நிவர் புயலின் தாக்கம் சென்னையில் பேய் மழையாய் கொட்டித் தீர்த்தது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தன, தலைநகரம் தண்ணீர் நகரமாய் மாறிப்போனது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் சமைக்க முடியாமல் வட சென்னையின் பல பகுதி மக்கள் உணவு கிடைக்காமல் திண்டாடினர்.
இந்தக் காட்சி மழைக்காலத்தில் வீதிவீதியாக சென்று நிவாரணப் பணிகளில் தீவிரம் காட்டிய அமைச்சர் ஜெயக்குமாரின் கண்களில் பட்டது.பசியால் குழந்தைகள்,முதியவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வாடுவதை பார்த்தார். உடனடியாக தன் சொந்தப் பணத்தில் தரமான வெஜ்பிரியாணியை பல இடங்களில் சமைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து கடகடவென வேலைகள் தொடங்கி கமகமவென வெஜ்பிரியாணி தயாரானது. பெரிய அண்டாவை ஒரு சைக்கிளில் எடுத்து வைத்துக்கொண்டு பல இடங்களுக்கும் அவரே நேரில் சென்று பலருக்கும் பரிமாறி பசியாற்றினார்.மரங்களை அப்புறப்படுத்துவது, மீனவர்களை பாதுகாப்பது,நிவாரண முகாம்களை அமைப்பது என எத்தனையோ பணிகளைச் செய்தாலும் ஏழைகளின் பசி ஆற்றுவது இருக்கும் திருப்தியையும், சந்தோஷத்தையும் அமைச்சரின் முகத்தில் பார்க்க முடிந்தது.
மதுரையில் வைகை ஆற்றை பலப்படுத்துவதற்காக பிட்டுக்கு மண் சுமந்ததார் சிவபெருமான் என்பது புராணம்.ஆனால் அமைச்சர் ஜெயக்குமார் கைமாறு கருதாமல் பிரியாணி சுமந்து வந்து ஏழைகளுக்கு பரிமாறி பசியாற்றியிருக்கிறார். அவரது இந்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில்,அதுவும் இந்தக் காலத்தில், இப்படியொரு அமைச்சசர் இருக்கிறார் என்பது ஆச்சர்யம் என்கின்றனர் பொதுமக்கள்!