full screen background image
Search
Tuesday 23 April 2024
  • :
  • :
Latest Update

பரோல் கேட்ட சசிகலா மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதையடுத்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிறையில் இருக்கும் சசிகலா சார்பில், சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகரிடம் நேற்று ஒரு மனு வழங்கப்பட்டது.

அதில், தனது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை நேரில் சென்று பார்க்க 15 நாட்கள் அவசர “பரோல்” வழங்குமாறும் கோரி இருந்தார்.

அந்த மனுவின் இன்னொரு பிரதி சென்னை நகர போலீஸ் கமிஷனருக்கும் அவர் அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தங்கி இருக்கும்போது சசிகலாவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்காக இந்த தகவல் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

சசிகலாவுக்கு “பரோல்” கிடைத்துவிடும் என்று அவருடைய குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சசிகலாவின் பரோல் மனுவை பரிசீலனை செய்த பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறை தலைமை சூப்பிரண்டு சோமசேகர் திடீரென்று அதை நிராகரித்து உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், “சசிகலாவின் “பரோல்” மனுவில் விவரங்கள் முழுமையாக இடம் பெறவில்லை. விவரங்களில் சில குறைபாடுகள் இருக்கின்றன. அதனால் மனுவை நிராகரிக்கிறேன். எனவே தேவையான பிரமாண பத்திரங்கள் மற்றும் முழு விவரங்களுடன் மீண்டும் புதிதாக “பரோல்” மனுவை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

சசிகலா சார்பில் புதிய “பரோல்” மனு தாக்கல் செய்தால், அந்த மனு தமிழ்நாடு போலீசாருடன் இணைந்து சிறை அதிகாரிகள் முழுமையான சட்ட பரிசீலனைக்கு உட்படுத்துவார்கள். தமிழ்நாடு போலீசார் தடையில்லா சான்றிதழ் கொடுத்தால், அதன் பிறகு சசிகலாவுக்கு பரோல் வழங்குவது குறித்து பெங்களூரு சிறை நிர்வாகம் முடிவு எடுக்கும். இந்த பணிகள் நிறைவடைய இன்னும் சில நாட்கள் ஆகிவிடும். அதனால் சசிகலாவுக்கு உடனடியாக பரோல் கிடைக்காது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.