full screen background image
Search
Friday 8 November 2024
  • :
  • :
Latest Update

இந்தியா-ஆஸ்திரேலியாவின் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் நாளை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று 20 ஓவர் தொடரில் ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நாளை (10-ந்தேதி) நடக்கிறது.

இந்த ஆட்டத்திலும் வென்று இந்திய அணி 20 ஓவர் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்துடன் இருக்கிறது. முதல் ஆட்டத்தில் மழையால் வாய்ப்பு கிடைத்தாலும் நமது வீரர்களின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ள இந்திய அணி தனது ஆதிக்கத்தை நீட்டித்துக்கொள்ளும் நிலையில் உள்ளது.

பேட்டிங்கில் கேப்டன் வீராட்கோலி, ரோகித்சர்மா, ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோரும், பந்துவீச்சில் பும்ரா, புவனேஸ்வர்குமார், சஹால் ஆகியோரும் மிகவும் நல்ல நிலையில் உள்ளனர். இந்தப்போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே தெரிகிறது.

20 ஓவர் தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் வார்னர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு உள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்துவிட்டதால் அந்த அணி வீரர்கள் சமன் செய்ய மிகவும் கடுமையாக போராடுவார்கள்.

அந்த அணியின் பேட்டிங் பலவீனமாக இருக்கிறது. ஆரோன் பிஞ்ச் ஒருவர் தான் நிலைத்து நின்று ஆடி வருகிறார்.

இரு அணிகளும் நாளை மோதுவது 15-வது போட்டியாகும். இதுவரை நடந்த 14 ஆட்டத்தில் இந்தியா 10-ல், ஆஸ்திரேலியா 4-ல் வெற்றி பெற்றுள்ளன

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இரு அணி வீரர்கள் விவரம்:-

இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர் ஜாதவ், டோனி, மனிஷ் பாண்டே, ஹர்த்திக் பாண்ட்யா, புவனேஸ்வர்குமார், குல்தீப் யாதவ், யசுவேந்திர சஹால், பும்ரா, ராகுல், தினேஷ் கார்த்திக், ஆசிஷ் நெக்ரா, அக்‌ஷர்பட்டேல்.

ஆஸ்திரேலியா: வார்னர் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், ஹென்ரிக்ஸ், கிறிஸ்டியன், டிம்பெய்ன், நாதன் கோல்கட்டா, ஆண்ட்ரூ டை, ஆடம் ஜம்பா, ஜேசன் பெகரென்டார்ப், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன்