full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

கொம்பனைத் தொட்ட விஜய்சேதுபதிக்கு நோட்டீஸ்

திருச்சி மாவட்டம் லால்குடி கீழவீதி பகுதியைச் சேர்ந்தவர் காத்தான். இவர் தமிழ்நாடு வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு பேரவையின் மாவட்ட செயலாளாராக உள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டிலும், அது தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் இவர் புலிவலத்து காளை, கண்ணாபுரம், பூரணி, வத்திராபூர், மதுரை நிப்பந்தி உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 14 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இதில் கொம்பன் என்ற 6 வயது காளை மிகவும் பிரபலமானதாகும்.

கடந்த 4 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பல்வேறு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொண்டு 5 தங்க காசு, 8 வெள்ளிகாசுகள், 32 சைக்கிள்கள், 6 பீரோ, 3 பிரிட்ஜ் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளது. மேலும் இதுநாள் வரை எந்த ஜல்லிக்கட்டு போட்டிகளிலும் பிடிபடாத காளையாக விளங்கி வருகிறது.

இந்நிலையில் திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் `கருப்பன்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ஒரு காட்சியில் கொம்பன் மாட்டினை விஜய் சேதுபதி திமிலைப் பிடித்து அடக்குவது போல் படத்தின் முன்னோட்ட காட்சியில் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்பு கொண்டு மாட்டின் உரிமையாளர் காத்தானிடம் கேட்டதைத் தொடர்ந்து, நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம், இயக்குநர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் ஒரு வார காலத்திற்குள் முறையான அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு காளை கொம்பனை படத்தில் காட்சிப்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாட்டின் உரிமையாளர் காத்தான் நிருபர்களிடம் கூறும் போது, இந்த ஜல்லிக்கட்டு காளையை எனது தாயார் நினைவாக வளர்த்து வருகிறேன். காளை கொம்பனுக்கு ஏராளமான ரசிகர்களும் ரசிகர் மன்றங்களும் உள்ளது. இதுவரை பிடிபடாத எனது மாட்டை பிடிமாடாக படத்தில் கிராபிக்ஸ் தொழில் நுட்ப உதவியுடன் காட்டியுள்ளது மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காளை கொம்பனின் நற்பெயருக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இருந்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.