“நாளைய தீர்ப்பு” வெளியான சமயத்தில் விஜய், வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு விமர்சனங்களை சந்தித்தார். தொடர்ந்து தந்தை இயக்கிய படங்களில் மட்டுமே நடித்ததும் அவர் மீது எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கவில்லை. “பூவே உனக்காக” படம் தான் விஜயை கடைமடை வரை கொண்டு சேர்த்த காவேரி. அந்தப் ப்டம் தான் விஜய் என்கிற நடிகனை தமிழகமெங்கும் கொண்டு சேர்த்தது. “காதலுக்கு மரியாதை”, “துள்ளாத மனமும் துள்ளும்” என வெற்றிகளாக வந்தாலும் விஜயை அடுத்த கட்டத்திற்கு எடுத்துப் போவதற்கு பல படங்கள் தேவைப்பட்டது. அப்போது தான் “பகவதி” படத்தில் முழுமையான அதிரடி நாயகனாக களம் காண்கிறார். அது எதிர்பார்த்த அளவிற்கு அந்தஸ்த்தை வழங்கவில்லை, தயாரிப்பாளருக்கு லாபத்தை மட்டுமே தந்தது.
ஆனால் விஜய், அடுத்த கட்டத்திற்கு நகர்வதிலேயே குறியாக இருந்தார். காரணம் அந்த இடத்திலேயே அவர் பல வருடங்களாக நின்று கொண்டிருந்தார், எனவே தான் அந்த வட்டத்தை உடைத்து வெளியேற அதிரடி கதைகளாகவே தேர்வு செய்தார். அப்படி முடிவெடுத்து அவர் நடித்த முதல் படத்திலேயே மரண அடி, “புதிய கீதை” சொதப்பியது.
“புதிய கீதை” படத்தின் தோல்வியை “திருமலை” படத்தின் இமாலய வெற்றியின் மூலம் புதிய பிறவி எடுத்தார் விஜய். அதுவரை ஒரு கதாநாயகனாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த அவர், திருமலைக்குப் பிறகு “மாஸ் + கமர்சியல்” வசூல் மன்னனாக அடையாளம் காணப்பட்டார். அதே நேரத்தில் அடுத்து வெளியான “உதயா” திரைப்படம், பத்தடி முன்னேறி நின்ற விஜயை பதினைந்து அடி பளத்தில் தள்ளியது.
அது விஜய்க்கு மிகவும் நெருக்கடியான காலகட்டம். “உதயா” படத்தின் தோல்வியையும் ஈடுகட்ட வேண்டும், அதே நேரத்தில் “திருமலை” வெற்றியைத் தாண்டி அடுத்த அடி எடுத்து வைத்தாக வேண்டும். இந்த முயற்சியில் சறுக்கும் பட்சத்தில் அதள பாதாளத்திற்குள் போய் விழுந்துவிடும் வாய்ப்பும் அதிகம்.
இத்தனையையும் மனதில் வைத்துக் கொண்டு, நம்பிக்கையோடு தரணியுடன் கை கோர்க்கிறார் விஜய். தெலுங்கில் மெகா ஹிட் அடித்த “ஒக்கடு” படத்தின் ரீமேக் என்பதால் ஆரம்பத்திலேயே படத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்பும் இருந்தது. திரிஷா தான் கதாநாயகி என்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக இருந்தது. இருந்தாலும் விஜய்க்கு இது செட்டாகுமா? என பலரும் பேசினார்கள்.
இசை வெளியானது முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. காரணம், “அப்படிப் போடு.. அப்படிப் போடு” பாடல் பட்டி தொட்டியெங்கும் “கில்லி” படத்தைக் கொண்டு சேர்த்தது.
சரியாக, 17-ஏப்ரல்-2004 அன்று வெளியானது “கில்லி”. விஜய்க்கு இது வாழ்வா? சாவா? படம். வெற்றி என்றால், விஜய் தான் கோலிவுட்டின் அடுத்த மன்னன்.. தோல்வி என்றால் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பித்தாக வேண்டும். ஆனால், படம் “அதிரி-புதிர்” ஹிட். விஜயின் “ஸ்க்ரீன் பெர்ஃபார்மன்ஸ்”, திரிஷாவின் “அழகு+நடிப்பு”, பிரகாஷ்ராஜின் “ஹாய், செல்லம் + வில்லத்தனம்”, வித்யாசாகரின் “அப்படிப்போடு”, தரணியின் “கமெர்ஷியல் எலமெண்ட்ஸ்” என கம்ப்ளீட் பேக்காஜாக அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டது “கில்லி”.
“கில்லி” வெற்றியின் மூலம் ஒரு புதிய சூப்பர் ஸ்டாராக விஜயை கொண்டாடினார்கள் அவரது ரசிகர்கள். நடுநிலையான ரசிகர்களும் விஜயை ஒரு கமெர்ஷியல் ஹீரோவாக முழுமனதாய் ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படம் தான் குழந்தைகளையும், பெண்களையும் விஜய் பக்கம் இழுத்து வந்தது.
சரியாக 14 ஆண்டுகளுக்கு முன் இது நடந்தது. அன்று எதிர்பார்த்தது போலவேஇன்று விஜய் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்கிறார். ரஜினிக்கு அடுத்து என்றில்லாமல் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இருக்கிறார். இதற்கெல்லாம் விதை “கில்லி” போட்டது.