டெக்னோ பீட்ஸ் மற்றும் மேற்கத்திய இசை பாடல்களே தரவரிசை அட்டவணையில் முதல் இடத்தை பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வெளியாகியிருக்கும் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் ரசிகர்களை ஈர்த்துள்ளது பெரிய விஷயம். குறுகிய காலத்திலேயே அதாவது 117 மணி நேரத்தில் YouTubeல் 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை இந்த பாடல் கடந்துள்ளதால் பாடலாசிரியர் ஜி.கே.பி மகிழ்ச்சி கடலில் மிதந்து வருகிறார்.
தந்தை-மகள் உறவு அடிப்படையிலான இந்த பாட்டை எழுத எது உத்வேகம் அளித்தது என அவர் கூறும்போது, “வாயாடி பெத்த புள்ள” கதையோடு ஒன்றி வரும் ஒரு பாடல். அதில் குறும்பு, வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி போன்றவை இருக்க வேண்டும். இறுதியில், சில பேச்சு வழக்குகளை வார்த்தைகளை நாங்கள் முயற்சித்தோம். பின்னர் அது சிவகார்த்திகேயன், அவரது மகள் ஆராதனா மற்றும் வைக்கம் விஜயலட்சுமி அவர்கள் பாட மேலும் மெறுகேறியது. மேலும், சிவகார்த்திகேயன், ஆராதனா செய்த அழகான விஷயங்கள் அனைவரையும் ஈர்த்தது. திபு நினன் தாமஸ் பாடல் வரிகளின் தெளிவு மற்றும் பாடகர்களின் குரல் முக்கியத்துவத்தை கண்டுபிடித்து சரியான கருவிகளை கொண்டு பாடலை சிறப்பாக உருவாக்கினார்” என்றார்.
இந்த பாடல் உருவாக்கம் பற்றி மேலும் ஜி.கே.பி. கூறும்போது, “எந்தவொரு வேலைக்கும் ஒரு உத்வேகம் தேவை என்றால், தந்தை-மகள் உறவுக்கு அது அவசியமே இல்லை. மனிதர்களின் அத்தனை உணர்வுகளிலும், தந்தை-மகள் பிணைப்பு என்பது எப்போதுமே மிகவும் தூய்மையானது. இது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு விஷயம். ஒரு மனிதன் தனது ஆத்ம துணையை கண்டுபிடித்தால் தான் அவனது வாழ்வு முழுமையடைகிறது என்ற ஒரு பழமொழி உண்டு. ஆனால் உண்மையில், ஒரு பெண் குழந்தையை பெற்று, அது வளர்வதை, அவளது கனவுகளை சாதிப்பதை பார்ப்பது தாம் மிகப்பெரிய சந்தோஷம். இதுவே ‘கனா’ படத்திம் கரு, இந்த படம் அனைவருக்கும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றார்.
கனா கிரிக்கெட்டராகும் தனது கனவுகளை நிறைவேற்ற முயற்சி செய்யும் ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாக கொண்டது. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன், இளவரசு, முனீஷ்காந்த், ரமா, சவரி முத்து, ஆண்டனி பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண்ராஜா காமராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.