full screen background image
Search
Friday 19 April 2024
  • :
  • :
Latest Update

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களுக்காக நடிகர் மோகன் எழுதியது.

திரையுலகிற்கு வருவதற்கு முன்பிருந்தே நான் எஸ்.பி.பி. அவர்களின் ரசிகன். பெங்களூருவில் இருந்த காலகட்டங்களில், அவரின் குரலும் பாடலும் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய பாடல்களைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். கல்லூரி வாழ்க்கையில், அவருடைய எத்தனையோ பாடல்கள் என் கல்லூரி வாழ்க்கையின் பலவற்றில் இரண்டறக் கலந்திருந்தது.
அப்போதெல்லாம், நான் சினிமாவுக்குள் வரவேண்டும் என்றோ நடிகனாவேன் என்றோ நினைத்ததில்லை. ஆனால் எப்போதும் எஸ்.பி.பி.யின் பாடல்கள் எனக்கு துணையாகவும் பொழுதுபோக்காகவும் உத்வேகம் கொடுப்பதாகவும் இருந்தன.

தெலுங்கில் எனது முதல் படமான ‘தூர்ப்பு வெல்லே ரயிலு’ (கிழக்கே போகும் ரயில் படத்தின் ரீமேக்) படத்துக்கு எஸ்.பி.பி சார்
தான் இசையமைப்பாளர். முள்ளப்புடி வெங்கடரமணா திரைக்கதையில் பாப்பு இயக்கத்தில் வெளியான அந்தப் படத்துக்கு இசையமைத்து, அனைத்து பாடல்களையும் பாடியிருந்தது எஸ்.பி.பி சார் தான். தமிழில், மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் நடித்தேன். அந்தப் படத்தில் ஜாக்கிங் செல்லும் போது வருகிற ‘பருவமே புதிய பாடல் பாடு’ என்ற பாடல், இன்று வரைக்கும் எல்லோருக்கும் பிடித்த பாடல். இப்படி நான் திரைத்துறைக்கு வருவேன் என்றோ எனக்குப் பிடித்த எஸ்.பி.பி.யின் பாடலுக்கு வாயசைப்பேன் என்றோ நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

 

என்னுடைய ஆரம்பக் கால படங்களில் ‘ஜூலி ஐ லவ்யூ’ பாடலும் ‘இளையநிலா பொழிகிறதே’ உள்ளிட்ட ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தின் எல்லாப் பாடல்களும் என்று என் திரைவாழ்விலும் எனக்காக, என் படங்களுக்காக தொடர்ந்து ஏராளமான பாடல்களைப் பாடியிருக்கிறார். தொழில்முறையிலும் இப்படியான இணைப்பு வந்திருந்தாலும் நான் எப்போதுமே எஸ்.பி.பி.யின் தீவிர ரசிகன்.

தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். என் மனமும் சிந்தனையும் அவரையே நினைத்துக் கொண்டிருக்கிறது. எஸ்.பி.பி.யின் இனிமையான குரலில் அமைந்த பாடல்கள் ஒவ்வொன்றும் சாகாவரம் பெற்றவை. பாடல்கள் மட்டுமல்ல. எஸ்.பி.பி. அவர்களே அத்தகையை பண்பான மனிதர்தான். எஸ்.பி.பி. அவர்கள் பூரண குணமடைந்து, இல்லம் திரும்பவேண்டும் என்று அவரை இதயத்தில் வைத்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறார்கள். அன்புள்ளம் கொண்ட எஸ்.பி.பி. அவர்கள் பூரண நலம் பெற்று, பழையபடி வலம் வரவேண்டும் என்று நானும் ஒரு ரசிகனாக பிரார்த்தனை செய்கிறேன்

நன்றி

வணக்கம்

மோகன்
திரைப்பட நடிகர்



Writer| Film Maker| Cinephile| Humanitarian| Indian