க.பெ. ரணசிங்கம் – வசனங்கள் எல்லாமே நச்! – திரை விமர்சனம்

Reviews
0
(0)

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. இவர் ஊரில் நடக்கும் பிரச்சனைக்கு குரல் கொடுத்து வருகிறார். குறிப்பாக தண்ணீர் பிரச்சனைக்காக மக்களை திரட்டி போராட்டங்களை நடத்துகிறார்.

இந்நிலையில் பக்கத்து ஊர் பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார் விஜய் சேதுபதி. ஊர் பிரச்சனைக்கு போராடினது போதும், வீட்டு பிரச்சனையை பார் என்று விஜய் சேதுபதியிடம் ஐஸ்வர்யா ராஜேஷ் கூற, விஜய் சேதுபதி துபாய்க்கு வேலைக்கு செல்கிறார்.

வேலைக்கு சென்ற இடத்தில் விஜய் சேதுபதி இறந்து விடுகிறார். இவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர பல சிக்கல்கள் ஏற்படுகிறது. எப்படியாவது விஜய் சேதுபதி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஐஸ்வர்யா ராஜேஷ் போராடுகிறார். இறுதியில் போராட்டங்களை வென்று விஜய் சேதுபதியின் உடலை சொந்த ஊருக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் கொண்டுவந்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனக்கே உரிய ஸ்டைலில் அசத்தும் விஜய் சேதுபதி, இந்த படத்தில் நீரோட்டம் பார்ப்பது, தண்ணீர் பிரச்சனைக்கு போராடுவது என்று கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். டயலாக் டெலிவரியில் அப்லாஸ் அள்ளுகிறார். மனைவி ஐஸ்வர்யா ராஜேஷுடன் இருக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.

அரியநாச்சி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு அபாரம். முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம்பாதியில் கணவருக்காக போராட்டும் பெண்ணாவும் மனதில் பதிகிறார். கொடுத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நெகிழ வைத்திருக்கிறார். படத்திற்கு படம் நடிப்பை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வாழ்த்துகள்.

விஜய் சேதுபதிக்கு தங்கையாக வரும் பவானி ஸ்ரீ நடிப்பால் கவனிக்க வைக்கிறார். குறிப்பாக ஐஸ்வர்யா ராஜேஷுடன் சண்டை போடுவது, விஜய் சேதுபதி ஊருக்கு செல்லும் காட்சி, அண்ணன் இறந்தவுடன் கலங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

வேலராமமூர்த்தி குணச்சித்ர நடிப்பால் மனதில் நிறைகிறார். அருண்ராஜா காமராஜ், சுப்பிரமணிய சிவா, முனீஸ்காந்த், அபிஷேக், டி.சிவா, இயக்குநர் மனோஜ்குமார், பந்தா எம்எல்ஏவாக நமோ நாராயணா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்பில் மிளிர்கிறார்கள்.

பல படங்களில் குணச்சித்ர நடிகராக முத்திரை பதித்த நடிகர் பெரிய கருப்பத் தேவரின் மகன் விருமாண்டி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். முதல் படத்திலேயே மக்கள் பிரச்சினை, தண்ணீர்ப் பிரச்சினை, வெளிநாடு சென்று வேலை செய்பவர்கள் அங்கு இறந்துவிட்டால் ஏற்படும் பிரச்சனை என துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார். இறந்தவர்களின் உடலை கொண்டு வர இங்கு இருக்கும் அரசியல், சட்ட சிக்கல்கள் என அனைத்திலும் அலசி இருக்கிறார். முதல் படம் என்று நம்பமுடியாத அளவுக்கு அபாரத் திறமையால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். கதாபாத்திரங்களிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். போகிற போக்கில் பல விஷயங்களை சொல்லி இருக்கும் இயக்குனர் படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம். சின்ன குறைகள் இருந்தாலும் பெரியதாக தெரியவில்லை. படத்திற்கு பெரிய பலம் சண்முகம் முத்துசாமியின் வசனங்கள். பல வசனங்கள் நச் என்று இருக்கிறது.

கிராமத்தின் வறட்சியையும், மண்ணின் சூழலையும் கண்களுக்குள் பதிய வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ஜிப்ரான் இசையில் பாடல்கள் கதையோடு பார்ப்பவர்களை உட்கார வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘க.பெ.ரணசிங்கம்’ சிங்கம்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.