full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

சதுர அடி 3500 – விமர்சனம்

வேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தாலும், அவரது சாவில் இருக்கும் உண்மையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் அந்த கட்டிடத்தில் பேய் இருப்பதாகவும் செய்திகள் வெளிவர போலீசும் அந்த கட்டிடத்திற்குள் செல்ல பயப்படுகின்றனர்.

கட்டிடத்தின் பாக்கி வேலைகளும் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை போலீஸ் அதிகாரியான நாயகன் நிகில் மோகனிடம் வழங்கப்படுகிறது. இந்த வழக்கு குறித்த தீவிர விசாரணையில் இறங்கும் நிகில் மோகன் கொலையில் இருக்கும் மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இதில் அவருக்கு பல தடங்கல்கள் வருகின்றன.

அந்த தடங்கல்கள் அனைத்தையும் தாண்டி, கொலைக்கான மர்மத்தை கண்டுபிடித்தாரா? உண்மையாகவே அந்த கட்டிடத்தில் அமானுஷ்ய சக்திகள் ஏதேனும் இருக்கிறதா? அந்த கொலைக்கு காரணமானவர் யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் நிகில் மோகன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு உண்டான உடற்கட்டுடன் இருந்தாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவில்லை. இனியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். ரஹ்மான் தனது அனுபவ நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு அவர் தேவையில்லை என்று தான் தோன்றுகிறது.

பிரதாப் போத்தனுக்கு ஒரு வலுவான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் கூறவேண்டும். மற்றபடி கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, தலைவாசல் விஜய், சுவாதி தீக்‌ஷித் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.

உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் கதைக்கு, ஏற்ற திரைக்கதையை அமைப்பதில் இயக்குநர் ஜெய்சன் கோட்டைவிட்டிருக்கிறார். அடுத்தடுத்த காட்சிகளுக்கு இடையேயான தொடர்பும் சரியில்லை. காட்சிகள் ஏனோ தானோவென்று எடுக்கப்பட்டிருப்பது போல தோன்றுகிறது. திடீர் திடீரென்று மாறுபட்ட காட்சிகள் வந்து முகசுளிப்பை உருவாக்குகிறது. அதேபோல் பல படங்களில் தங்களது நடிப்பை நிரூபித்திருக்கும் பல முன்னணி நடிகர்களை சரியாக இயக்குநர் வேலை வாங்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மற்றபடி படத்தில் ப்ளஸ் என்று குறிப்பிட்டு கூறும்படியாக ஏதும் இல்லை.

கணேஷ் ராகவேந்திரா இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் பாராட்டும்படி இல்லை. ஐ.பிரான்சிஸ் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.