தனது சொந்த செலவில் அசாம் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வரும் அபி சரவணன்..!

News
0
(0)

பட்டதாரி என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் அபி சரவணன்.. நடிகராக மட்டுமல்லாமல் ஒரு சமூக ஆர்வலராக இயற்கை சீற்றம், தேசிய பேரிடர் சமயங்களில் மொழி மாநிலம் பாராமல் ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுவதில்  முதல் ஆளாய் இருப்பவர்.. சென்னை வெள்ளத்தின்போது வங்கிக் கணக்கில் பணம் இருந்தும் அதை எடுக்க வழியில்லாமல் ஒருவேளை சாப்பாட்டிற்காக, ஒரு வாய் தண்ணீருக்காக தவித்த அந்த தருணம் தான் எங்கெங்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்படுகிறதோ அங்கெல்லாம் ஓடிப்போய் உதவி செய்ய தன்னை தூண்டியது என்கிறார் அபி சரவணன். தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக கடந்த ஒருவாரமாக அங்கேயே முகாமிட்டு நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் அபி சரவணன்.

மழையால் அதிக அளவு பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட அசாம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் (Solapur, Kamrut, Chirang, Bongaigaon & Kokrajhar) அசாமை சேர்ந்த தமிழக மருமகள் திருமதி ஜூனுபாலா, உஜ்ஜல்,அகில்  மற்றும்  ஆஷா ஆகிய நண்பர்களுடனும் மற்றும் அசாம் மாநில அதிகாரிகள் சிலர் பாதுகாப்பு உதவியுடனும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாகச் சென்று அரிசி மற்றும் உணவுப் பொருட்கள், துணிகள், மருந்து பொருட்கள், மற்றும் குடிநீர் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார் அபி சரவணன்.

பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் பாதிக்கப்பட்ட மலைவாசிகளை சந்திக்கச் செல்லும்போது அவர்களுக்கான நிவாரண பொருட்களுடன் அவர்களின் விருப்ப உணவான அவல், வெல்லம் வாங்கிச் சென்று கொடுத்து தனது அன்பால் அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளார் அபி சரவணன். இவரது குழுவினரை அந்த பகுதிக்கு படகோட்டி அழைத்துச் சென்ற நபர் பார்வையற்றவர் என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டு போனாராம் அபி சரவணன்.

தற்போது வெள்ளை பாதிப்பால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் நிவாரண பணிகளை ஓரளவு முடித்துவிட்ட அபி சரவணன், ஐந்தாவது மாவட்டத்தில் மழையினூடே தனது உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறார்.

அபி சரவணனின் சேவையை பாராட்டி அஸ்ஸாம் மக்கள் ‘Kamsa’ எனும் மரியாதையையும்  & கலெக்டர் அலுவலகத்தில் இருந்து  ‘Araina’ எனும் அரசாங்க மரியாதையையும் வழங்கி கௌரவித்தனர்.

இளம் நடிகர்கள் சினிமாவில் தங்களது அடுத்தடுத்த வாய்ப்புகளை தேடி ஓடிக்கொண்டிருக்க நடிகர் அபி சரவணனோ, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட, தேசத்தின் எல்லை வரை ஓடிக்கொண்டிருக்கிறார்.. நடிகர்களில் அபி சரவணன் நிச்சயம் ஒரு வித்தியாசமான மனிதநேயம் உள்ள மனிதர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.