full screen background image
Search
Thursday 28 March 2024
  • :
  • :
Latest Update

வெட்டுவதும், குத்துவதும் தான் மண்வாசமா முத்“ஐயா”?

பாலிலிருந்து தண்ணீரை கூட பிரித்து எடுத்து விடலாம், ஆனால் இயக்குநர் முத்தையாவிடம் இருந்து குல பெருமையை பிரித்தெடுக்கவே முடியாது போல.

நான் பார்த்ததை, நான் வளர்ந்த விதத்தை படமாக்குகிறேன் பேர்வழி என்று முத்தையா எடுத்து வைத்திருப்பதெல்லாம் வகை தொகையில்லாத வெட்டுக்குத்து படங்கள் தான். வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல அவர் உருவகப்படுத்துகிற “வீர வம்ச” நாயகர்களை வைத்து அவர் முன் வைக்கும் பிரச்சாரம் என்பது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதற்குச் சமம்.

தொடர்ந்து முத்தையா இது தான் என் குல பெருமை என்று முறுக்கு மீசை, காவி கரை வேட்டி என முழுக்க முழுக்க பிற்போக்கான சித்தரிப்புகளுடனே வலம் வந்து கொண்டிருக்கிறார். முத்தையா உருவாக்குகிற கதை நாயகர்கள் படித்து முன்னேறுபவர்களாக இல்லாமல், “ஊரே” மதிக்கிற “வெட்டி” இளைஞனாக இருப்பார். மூட்டை தூக்கிக் கொண்டு, கோபம் வந்தால் யாரை வேண்டுமானலும் “குத்துகிற” இளைஞனாகவே இருப்பார். ஊருக்காக பலரை கொலை செய்பவராக இருப்பார். அம்மாவிற்காக, பாட்டிக்காக, மாமனாருக்காக, தங்கைக்காக யாருடைய தலையையும் வெட்டுபவராக இருப்பார்.

உறவுகளுக்காக வெட்டுவதும், குத்துவதும் தான் குலப்பெருமையா? பாசத்தின் அடையாளமா?

இப்படி வன்முறை வெறி பிடித்த ஒரு நாயகனை உறவுகளுக்கு மரியாதை தருபவராக சாயம் பூசி சந்தையில் இறக்கி விடுவது எப்படி “பெருமை” வகையைச் சாரும் என்பதை முத்தையா விளக்கினால் நல்லது. தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட குறியீடை புகுத்தும் முத்தையாவின் கொம்பு சீவும் வேலையை கவனமாக எதிர்கொள்ள வேண்டும் படித்த தமிழ் இளைஞர்கள்.

முத்தையா போன்ற இயக்குநர்கள் பேசும் பெருமையோ, அடையாளமோ எந்த வகையில் ஒரு பண்பட்ட சமுக மாற்றத்திற்கு வித்திடும் எனத் தேடினால் அது பூஜ்ஜியமாகவே இருக்கிறது. எதையெல்லாம் ஒழிக்க இம்மண்ணில் பெரியார் போராடினாரோ, அதை ஊட்டி வளர்க்கும் வேலையை திரைப்படத்தின் வாயிலாக நுணுக்கமாக செய்பவர்களில் ஒருவராக மட்டுமே முத்தையா என்கிற இயக்குநரை பார்க்க வேண்டியிருக்கிறது.

வெறும் கலாச்சார சீரழிவு என்ற தளத்தில் இருந்து மட்டுமே சினிமாவை அலசுபவர்கள் எல்லாம், மிகவும் வசதியாக இந்த “குல பெருமை” வழியாக வரும் சமூக சீர்கேடுகளையும் மறந்து விடுகிறார்கள். ஏற்கனவே இந்த சமூகத்தில் பின்தங்கிக் கிடப்பவர்களிடத்தில், ரத்தம் தோய்ந்த வாழ்க்கையை இதுதான் நம் பெருமை என பிரச்சாரம் செய்கையில் நேரும் விளைவுகளை யாரும் யோசிப்பதே இல்லை இங்கு.

இதோ மீண்டும் ஒரு “அதே” ரக படத்துடன் வருகிறார் முத்தையா. கடந்த படங்களில் எல்லாம் குறியீடுகளாய் தற்பெருமை பேசியவர், இந்த முறை தலைப்பிலேயே கொள்ளிக் கட்டையோடு வருகிறார். “எனது பெருமை நான் பேசுகிறேன்” என்று விளக்கம் தந்தாலும், இத்தகைய படங்கள் உளவியல் ரீதியாக வன்ம உந்துதல்களையே ஏற்படுத்தும் என்பதற்கு மறுப்பிருக்கிறதா? யாரிடமாவது.

இந்த சமூகம் ஆண்டாண்டு காலமாக பிண்ணி வைத்திருக்கிற இழிவிலிருந்து மக்களை மீட்டெடுக்க முடியாமல் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தொடர்ந்து பண்பாட்டுத் தளத்தில் இது போல பழைய பெருமைகள் பேசும் முத்தையா போன்ற நபர்களால் ஒரு மறைமுகமான வெறியூட்டுதல் நடந்துகொண்டே இருக்கிறது. அடுத்த தலைமுறையை வன்முறை குணமற்றவர்களாக, சாதி மத வெறியற்றவர்களாக வழி நடத்த வேண்டியதில் கலை, இலக்கிய பண்பாட்டு தளத்தில் இயங்குபவர்களுக்கு மாபெரும் பொறுப்பிருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களுக்கு இன்னும் கூட கூடுதல் பங்கிருக்கிறது.

இது எதையுமே உணராமல் வெறுமனே வெட்டுவதையும், குத்துவதையும் குலப் பெருமை என காட்டிக் கொண்டே இருந்தால் “அடையாளம்” கிடக்கும், பணம் கிடைக்கும். இந்த சமூகத்திற்கு ஒரு நன்மையும் நேரப்போவது இல்லை.