full screen background image
Search
Saturday 20 April 2024
  • :
  • :
Latest Update

விவேகம் – விமர்சனம்

வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து அஜித் குமார், சிறுத்தை சிவா, வெற்றி ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் விவேகம்.

சர்வதேச உளவு போலீஸில் உயர்பதவியில் பணிபுரிந்து வருகிறார்கள் நண்பர்களான அஜித்தும், விவேக் ஓபராயும். பணத்தாசை கொண்ட விவேக் ஓபராய், அணு ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தியாவை அழிக்க நினைக்கும் சர்வதேச சதிகாரர்களின் செயல்களுக்கு துணை போகிறார். இதை அறிந்து கொண்ட அஜித், சதிகாரர்களின் திட்டத்தை முறியடித்து, இந்தியாவை காப்பாற்றினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

சதிகாரர்களிடமிருந்து இந்தியாவைக் காப்பாற்றுவது தான் கதை என்றாலும், படம் மொத்தமும் ஐரோப்பா மற்றும் செர்பியாவில் படமாக்கப்பட்டுள்ளது. அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் கதைக்களத்திற்கு மிகவும் பொருந்திப் போகிறது.

சர்வதேச போலிஸ் ஏ கே (எ) அஜய்குமாராக அஜித் வாழ்ந்திருக்கிறார். ரசிகர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், இரண்டாவது காட்சியிலேயே, “தேங்க்யூ, நான் யார் என்பதை எப்போதும் நான் முடிவு செய்வதில்லை என்னை சுற்றி இருப்பவர்கள் தான் முடிவு செய்வார்கள்” என்று பஞ்ச் டயலாக பேசி மாஸ் எண்ட்ரி கொடுத்து, எதிராளிகளின் கூடாரத்தை துவம்சம் செய்து, தப்பிக்கும் காட்சியில் மிரள வைக்கிறார்.

கையளவு செர்ரியை அள்ளி ஸ்டைலாக அஜீத் வீசும் போது, அவை ஸ்வீட் கப்களில் தனித்தனியாக போய் செட் ஆவது முதல், மனைவியை இக்கட்டில் இருந்து சரியான நேரத்தில் காப்பாற்றி, தான் தான் வந்திருக்கிறேன் என துப்பாக்கிக் குண்டுகளாலேயே ஏ.கே என சுவரில் வரைவது என ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களை வசியப்படுத்துகிறார் அஜித்.

படத்தின் துவக்க காட்சிகளும், வசனங்களும் ஏற்படுத்திய பிரமிப்பு, படத்தின் இறுதி வரை தொடர்கிறது. வசனங்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கின்றன.

அஜித்தின் காதல் மனைவியாக காஜல் அகர்வாலின் நடிப்பு கொள்ளை அழகு. சைகை மொழியில் அஜித்துடன் காதல் பகிரும் காட்சி, அஜித்தை விவேக் ஓபராய்க்கு எதிராக கொம்பு சீவி விடும் காட்சி என தனக்கான ஒவ்வொரு பிரேமிலும், அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி, அப்லாஸ்களை அள்ளிச் சென்று விடுகிறார்.

அஜித்தின் கூட இருந்தே குழிபறிக்கும் நண்பனாக விவேக் ஓபராய் மிரட்டல் மாஸ் காண்பித்திருக்கிறார். சுடு சொல் கொஞ்சமும் இல்லாமல், அஜித்தை பாராட்டி பேசிக் கொண்டே அவரை போட்டுத்தள்ள பார்க்கும் இடங்களில் தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அக்சரா ஹாசன், கருணாகரன், சுவாமி நாதன், பரத் ரெட்டி ஆகியோர் அவரவர் வேலைகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

வெற்றியின் ஒளிப்பதிவில் ஐரோப்பாவும், செர்பியாவும் மேலும் அழகு. ரூபனின் படத்தொகுப்பு விறுவிறுப்பான திரைக்கதைக்கு பேருதவி புரிந்திருக்கிறது. முற்றிலும் வித்தியாசமான அனிருத்தின் பாடல்கள் படத்திற்கு மேலும் பலம் கூட்டியிருக்கிறது.

லாஜிக் இல்லாத மிரட்டல் காட்சிகள் சற்றே பலவீனமாக இருந்தாலும், அதையெல்லாம் படம் பார்க்கும் போது கவனத்தில் கொண்டு வராத அளவுக்கான விறுவிறுப்பான திரைக்கதையும், படத்தொகுப்பும் படத்தை முழுமையாக ரசிக்க வைக்கிறது.

சினிமா பார்வையில் ‘விவேகம்’ – மெர்சல்.