சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 6 வாரத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால் தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
ஆளுங்கட்சியான அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. விக்கிரமராஜா தலைமையிலான வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தி மு க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. திமுக, காங்கிரஸ், பா ம க, த மா கா., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம தி மு க, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்பட பல கட்சிகள் முன்னின்று இந்த முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன.
அதிமுக தொழிற்சங்கம் தவிர மற்ற அனைத்து முக்கிய தொழிற்சங்கங்களும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. விவசாய அமைப்புகளில் 12 அமைப்புகள் பங்கேற்றுள்ளன. முக்கிய வர்த்தக சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வணிகர்கள் கடைகளை அடைத்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்க பேரவை 11-ம்தேதி நடத்த இருந்த கடை அடைப்பை இன்று நடத்தி முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பஸ்களை இயக்கப் போவதில்லை என்று போக்குவரத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்த கூட்டமைப்பில் தொ மு ச., சிஐடியு., ஏஐடியுசி., எச் எம் எஸ்., டிடிஎஸ்எப்., பி டி எஸ்., எம் எல் எப்., ஏ ஏ எல் எல் எப்., டி டபுள்யூ யு ஆகிய 9 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், வாகனங்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்படுகின்றன. எனினும், பேருந்து சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
முழு அடைப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் சில தனியார் பள்ளிகளுக்கு அந்தந்த கல்வி நிறுவனங்கள் விடுமுறை அளித்துள்ளன.
முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். சென்னையில் 15 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.