சிறிய படங்களையும் OTT-யில் வெளியிட முயல்வோம்- தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி வேட்பாளர் ராதாகிருஷ்ணன்.

News

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது.

இத்தேர்தலில், தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர இன்னும் சிலரும் போட்டியிடுகின்றனர்.

தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி என்கிற பெயரில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி போட்டியிடுகிறது.

ஏற்கனவேசங்கத்தின் செயலாளர், மற்றும் பொருளாளர் பதவி வகித்தவர் ராதாகிருஷ்ணன் கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட் படத்தயாரிப்பாளர்களின் குரலாக செயல்பட்டு வருபவர் கடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்தவர் நடைபெறவுள்ள தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும்அணியில் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் அவருடன் ஒரு பேட்டி.

1.என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.?

தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பது VPF கட்டணம். அதைக்கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய வழிமுறைகளைச் செய்வோம்.

நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களைச் சரி செய்து அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்வோம்.

ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த விரும்பும் தயாரிப்பாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவோம்.
சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயற்சி எடுப்பது.

சிறு படங்களுக்கும் போதிய திரையரங்குகள் ஒதுக்கீடு உறுதி செய்தல் உட்பட பல வாக்குறுதிகளை முன் வைத்துத் தேர்தலில் போட்டியிடுகிறோம்.

2.தொழில்நுட்பச் சிக்கல் என்று OTTயைகுறிப்பிடுகிறீர்கள். அதேசமயம் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறீர்களே?

திரையரங்குகள் ஒதுக்கீடு போல OTTயிலும் பெரிய படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதனால் சிறிய படங்களையும் OTTயில் வெளியிட முயல்வோம் என்று சொல்கிறோம்.

3. சிறிய படங்களுக்குப் போதிய திரையரங்குகள் என்னும் வாக்குறுதி பல தேர்தல்களில் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறதே? செயலுக்கு வந்தபாடில்லையே?

கடந்த முறைவிஷால் தேர்தலில் வென்றபோதும் இப்படிச் சொன்னார். ஆனால் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் என இரண்டு பதவிகளில் இருந்து கொண்டு ஒன்றும் செய்யமுடியவில்லை.

4.சிறு படங்களுக்கு போதிய திரையரங்குகள் என்பது விஷாலுக்கு முன்பும் தேர்தல்களில் பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் விசயமாக இருக்கிறதே?

ஆமாம், ஒவ்வொரு முறை தலைவராக வருகிறவர்களும் அதற்காக உரிய முயற்சிகள் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.சிறு படங்களை மட்டுமே தயாரித்துப் பெரிய வெற்றிகளைப் பெற்ற தேனாண்டாள் நிறுவனத்தின் முரளிக்கு அதன் வலி முழுமையாகத் தெரியும். அவர் கண்டிப்பாக செயல்படுத்துவார்.

5.எதிரணியில் போட்டியிடும் டி.ராஜேந்தர் மற்றும் மன்னன் ஆகியோர் விநியோகஸ்தர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார்களே?

டி.ராஜேந்தர் போட்டியிடுவது வருந்தத் தக்கது. ஏற்கெனவே விஷால் தலைவரான போது இவரே இதே காரணத்தைச் சொல்லி விஷாலை விமர்சனம் செய்தார்.இப்போது அவரே அப்படிச் செய்கிறார்.
அவருடைய மகன் சிம்புவால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். டி.ராஜேந்தர் பொறுப்புக்கு வந்தால் என்ன செய்வார்? அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் சங்கப் பொறுப்பிலிருப்பவர்கள் வேறு அமைப்புகளில் பொறுப்பு வகிக்கக்கூடாது என்கிற சட்டத்தைத் திருத்தி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாமலேயே இங்கே போட்டியிடுகிறார்கள். இது அவருக்குப் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தும்.

6.தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிடுகிறவர்கள் ஆட்சியிலிருப்பவர்களைச் சந்தித்து அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது போல் காட்டிக் கொள்வது சரியா?

எங்கள் சங்கத்தைப் பொறுத்தவரை மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்களோடு இணக்கமாக நடந்துகொள்வது எப்போதும் இருக்கும் வழக்கம்தான். எங்கள் அணியில் பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் போட்டியிடுகிறார்கள். அரசியல் என்பது வெளியில்தான் இங்கே எல்லோரும் தயாரிப்பாளர்கள்தான்.

7.இம்முறை நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்றொன்று அமைந்திருக்கிறதே?

அப்படி ஒரு சங்கம் அமைவதற்குக் காரணம் இருந்தது. அரசாங்கம் சங்கத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டு ஒரு நிர்வாகக் கமிட்டி அமைத்தது. அதனால் பல சிக்கல்களில் முடிவெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனாலேயே அந்தச் சங்கம் உருவானது.
நாங்கள் வென்ற பிறகு அவர்களுடன் பேசி தாய்ச்சங்கத்தில் இணைய வைப்போம்.

8.இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறதே?

கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்தோம். ஆனால் இப்போது எங்கள் அணி சார்பாக வாக்குக்காகயாருக்கும் பணம் கொடுக்கப்படவில்லை

9.உங்களிடம் குறிப்பிட்ட அளவு ஓட்டுகள் இருக்கின்றன. நீங்கள் சொல்லும் அணிக்கு அவர்கள் ஓட்டுப்போடுவார்கள் என்று சொல்லப்படுவது பற்றி..?

நான் எல்லோரிடத்திலும் அன்பாகப் பழகுகிறவன். கடந்த 20 வருடங்களாக குறைந்தபட்ஜெட்டில் படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் நலனுக்காக போராடி வருகின்றேன்யாருக்கு சிக்கல் என்றாலும் முதல் நபராக அங்கு இருப்பேன்என்னாலான உதவிகளைசெய்வேன்.அதனால் எல்லோரும் என்னிடம் பாசமாக இருப்பார்கள். இதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

10. சங்கப் பொறுப்புக்குப் போட்டியிடும் தகுதி இல்லாத நீங்கள் அவசரகதியில் ஒரு படத்தை ஓரிரு திரையரங்குகளில் வெளியிட்டுவிட்டு தேர்தலில் போட்டியிடுவதாகப் புகார் எழுந்துள்ளதே

படத்தை முதல்பிரதி அடிப்படையில் ஒருவர் தயாரிப்பதும் அதை இன்னொருவர் வாங்கி வெளியிடுவதும் எப்போதும் உள்ள நடைமுறைதான். கொரோனா காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை என்பதால் கொழும்பு, ‘

,புதுச்சேரி ஆகிய இடங்களில் திரையிட்டோம்.தமிழகத்தில் திரையரங்குகள்திறந்திருந்தால் அதிக திரைகளில் வெளியிட்டிருப்போம்.
எனவே இந்தப் புகார் அர்த்தமற்றது. தேர்தல் அதிகாரி நாங்கள் விதிமுறைப்படி நடந்துகொண்டதை ஒப்புக்கொண்டு எங்கள் வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்டார்..