சத்தீஷ்கார் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு மத்திய ரிசர்வ் படையினர் முகாமிட்டு நக்சலைட்டுகளை ஒடுக்கி வருகின்றனர். கலபதர் என்ற வனப்பகுதியில், ரிசர்வ் படையினர் அங்குள்ள மோசமான சாலையை சீரமைக்கும் பணியில் நேற்று ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென வந்த நக்சலைட்டுகள், ரிசர்வ் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதனால் ரிசர்வ் படையினர் நிலைகுலைந்தனர்.
இச்சம்பவத்தில் ரிசர்வ் படையினர் 25 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு பிறகு நக்சலைட்டுகள் வனப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டனர். 300க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக முதலில் தகவல் வெளியானது.
தாக்குதல் நடத்திய மாவோயிஸ்டுகள் ராக்கெட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், ஏகே 47, நாட்டு வெடிகுண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டதாக மத்திய ரிசர்வ் படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பலியான 25 துணை ராணுவ வீரர்களின் உடலுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சத்தீஷ்கர் மாநில முதல் மந்திரி ராமன் சிங், உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.