full screen background image
Search
Thursday 18 April 2024
  • :
  • :
Latest Update

காதல் திருமணத்தில் வெற்றிகண்ட பெண் தயாரித்துள்ள படம் ‘தொட்ரா’..!

J.S அபூர்வா புரடக்சன்ஸ் சார்பில் சந்திரா சரவணக்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘தொட்ரா. இந்தப்படத்தை இயக்குநர் கே.பாக்யராஜின் பாசறையில் பயின்ற மதுராஜ் என்பவர் இயக்கியுள்ளார்.
நடிகர் பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் படத்தின் கதாநாயகனாக நடிக்க, வீணா என்கிற புதுமுகம் கதாநாயகியாக நடித்துள்ளார்..
வீணாவின் அண்ணனாகவும், படத்தை தாங்கிக் கொண்டுபோகிற கேரெக்டரில் M.S.குமார் அறிமுகமாகிறார். இவர் வேறு யாருமல்ல, தயாரிப்பாளர் சந்திராவின் கணவர் தான்..
தொட்ரா படத்தில் கதைக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள M.S.குமார் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.
“படிக்கும் காலத்திலிருந்தே சினிமாவில் நடிக்கவேண்டும் என்பது என் கனவாக இருந்தது. கனவு என்பதைவிட அதை வெறி என்றே சொல்லலாம்.
என் அம்மா என் கனவுகளை அறிந்திருந்தாலும் அவர் சினிமா உலகின் அறிமுகம் இல்லதவராக இருந்தார். அதனால் இறக்கும் தருவாயில் தன் மருமகளை அழைத்து தன் மகனுக்காக படம் எடுக்கவேண்டும் என சத்தியம் வாங்கிக் கொண்டு இறந்துபோனார். என் மனைவி அந்த கனவுகளுக்கும், சத்தியத்திற்கும் தொட்ரா படத்தின் மூலம் உயிர் கொடுத்துள்ளார். நான் பழனியில் இருந்தபோது அங்கே உள்ளூர் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றியதால் இந்தப்படத்திற்காக கேமரா முன் நின்றபோது பெரிதாக பயம் ஏற்படவில்லை..
நாமதானே பணம் போடுறோம்? முதல் படத்திலேயே ஹீரோவாக நடித்தால் என்ன? என்ற கேள்விதான் இன்று நிறைய புதியவர்களின் தவறாக உள்ளது. நான் அந்த தவறை செய்யத் தயாராக இல்லை.
எனக்கு நடிக்க வரும் என்பதை மக்களுக்கு அல்ல.. இந்த திரையுலகிற்கு முதலில் சொல்லவேண்டும். படிப்படியாக திரையுலகின் மூலம் மக்கள் மத்தியில் என்னை பதிய வைக்க வேண்டும்.
 
ஒரு நல்ல நடிகனாக பெரிய இயக்குநர்களின் படங்களில் பேசப்படும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் அவ்வளவுதான் எனத் தெளிவாக தன் எதிர்காலத்தை ரூட் போட்டுக்காட்டியவர் மேலும் கூறியதாவது,
இயக்குநர் மதுராஜ் சொன்ன இந்தக்கதையில் எனது கேரக்டர் பிடித்திருந்தது. எனக்கு செட்டாகும் போலத் தோன்றியது. மற்றபடி கதைக்கு என்ன தேவைப்பட்டதோ அதை என்னிடமிருந்து வாங்கிக்கொண்டார் இயக்குநர் மதுராஜ்.
தொட்ரா படத்தை சினிமாத்தனம் இல்லாத சினிமா என்றுகூட சொல்லலாம். அந்த அளவுக்கு படத்தில் பாடல் காட்சிகளைத்தவிர அனைத்து காட்சிகளையுமே மிக இயல்பாக படமாக்கியுள்ளோம்.
காட்சிகள் தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக நிஜமான கோவில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களுக்கே சென்று மக்கள் அறியாமல் கூட்டத்தோடு கூட்டமாக கலந்து படமாக்கியது புதிய அனுபவமாக இருந்தது.
எனக்கும் ஹீரோ பிருத்விக்கும் சண்டைக்காட்சி ஒன்று இருக்கிறது. நிஜ வாழ்வில் இருவர் சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் அதில் நடித்துள்ளோம். கிட்டத்தட்ட நான் கலந்துகொண்ட 25 நாட்கள் படப்பிடிப்பிலும் சினிமா குறித்த பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிந்தது. எனக்கு ஜோடியாக மைனா சூசன் நடித்துள்ளார். அவர் முன்னாடி நடிப்பில் போட்டியெல்லாம் போடமுடியாது. கண்களாலேயே மிரட்டக்கூடியவர். படம் பார்க்கும்போது எங்கள் நடிப்பை நிச்சயம் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்.
தயாரிப்பாளர் நடித்தாலே என்னத்த பண்ணப்போறாங்க.. பணம் போட்டுட்டாங்கன்றதுக்காக நடிக்கத்தெரியாதவன்லாம் நடிக்க வந்து நம்மளை சாகடிப்பாங்க..
 
நாம பார்த்துத் தொலையணும் என்ற எண்ணம் எல்லோர் மனசிலும் இருக்கும். ஆனால் நான் உங்களை அப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மாட்டேன். நம்பலாம். இயக்குநர் பாக்கியராஜ் படம் பார்த்துவிட்டு இரவில் வீட்டிற்குச் சென்றபின் என்னை போனில் அழைத்து நன்றாக நடித்துள்ளீர்கள் எனப் பாராட்டினார்.
கதாநாயகி வீணாவை இயக்குநர் அடித்தார் என்று சொல்லப்படுவது ஓரளவு உண்மைதான். படம் பேசும் விசயம் ரொம்ப சென்சிட்டிவ்வானது. அதில் கதாநாயகியின் பாத்திரம் ரொம்ப முக்கியமானது. சீரியசான காட்சிக்களில் அவரது பங்களிப்பு மிக மிக அவசியம். கேரள நாயகி என்பதால் அர்த்தம் புரிந்து உச்சரிப்பதில் எமோட் செய்வதில் வீணா லேசாகத் திணறினார்.
அந்த ஒரு காட்சிக்கான ரியாக்ஷந்தான் அது. ஆனால் படம் முழுக்க அழகான நடிகையாக வருவார். முதல் படம் பாடம் என்பார்கள். போகப் போக பழகிக்கொள்வார்.
அவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும். பந்தா இல்லாத இயல்பான கதாநாயகி. இயக்குநரும் அப்படி செய்யக்கூடியவர் அல்ல. நேரம் விரயமானதால் ஏற்பட்ட கோபத்தில் தான் இயக்குநர் கோபப்பட்டார். எல்லோருமே இது அவரவர் படமாக நினைத்து உழைத்தனர். நாயகியும் அதன்பின் நிலைமையை உணர்ந்து தன்னை மாற்றிக்கொண்டார்.
என் மனைவி சந்திரா தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.. என்னுடைய ஆர்வத்திற்காகவும் எனது தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காகவும் தான் அனுபவம் இல்லாத இந்த துறையில் இறங்கினார்.. அதேசமயம் தன்னுடைய மற்ற தொழில்களில் தன்னிடம் பணிபுரிபவர்களை எப்படி ஆளுமையுடன் வேலைவாங்கி திறம்பட நடத்தி வருகிறாரோ, அதேபோல சினிமாவையும் எளிதாகக் கையாண்டுள்ளார்.
 
ஜாதிவிட்டு ஜாதி மாறி காதல் திருமணம் செய்தவர்கள் நாங்கள்.
சினிமாவா? ஐயோ வேண்டாம் எனக் கதறுகிற பெண்களுக்கு மத்தியில் என்னை சினிமாவில் ஆளாக்க துணை நிற்கும் என் காதல் மனைவிக்கு நன்றி என்கிறார் எம் எஸ் குமார்.
நான் மட்டுமல்ல என்னுடைய மகள் அபூர்வா சஹானாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
படத்தில் சிம்பு ‘பக்கு பக்குன்னு’ என்கிற ஒரு பாடலை பாடியுள்ளார். ஹீரோ பிருத்வி மூலமாக இந்த பாடலை பாடமுடியுமா என சிம்புவிடம் கோரிக்கை வைத்தோம். அவரும் தயங்காமல் மூன்று மணி நேரத்தில் பாடிக்கொடுத்து எங்களை ஆச்சர்யப்படுத்தி விட்டார்.
இந்தப்படத்திற்காக நூறு சதவீத உழைப்பைக் கொடுத்துள்ளோம். கஷ்டப்பட்டதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறேன். வெகு ஜனங்களுக்கு பிடித்த படமாக இந்தப்படம் அமையும் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் M.S.குமார்.