full screen background image
Search
Friday 26 April 2024
  • :
  • :
Latest Update

காண்டான தயாரிப்பாளர் சங்கம்.. சிக்கலில் சிம்பு, வடிவேலு, திரிஷா..

சமீபத்தில் “அண்ணாதுரை” பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஞான வேல் ராஜா,
“தயாரிப்பாளர் சங்கத்துக்கு 3 புகார்கள் வந்துள்ளன, தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்திய அந்த நடிகர்கள் மீது நடவடிக்கை
எடுக்கப்படும்’’ என்று பூடகமாக தெரிவித்திருந்தார்.

அனைவரும் அப்போதே அது சிம்பு, வடிவேலு தான் என்று யூகிக்க ஆரம்பித்தனர். இப்போது அந்த யூகம் சரிதான் என்று
நிரூபணம் ஆகி உள்ளது. ஆனால் சிம்பு, வடிவேலுவோடு நடிகை த்ரிஷாவையும் கட்டம் கட்டியுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுத்தியதாக வந்துள்ள புகார்களின் அடிப்படையில், அதன்மேல் விளக்கம் அளிக்க நடிகர் சிம்பு,
வடிவேலு மற்றும் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சிம்பு நடித்த ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் எதிர்பார்த்தபடி அமையவில்லை. இந்த நிலையில், படத்தை
தயாரித்த மைக்கேல் ராயப்பன் சிம்பு மீது அளித்திருக்கும் புகாரில்,

“சிம்பு இந்த படத்தில் நடிக்க முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. பாதி படம் முடிந்திருந்த நிலையில் இனி நடிக்க முடியாது,
இதுவரை நடித்த காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள். மீதியை 2-ம் பாகமாக வெளியிடுங்கள் என்று கூறிவிட்டார். இதனால் 18 கோடிவரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும்” என்று மைக்கேல் ராயப்பன் குறிப்பிட்டு இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கிய வடிவேலு, இயக்குனர் ‌ஷங்கர் தயாரிப்பில் “இம்சை அரசன் 24-ம் புலிகேசி” படத்த்தில் நடிக்க ஒப்பந்தமானார். படப்பிடிப்பு தொடங்கி, பிரம்மாண்ட அரங்குகள் எல்லாம் போடப்பட்ட நிலையில் வடிவேலு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து இயக்குனர் ‌ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்து இருக்கிறார். அதில்,

“இந்த படத்துக்காக ரூ.3 கோடி செலவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பெருமளவில் பணம் செலவு செய்து படப்பிடிப்பு
நடத்தப்பட்டது. இந்த நிலையில் அவர் தனிப்பட்ட காரணத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். இதனால்
பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு நடிகர் சங்கம் மூலம் தீர்வு கண்டு தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

விக்ரம் நடிக்கும் ‘சாமி 2’ படத்தில் திரிஷாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரம் என்பதால் திடீரென்று படத்திலிருந்து விலகினார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து நடிகர் சங்கத்துக்கு கொடுக்கப்பட்ட புகாரில், “திரிஷா இந்த படத்தில் இருந்து விலகியதால் படத்தின் கதையையே
மாற்றும் நிலை உள்ளது. இதனால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இப்போது நடிகர் சங்கத்துக்கு வந்திருக்கும் மேற்கண்ட புகார்களின் அடிப்படையில் சிம்பு, வடிவேலு மற்றும் திரிஷா ஆகியோருக்கு நடிகர் சங்கம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அவர்கள் விளக்கம் அளித்த பிறகு தவறு யார்மீது இருகிறதோ அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.