full screen background image
Search
Monday 23 December 2024
  • :
  • :
Latest Update

தினகரன் ஆதரவு எம் எல் ஏ க்கள் தகுதிநீக்கம்

அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு பின் டி.டி.வி.தினகரன் 19 எம்.எல்.ஏ.க்களுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார்.

அவர் 19 எம்.எல்.ஏ.க்களுடன் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அளித்து வரும் ஆதரவை திரும்பப் பெறுவதாக கடிதம் கொடுத்தார்.

முதல்வரை மாற்றுவது என்பது உள்கட்சி விவகாரம், எனவே நான் தலையிட முடியாது என்று கவர்னர் அவர்களிடம் தெரிவித்து விட்டார்.

என்றாலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள்.

இந்த நிலையில் 19 எம்.எல்.ஏ.க்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் தனபாலுக்கு அ.தி.மு.க. கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்தார்.

இதை ஏற்று சபாநாயகர் தனபால் 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பினார். அதில், தன்னை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு கூறியிருந்தார்.

நோட்டீசை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க அவகாசம் கோரி இருந்தனர். இதையடுத்து அவர்களுக்கு கடந்த 14-ந்தேதி வரை பதில் அளிக்க சபாநாயகர் தனபால் அவகாசம் அளித்து இருந்தார்.

அதன் பிறகும் எம்.எல்.ஏ.க்கள் நேரில் விளக்கம் அளிக்க வரவில்லை. அவர்கள் சார்பில் வெற்றிவேல் எம்.எல்.ஏ. மட்டும் சபாநாயகரை சந்தித்து பேசினார்.

இதற்கிடையே தினகரன் அணியில் இருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு திரும்பினார்.

இந்த நிலையில் சபாநாயகர் தனபால் திடீரென்று 18 எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவி விட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்து இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக சட்டமன்ற பேரவை செயலாளர் பூபதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

இந்திய அரசமைப்புச் சட்டம், பத்தாவது அட்டவணையின்படி ஏற்படுத்தப்பட்டுள்ள 1986-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் (கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல்) விதிகளின் கீழ், பேரவைத் தலைவர் கீழ்க்காணும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களை 18.9.2017 முதல் தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டதன் காரணமாக தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து விட்டார்கள்.

அவர்கள் பெயர் மற்றும் தொகுதிகள் வருமாறு:-

1. தங்க தமிழ்ச்செல்வன் (ஆண்டிப்பட்டி)

2. ஆர்.முருகன் (அரூர்)

3. சோ.மாரியப்பன் கென்னடி (மானாமதுரை)

4. டாக்டர் கே.கதிர்காமு (பெரியகுளம்)

5. சி.ஜெயந்தி பத்மநாபன் (குடியாத்தம்)

6. பி.பழனியப்பன் (பாப்பி ரெட்டிபட்டி)

7. செந்தில்பாலாஜி (அரவக்குறிச்சி)

8. எஸ்.முத்தையா (பரமக்குடி)

9. வெற்றிவேல் (பெரம்பூர்)

10. என்.ஜி.பார்த்திபன் (சோளிங்கர்)

11. மு.கோதண்டபாணி (திருப்போரூர்)

12. டி.ஏழுமலை (பூந்தமல்லி)

13. எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்)

14. ஆர்.தங்கதுரை (நிலக்கோட்டை)

15. ஆர்.பாலசுப்பிரமணி (ஆம்பூர்)

16. எதிர்கோட்டை எஸ்.ஜி. சுப்பிரமணியன் (சாத்தூர்)

17. ஆர்.சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்)

18. கே.உமாமகேஸ்வரி (விளாத்திகுளம்)

என்று கூறப்பட்டுள்ளது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் முதலில் புதுவை சொகுசு விடுதியில் யாரும் சந்திக்க முடியாதபடி தங்க வைக்கப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் கர்நாடக மாநிலம் குடகு மலையில் உள்ள விடுதிக்கு மாற்றப்பட்டு தங்கி உள்ளனர்.