full screen background image
Search
Friday 29 March 2024
  • :
  • :
Latest Update

பொன்மகள் வந்தாள்

 

 

 

ஜே ஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா, பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் இந்திய திரையுலகில் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் படமாக அமைந்துள்ளது. மே 29-ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகும் இந்தப் படம் குறித்து ஜோதிகா கூறியதாவது:

இது ஒரு சமூக அக்கறையுள்ள கதை. த்ரில்லர் படம் என்பதால் என்ன சமூக அக்கறை என்பதை சொல்ல முடியாது. இந்தப் படத்தில்  5 இயக்குநர்களுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். கடந்த படத்தில் ரேவதி மேடம், ஊர்வசி மேடம் இந்தப் படத்தில் பார்த்திபன் சார், பாக்யராஜ் சார், தியாகராஜன் சார் ஆகியோருடன் நடித்தது மறக்க முடியாது. அனைவரிடமும் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அவர்கள் எப்படி தங்களுடைய கதாபாத்திரத்துக்கு தயார் செய்து கொள்கிறார்கள், நீளமான வசனத்தை எப்படி சரியாக உச்சரித்து நடிக்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை ஒரு நடிகையாக கற்றுக் கொண்டேன்.

இந்தப் படத்தில் 3 -4 நீளமான வசனக் காட்சிகள் இருக்கிறது. 3 மாதத்துக்கு  முன்னாடியே படத்தின் ஸ்கிரிப்ட் புக்கை இயக்குநர் கொடுத்துவிட்டார். பார்த்திபன்  சாருடன் நின்றுக் கொண்டு வசனம் பேசி நடிப்பதே சவால்தான்.  ப்ரட்ரிக் எனக்கு நிறைய நேரம் கொடுத்திருந்தார். நான் நடித்த படங்களில் நிறைய முன் தயாரிப்பு செய்து நடித்த படம் இது தான். இந்தக் கதையை முதல் முறையைக் கேட்ட போதே கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக உழைப்பைப் போட்டுள்ள படம் இது தான். ஏனென்றால், இந்தப் படத்தின் கதை எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது.

 

 

இந்தப் படத்தில் வெண்பா என்ற வக்கீலாக நடித்துள்ளேன். உயர்நீதிமன்ற வக்கீலாகவோ, உச்சநீதிமன்ற வக்கீலாகவோ நடிக்கவில்லை. ஊட்டியில் ஒரு சின்ன நீதிமன்றத்தின் வக்கீலாக நடித்துள்ளேன். முதல் முறையாக வக்கீல் உடையணியும் போது ரொம்ப வலுவாக உணர்ந்தேன். இந்த மாதிரியான கதைக்களம் கொண்ட படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஏமாற்ற முடியாது. வக்கீல் உடையணிந்து வசனங்கள் பேசி நடிக்க வேண்டும். வார்த்தைகளின் பலம் இதில் இருக்கும். வக்கீல் கதாபாத்திரத்துக்காக 2டி ராஜசேகர் ஒரு வக்கீல் என்பதால் அவரிடம் நிறையப் பேசினேன். நிறைய படங்கள் பார்த்தேன். பொதுமக்கள் வக்கீலை எப்படிப் பார்க்கிறார்கள் உள்ளிட்ட சில கேள்விகளை இந்தப் படத்தில் முன்வைத்துள்ளேன். அது படத்தின் ஹைலைட்டாக இருக்கும்.

நான் ஒரு வட இந்திய பெண் என்று யாருமே யோசிப்பதில்லை. வசனங்களாக எழுதிக் கொடுக்கிறார்கள். 35 பக்கம் கொண்ட புத்தகத்தை தினமும் இயக்குநர் ப்ரட்ரிக் கையில் பார்க்கலாம். காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை 2 பேர் பேசிக் கொண்டே இருபப்தை படமாக்கிக் கொண்டிருப்பார். அவ்வளவு வசனங்கள் பேசியிருக்கிறோம். பாக்யராஜ் சார், பார்த்திபன் சார் இருவரும் ஒரு முறை படித்துவிட்டு பேசிவிடுவார்கள். ஆனால், நான் 3 மாதங்களுக்கு முன்பே முழுக்கதையையும் வாங்கி என் வசனங்களை முழுமையாக மனப்பாடம் செய்து பேசியுள்ளேன். முக்கியமாக இந்தப் படத்துக்கு நானே டப்பிங் செய்துள்ளேன். படப்பிடிப்பு வந்து பேப்பர் பார்த்து என்னால் வசனம் பேசி நடித்திருக்க முடியாது.

இப்போது எப்படி சிவாஜி சார், பாக்யராஜ் படங்கள் குறித்து பேசுகிறோமோ அப்படி 20 ஆண்டுகள் கழித்து சில படங்கள் குறித்து பேச வேண்டும். அதை மனதில் கொண்டே படங்கள் ஒப்புக் கொள்கிறேன். சில படங்கள் வெற்றியடையும், சில படங்கள் வெற்றியடையாது.  ஆனால் எனது பயணம் இதே வெளியில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.  இப்போது நிறைய வலுவான கதைகள் வருகிறது. இந்தப் படத்துக்குப் பிறகும் கூட 3 கதைகள் தேர்வு செய்து வைத்துள்ளேன். என் படங்களை பெண்கள் பார்க்கும் போது பெருமையாக நினைக்க வேண்டும்.  பெண் கதாபாத்திரத்தை மையாக வைத்து நான் நடித்த படங்கள் அனைத்துமே ஆண்களால் எழுதப்பட்டது தான். நான் இப்போது எல்லாம் ஒரு ஹீரோவாக உணர்கிறேன். இந்தாண்டு எனக்கு 41 வயது ஆகிறது. 41 வயதில் ஹீரோவாக உணர்வது அரிதானது என நினைக்கிறேன்.

 

 

அனைத்து படங்களிலுமே என் கதாபாத்திரத்தைப் பார்த்து பெண்கள் பெருமையடைய வேண்டும் என நினைக்கிறேன்.  நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களை ஹைலைட் பண்ணி படங்கள் பண்ணவேண்டும். நிறைய ரசிகர்கள்  படத்தைப் பார்ப்பார்கள். ஆகையால், சமூக அக்கறையுள்ள படங்களாக தேர்வு செய்து நடிக்கிறேன்.  கமர்ஷியல் படங்களில் பாட்டு, காதல் காட்சிகள் என்பதைத் தாண்டி வேறு எதுவும் பண்ண முடியாது. இந்த மாதிரி படங்களில் வித்தியாசமான களங்களில் நம்மை காண முடியும். நான் கமர்ஷியல் படங்களிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என்னால் முடிந்த அனைத்தையும் இப்போது தான் செய்து வருகிறேன். அந்த சுதந்திரம் இப்போது இருக்கிறது.

‘பொன்மகள் வந்தாள்’ மாதிரியான படங்கள் எனக்கு வருவதில் மகிழ்ச்சி. நான் எந்தவொரு இயக்குநரிடமும் இந்தமாதிரி படங்கள் பண்ண வேண்டும் என்று கேட்கவில்லை. தானாகவே அமைகிறது. கமர்ஷியல் படங்கள் நிறைய வரவில்லை. அப்படி வந்தால் கூட, என் பசங்களை வீட்டில் விட்டுவிட்டு பாட்டு பாட, நடனமாட போக விரும்பவில்லை.  நிஜ வாழ்க்கையில் இருப்பது போலவே பெண்கள் படங்களிலும் வலுவாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஏனென்றால் நிஜவாழ்க்கையில் நிறைய பணிகளை பெண்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இப்போது 2 குழந்தைகளுக்கு தாயாக அதிகமான பொறுப்புள்ள பெண்ணாக இருக்கிறேன். அவர்களுக்கு வெறும் அட்வைஸ் மட்டும் செய்யாமல், என் படங்கள் மூலமாக அவர்கள் நான் எப்படி என தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். குடும்பப் பெண்ணாக வித்தியாசமான பரிமாணங்களில் காண முடியும். நிஜ வாழ்க்கையில் நான் எப்படியிருக்கிறேனோ, அப்படியே திரையிலும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எங்களுடைய நிறுவனம் தயாரிப்பில் நடிக்கும் போது வசதியாக இருக்கிறது. வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களையும் கவனித்துக் கொண்டு சினிமாவில் நடிக்க வேண்டும். ஆகையால் தான் 2டி நிறுவனம் எனக்கு சரியாக பொருந்துகிறது. 6 மணிக்கு பேக்-அப் பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன். சில படங்கள் எந்தளவுக்கு பொதுமக்கள் வந்து பார்ப்பார்கள் என்பது தெரியாது. ஆகையால் சொந்த பணத்தையே போட்டு தயாரித்துவிடுகிறோம். ’36 வயதினிலே’ படத்துக்குப் பிறகு நிறைய பெண்களை மையமாக கொண்ட படங்கள் வந்தது. அதை தயாரிப்பது சில பேர் மட்டுமே.

 

 

இப்போது நிறையப் பேருக்கு ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்துள்ளது. கடந்த 3 மாதங்களாக நிறையப் பேர் வீட்டில் அமர்ந்து படங்கள் தான் பார்க்கிறார்கள். ஆகையால் ஓடிடி ப்ளாட்பார்ம் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். திரையரங்கில் வெளியாகும் போது அனைத்து தரப்பு மக்களும் பார்ப்பார்கள் என்பதை மறுக்கவில்லை. திரையரங்கில் படம் பார்க்கும் போது கைதட்டி ரசிப்பதை எல்லாம் ஒரு நடிகராக உணர முடியும். இப்போதுள்ள சூழலில் அனைத்து தரப்பும் நன்மையோ அதை தான் கவனிக்க முடியும்.  கரோனாவால் மட்டுமே இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிடுகிறோம். இப்போது சூழல் அந்த மாதிரி இருக்கிறது. நடிகர்கள் – இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு திரையரங்கம் என்பது ஒரு கொண்டாட்டம் தான். ஓடிடி ப்ளாட்பார்ம் என்பது கதையை மையம் கொண்ட படங்களுக்கு ஒரு அருமையான தளம் என நினைக்கிறேன். பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு திரையரங்கில் ரசிகர்கள் வரவு குறைவு தான். அதில் பலர் ஆண்கள் தான். ஓடிடி தளத்தில் பெண்களை மையம் கொண்ட படங்களுக்கு நல்ல ஆதரவும், மரியாதையும் இருக்கிறது.

சினிமாவின் அடுத்த கட்டம் தான் ஓடிடி. கண்டிப்பாக சினிமாவை ஓடிடி அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தும். சில ஆண்டுகளாக கதைகளை மையப்படுத்தி படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஹீரோ படத்தோடு ஒப்பிடுகையில் நாயகியை மையப்படுத்திய படங்களுக்கு நிறையப் பேர் செல்ல மாட்டார்கள். வழக்கமான என் படங்களுக்கான ரசிகர்களை விட, இப்போது அதிகமான மக்களை, ரசிகர்களை இந்தப் படம் சென்றடையும். என் படங்கள் இனிமேல் ஓடிடி-யில் தான் வரும் என்று சொல்லவில்லை. நிலைமை சரியாகி திரையரங்குகள் திறந்தவுடன் அனைவருமே படங்கள் பார்க்கப் போகிறார்கள். இப்போதைக்கு இந்த தீர்வு அவ்வளவே. கரோனா பிரச்சினை முடிந்தவுடன், நிறைய ஹீரோக்கள் படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. அப்படியிருக்கும் போது ‘பொன்மகள் வந்தாள்’ படத்தை எந்த இடைவெளியில் வெளியிடுவது. அதற்கு 2 வருடங்களாகிவிடும். அந்தப் பிரச்சினை வேண்டாம் என்று தான் ஓடிடியில் வெளியிடுகிறோம்.

 

கரோனா பிரச்சினை முடிவடைந்து அனைவரும் மீண்டும் சகஜநிலைக்கு திரும்புவோம். அதுவரை அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். வெளியே செல்லும் போது கூட பாதுகாப்பாக மாஸ்க் அணிந்துச் சொல்லுங்கள். இந்த தருணத்தில் கூட நமக்காக தொடர்ந்து உழைத்து வரும் மருத்துவர்கள், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள் என அனைவருக்கும் தலை வணங்குகிறேன். உங்களுடைய அயராத உழைப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. விரைவில் அனைத்தும் சீராக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இது எனது 49-வது படம். அடுத்து வரவுள்ள 50-வது படம் குறித்து விரைவில் அறிவிக்கிறேன். அதுவும் உங்களை கண்டிப்பாக மகிழ்விக்கும். இவ்வளவு ஆண்டுகளாக எனக்கு உறுதுணையாக இருக்கும் பத்திரிகை நிருபர்கள், இணையதளம், வானொலி, தொலைகாட்சி உள்ளிட்ட அனைவருக்கும் என் நன்றி. எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என் கணவர் சூர்யாவுக்கு ஸ்பெஷல் நன்றி.