத எதிர்பார்ப்பை இந்த “நெஞ்சில் துளிவிருந்தால்” அசைத்துப் பார்க்கிறது. வெண்ணிலா கபடிக் குழு தொடங்கி மாவீரன் கிட்டு வரையிலாயிலான (ராஜபாட்டை நீங்கலாக) அவரது படங்கள் போலவே இதிலும் ஒரு களம் இருக்கிறது.

நட்பு, குடும்பப் பாசம், மருத்துவப் படிப்பு மோசடி என வலுவான ஒரு களம் இருந்தும் இம்மூன்றில் எதை அழுத்தமாகக் கையாளலாம் என்பதில் இயக்குனருக்குக் குழப்பம் இருந்ததாகவேத் தெரிகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதது போல் நகரும் காட்சிகள் எந்த இடத்திலும் நம்மை படத்தோடு ஒன்ற விடவே இல்லை.

சந்தீப் கிஷன் தங்கையை காதலிக்கும் விக்ராந்த். அந்தக் காதலுக்கு சந்தீப் வீட்டில் எதிர்ப்பு, கூடவே சந்தீப்பும் எதிர்க்கிறார். இதற்கிடையில் விக்ராந்திற்கு இருக்கும் பல விரோதிகளில் யாரோ ஒருவர் விக்ராந்தை கொலை செய்ய முயல்கிறார். அதேநேரத்தில், எங்கேயோ நடந்த பிரச்சனைக்கு விக்ராந்தை போலீஸ் தேடிக்கொண்டிருக்கிறது. இதைப் பயன்படுத்தி விக்ராந்தை போலீசிடம் காட்டிக் கொடுக்கிறார் சந்தீப்.

விக்ராந்தை ஏன் சந்தீப் போலீசிடம் காட்டிக்கொடுத்தார் என்பதும், விக்ராந்தை ஏன் அந்த மர்ம கும்பல் கொலை செய்ய முயற்சித்தது என்பதும், விக்ராந்தும், சந்தீப் தங்கையும் சேர்ந்தார்களா என்பதே மீதி கதை.

சந்தீப் கிஷன் நிஜமாகவே நன்றாக நடிக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் கழுத்து நரம்பு புடைக்க சந்தீப் ஓடிவரும் காட்சிகள் சான்று. விக்ராந்த்திற்கு இதில் ஒன்றும் பெரிய வேலை இல்லை. இதுபோன்ற வழக்கமான கதாபத்திரங்களைத் தவிர்த்துவிட்டு தனிக்கதாநாயகனாக நடிப்பது அவருக்கு நல்லது. ஹீரோயின், சோ சாரி மெஹரின். சூரிக்கான பங்கு படத்தில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை.

வில்லன் ஹரிஷ் உத்தமன் வழக்கமான அண்டர்கிரவுண்ட் கூலிப்படை தாதா. மிகவும் கொடூரமான வில்லனாகக் காட்ட முனைந்திருந்தாலும், பல சினிமாக்களில் பார்த்த அதே லுக், அதே வில்லனிசம்.

டி.இமானின் “ரயில் ஆராரோ”, “எச்சச்ச எச்சச்ச” என “வழக்கமாக” கொஞ்சம் நாள் பண்பலைகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒலிக்கும். பின்னணி இசைக்கு இருக்கவே இருக்கிறது பாடல்களின் ஒலித்துணுக்குகள்.

சுசீந்திரன் மீதிருக்கும் எதிர்பார்ப்போடு போகாமல், வழக்கமான ஒரு தமிழ்ப்படம் பார்த்தால் போதும் என்று திரையரங்கம் நுழைந்தால் “நெஞ்சில் துணிவிருந்தால்” சோதிக்காது.