full screen background image
Search
Saturday 9 November 2024
  • :
  • :
Latest Update

எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது: நடிகர் ஜி. எம். சுந்தர்

சினிமா பல விசித்திரமான குணங்களைக் கொண்டது. முரண்பாடுகளையும் கொண்டது.
 நாம் திரையில் பார்க்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர மற்றவர்கள் நம் நினைவுகளில் பதிவதில்லை.
 கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர , அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை.  அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது.  இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம் .சுந்தர்.
இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர் .இயக்குநர்  சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ‘ புன்னகை மன்னன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர். கமலின் ‘சத்யா’ படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான். அண்மைக் காலங்களில் வந்த ‘காதலும் கடந்து போகும்’  படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான ‘மகாமுனி’ படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம்.
இனி ஜி.எம். சுந்தரின் முன்கதைச் சுருக்கம் :
“எனக்குப் பூர்வீகம் திண்டுக்கல் தான் என்றாலும் அப்பாவின் வேலை நிமித்தமாக சென்னை வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டது குடும்பம். எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை. அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன் .நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள் .
படித்து முடித்து திரைப்பட வாய்ப்புக்காக கவிதாலயா அலுவலகம் சென்றபோது எழுத்தாளர் அனந்து அங்கே இருந்தார் .அவர் மூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ‘புன்னகை மன்னன்’ . அதன் பிறகு கமல் சாரின் நட்பு கிடைக்க அவரது  ‘சத்யா’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் தயாரித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் .அதன் பிறகு
‘கிழக்குக்கரை’, ‘பொன்னுமணி’, ‘அதர்மம்’, ‘தொட்டி ஜெயா’ ,’எங்க ஊரு காவல்காரன்’ போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம்  தொடர்ந்தது.
  திரைப்படக் கல்லூரியில் உலக சினிமாக்கள், நடிப்பின் இலக்கணம் போன்றவற்றை அறிந்த பிறகு , ஓரளவுதெளிந்த பிறகு மேடை நாடகங்களிலும் நடித்து வந்தேன். கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் ‘ நாற்காலி மனிதர்கள்’  நாடகத்தில் நான்தான் நாயகன். அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை  அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம்  நான்தான் பெரும்பாலும் நாயகன்.
ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவின் நாடகங்களிலும் நான் தவறாமல் இடம் பெற்றுவிடுவேன். இப்படி மேடையிலும் நடித்து என் நடிப்பு பசியைப் போக்கிக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது .இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை .
ஆனால் வாய்ப்பு கேட்டுச் செல்லும் வேளைகளில் எல்லாம் நான் துவண்டு விடவில்லை. காரணம் குடும்பம் ஆதரவாக இருந்தது. தோல்வி வேளைகளில் எல்லாம் வெற்றிச் சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்றால் முயற்சியின் சதவீதம் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையும் வேகமும் தான் எனக்குள் இருந்தன. அதற்கான விளைவுதான்  சற்றே காலம் கடந்து வந்தாலும் ‘காதலும் கடந்து போகும் ‘படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர்  நலன் குமாரசாமி . ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது ‘மகாமுனி’ படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் . இதுஎனது சமீபத்திய சந்தோஷம்.
 திரைப்படங்களில் என்னை அழைத்து நடிக்க வைக்கும் வாய்ப்பு எங்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த  தேவையுள்ளவர்களின் கதவைத்  கட்டவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.அப்படித்தான் வாய்ப்புக்கான என்  போராட்ட காலத்தைப் புரிந்து கொள்கிறேன் .
எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்கிற தெளிவு  எனக்கு இருக்கிறது .அதனால் எனக்கு வயது ஒரு தடை இல்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் .பாசிடிவ், நெகடிவ் என்ற பேதம் எனக்கு இல்லை. அதனால் சரியான அங்கீகாரம் மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இப்போது நான் நடித்து ‘மண்டேலா’ என்ற ஒரு படம் வரவிருக்கிறது  .அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார் . ‘சைரன்’ என்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் . திரைப்படக் கல்லூரியில் 1982ல் படித்த எனக்கு  2019 -ல் வாய்ப்பு வந்திருக்கிறது என்கிறபோது எனக்கான இடம் தேவை இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது .”இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.