இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். யார் கடைசி வரை அங்கேயே வசிக்கிறார்களோ? அவரே வெற்றியாளர்.
இந்த நிகழ்ச்சிக்காக சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைக்கிறார்கள். வருகிற ஜுன் 18-ந் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் இப்போதைக்கு 2 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 அரசியல்வாதிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத் தவிர்த்து சில நடிகர்களும், கலையுலகினரும் போட்டியாளர்களாக பங்கேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.