இப்படத்தில், பூ ராமு, காளி வெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குனர் ரா.வெங்கட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் பல போராட்டங்களை தாண்டி தான் திரைக்கு வருகிறது பல போராட்டங்கள் இருந்தாலும் பல சர்வ தேசிய திரை விருதுகளை வாங்கி தான் இந்த படம் திரைக்கு வருகிறது.
கதைப்படி,
மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் பூ ராம், அவரதுமனைவி மற்றும் இவர்களது பத்து வயது மதிக்கத்தக்க பேரன் மாஸ்டர் தீபன்.
தென்னை ஓலையில் கீற்று நெய்து அதில் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி தினம் நெருங்குகிறது. தனது பேரன் சுமார் 2000 ரூபாய் மதிக்கத்த உடை ஒன்றை கேட்க, அதை வாங்கித் தருவதாக வாக்கு கொடுத்து விடுகிறார் பூ ராம்.
இந்த சூழ்நிலையில், பூ ராமிற்கு அந்த தொகை கிடைக்காமல் போய் விடுகிறது. இதனால், தனது பேரன் ஆசையாக வளர்த்து வரும் கிடா ஒன்றை விற்க முயற்சிக்கிறார் பூ ராம்.
அது சாமிக்கு நேர்ந்து விட்ட கிடா என்று கூறி ஒருவரும் வாங்க மறுக்கின்றனர். இந்த கதை ஒருபுறம் நடக்க,
மற்றொருபுறம், கோழி மற்றும் ஆடு கறி வெட்டிக் கொடுக்கும் கூலி வேலை செய்து வருகிறார் காளி வெங்கட். இவருக்கு திருமண வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
பல வருடங்களாக வேலை பார்த்த இடத்தில் தகராறு ஏற்பட, சொந்தமாக தீபாவளி தினத்தில் கறி வெட்டி தொழிலை தொடங்குவதாக சவால் விடுக்கிறார் காளி வெங்கட்.
அதற்காக, கிடாவை தேடி அலைகிறார். பலரும், காளி வெங்கட்டை நம்பி கிடாவை கொடுக்க மறுக்கிறார்கள். கடைசியாக, பூராமின் கிடாவை வாங்குவதாக கூறிவிடுகிறார்.
இதனால், தீபாவளிக்கு தனது பேரனுக்கு துணி எடுத்துக் கொடுத்துவிடலாம் என்று பூ ராமும், கேலி பேசிய ஊர் முன்னாள் கிடா’வை வெட்டி தனது தொழிலை தொடங்கி விடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் கிடாவை சில களவாணிகள் திருடிச் சென்று விடுகின்றனர்.இதனால் இருவரும் அதிர்ச்சிக்குள்ளாக அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
எப்போதுமே தனது கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடிக்கும் பூராம் இந்த படத்திலும் கனக்கச்சிதமாக தனது கேரக்டரை செய்து முடித்திருக்கிறார்.தனது யதார்த்தமான நடிப்பில் ரசிகர்களை கவருகிறார் குறிப்பாக தனது பேரன் கேட்டதற்காக, அவனுக்கு உடை எடுத்துக் கொடுக்க அவர் படும் இன்னல்களை கண்முன்னே கொண்டு வந்து கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விட்டார்.
பூ ராமின் மனைவியாக நடித்த பாண்டியம்மாளையும் பாராட்டி ஆக வேண்டும். மிகப்பெரும் நடிகைகள் சிரமத்தில் நடிக்க வேண்டிய காட்சியை மிகவும் எளிதாக கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
அதிலும், பேரனின் உடை வாங்குவதற்கு பணம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் நடந்த நடையிலும், பேரனுக்காக வாங்கிய துணியை பாண்டியம்மா தொட்டுப் பார்த்த இடத்திலும் இயக்குனரின் உச்சபட்சம் தெரிகிறது.
பேரனாக நடித்த மாஸ்டர் தீபன், அழகாக நடித்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் திருட்டுத் தனமாக முழித்துக் கொண்டு செய்யும் செயல், “அடேய்.. சூப்பர்டா” என்று பாராட்ட வைத்துவிட்டது.
இந்த படத்தை பொறுத்த வரைக்கும் ஒவ்வொருத்தரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள் அதிலும் குறிப்பாக பூ ராம் மற்றும் காளி வெங்கட் போட்டி மிகவும் ஆரோக்கியமாக இருந்தது. மொத்தத்தில் காளி வெங்கட் மிரள வைத்திருக்கிறார்.
அவர், எதேச்சையாக வீட்டில் எழும் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் காட்சியில் பூ ராமின் கையில் பணத்தை கொடுக்கும் காட்சி வரை மகா நடிகனாக நிற்கிறார் காளி வெங்கட். தமிழ் சினிமாவில் மிக சிறந்த நடிகர் பட்டியலில் நிச்சயம் இவருக்கு மிக பெரிய இடம் உண்டு.
மற்ற கதாபாத்திரங்களில் நடித்த, காளி வெங்கட்டின் மனைவி, மகன், மகனின் காதலி, டீக்கடைக்காரர், காளி வெங்கட்டின் நண்பர், என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான கதாபாத்திரத்தை மிகக் கச்சிதமாக நடித்து முடித்திருக்கிறார்கள்.
தீசனின் இசை மனதை வருடியது. பின்னணி இசை கதையோடு நம்மையும் நடக்க வைத்தது. ஜெயப்பிரகாஷின் ஒளிப்பதிவு தத்ரூபம். ஆட்டின் கண் அசைவு, ஆடு திருடர்களை பிடிக்கச் செல்லும் போது எடுக்கப்பட்ட காட்சி என ஆங்காங்கே குறிப்பிடும்படியான காட்சிகளை பலவற்றை வைத்திருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.
மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட். ஒரு துணிக்காகவா இந்த போராட்டம் என்று கேட்க வைக்காமல், இந்த துணிக்காகத்தான் இத்தனை போராட்டமும் என்று மனதிலும் கண்களிலும் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர்.
பணக்காரன் முதல் ஏழை வரை சாதி, மதம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என எதையும் பாராமல் அனைவரும் கொண்டாடும் பண்டிகை தான் தீபாவளி. அந்த தீபாவளியைக் மகிழ்ச்சியோடு கொண்டாட நினைக்கும் நல் உள்ளங்களின் வாழ்வியலை இயக்கியதற்காக இயக்குனரை வெகுவாகவே கொண்டாடலாம்.
தமிழ் சினிமாவிற்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ரா வெங்கட்…
சமீபத்தில் வந்த தரமான சம்பவம்
கிடா – திரைவிமர்சனம்