இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் கைதி படம் மூலமாக நடிகர் அர்ஜுன் தாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாக இருக்கிறார்

News

 

தனது முதல் படம் வெளியாவதற்கு முன்பே, அர்ஜுன் தாஸ்  இன்னும் இரு படங்களில் நடித்து வருகிறார்.
அவர் பிரபுசாலமன் இயக்கத்தில் கும்கி 2 விலும்,  அந்தகாரம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இத்தனை படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் இளம் நடிகர் அர்ஜுன் தாஸ் யார் ? எங்கிருந்து வருகிறார்?

துபாயில் வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த அர்ஜுன் தாஸ், ஒரு நடிகனாக வேண்டும் என்ற தனது நெடு நாள் கனவை பூர்த்தி செய்ய, தனது வேலையை உதறித் தள்ளி விட்டுச் சென்னை வந்தார்.

அவரது இந்த முடிவுக்கு முதலில் ஒப்புதல் அளிக்காத அவரது பெற்றோர், அவரின் சினிமா காதலை கண்டு பின்னர் ஒப்புதல் அளித்தனர்.
சென்னைக்கு வந்த அர்ஜுன் தாஸ், முதலில் கூத்துப்பட்டறையிலும் அதன் பின் ஏவமிலும் நடிப்பு பயிற்சி எடுத்துக்கொண்டார்.

அதன்பின் வாய்ப்புகளைத் தேட  துவங்கினர்.

திரைத்துறைக்கு எந்த விதத்திலும் சம்பந்தம் இல்லாத ஒரு குடும்பத்தில் இருந்து வந்த அர்ஜுன் தாஸுக்கு, திரைத்துறை எப்படி இயங்குகிறது என்று புரிந்து கொள்வதற்கு சிறிது காலமாயிற்று.

விடாமல் வாய்ப்புக்காக போராடினார் அர்ஜுன் தாஸ். நான்கு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு அவருக்கு லோகேஷ் கனகராஜின் கைதி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நான்காண்டு போராட்டக் காலத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு ஆர்ஜே வாக ரேடியோ ஸ்டேஷன் ஒன்றில் பணிபுரிந்தார் அர்ஜுன் தாஸ்.

“நான் ஆர் ஜே வாக வானொலி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, திரைத்துறையில் இருந்து பலரை சந்திக்க வாய்ப்பு கிட்டியது. இந்த காலகட்டத்தில் தான்  கைதி படத்தில் நடிப்பதற்கு ஒரு ஆடிஷன்னுக்கு என்னை அழைத்தார்கள். அந்த ஆடிஷனில் கலந்து கொண்டேன்.
இந்த வாய்ப்பு கிட்டியது,” என்கிறார் இந்த இளம் நடிகர்.

அதன் பின், பிரபு சாலமனின் கும்கி  இரண்டாம் பகுதியிலும், அந்தகாரம் எனும் ஹாரர் திரில்லர் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு  வந்தது.

“கும்கி இரண்டாம் பாகத்தில் எனது கதாபாத்திரம் நன்மையும் தீமையும் கலந்த ஒரு குணாதிசயம்  கொண்டது. இந்த படத்தில், என் பகுதிகளை நடித்து முடித்துள்ளேன். அந்தகாரம் என்னும் மற்றொரு படம், விக்னராஜன் எனும் புதிய இயக்குனரால் இயக்கப்படுகிறது. இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன,”
என்கிறார் அர்ஜுன் தாஸ்.

பெரிய சவால்களை எதிர்கொண்டு அதைக் கடந்து இப்பொழுது தனது கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அர்ஜுன் தாஸ், சரியான முடிவுகளை எடுத்து நல்ல இயக்குனர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறார்.