தென் மாவட்டங்களில் சாயம் படத்தை வெளியிட கூடாது ; இயக்குனர் ஆண்டனி சாமிக்கு மிரட்டல்

cinema news

ஒயிட் லேம்ப் புரொடக்சன் சார்பில் ஆண்டனி சாமி மற்றும் எஸ்பி ராமநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சாயம். இந்த படத்தை ஆண்டனி சாமி இயக்கியுள்ளார். விஜய் விஷ்வா கதாநாயகனாக நடிக்க, இந்தியா பாகிஸ்தான் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த ஷைனி கதாநாயகியாக நடித்துள்ளார் பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு, தென்னவன், செந்தி, எலிசெபத், பெஞ்சமின், மற்றும் பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.நாகா உதயன் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோர் ஒளிப்பதிவை மேற்கொள்ள, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். யுகபாரதி, விவேகா, அந்தோணி தாசன் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர் படிக்கும் காலத்திலேயே மாணவர்களிடம் ஜாதி உணர்வு புகுத்தப்பட்டால் அது அவர்களது எதிர்கால வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்தும் இந்த படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்தும் படக்குழுவினர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

படத்தின் ஹீரோ விஜய் விஷ்வா பேசும்போது,

“இந்த ஏழு வருட போராட்டத்தை பற்றி இங்கே குறிப்பிட வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் அது இயக்குனரின் வலி என்பதால் வெளியே தெரிய வேண்டியதாகி விட்டது. சாயம் என்கிற பெயரில் ஜாதியை பற்றியதாக இந்த படம் உருவாகி இருந்தாலும், எந்த ஒரு ஜாதியையும் உயர்த்தியோ தாழ்த்தியோ இந்தப்படத்தில் பேசப்படவில்லை.ஜாதி பார்க்க வேண்டாம்.. குறிப்பாக படிக்கும் வயதில் மாணவர்கள் ஜாதி பற்றி நினைக்காமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிற கருத்தை தான் இதில் அழுத்தமாக கூறியுள்ளார் இயக்குனர் ஆண்டனிசாமி.இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமயத்தில் இருந்து, படத்தில் நடித்தபோதும், இப்போது நடித்து முடித்த பின்பும் கூட மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.. நிச்சயம் எனது திரையுலக பயணத்தில் இந்த படம் எனக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை” என்று கூறினார்.

இயக்குனர் ஆண்டனி சாமி பேசும்போது,

“நூறு முறை இந்த படத்தை கைவிட்டு விடலாம் என நினைத்து, ஆனால் திரும்பத்திரும்ப ஆரம்பித்து, இப்போது இந்த படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்து விட்டோம். இந்த படத்திற்கான பிரச்சனைகளை சமாளிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏற்படவில்லை.. ஆனால் எதிர்ப்புகளை அதிகம் சந்தித்து விட்டோம்.. இப்படியெல்லாம் கூட எதிர்ப்பு வருமா எனும் விதமாக எதிர்பாராத திசையிலிருந்து எல்லாம் இந்த படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியதை  எங்களால் ஜீரணிக்க முடியவில்லை.குறிப்பாக இந்த படத்தை தென் மாவட்டங்களில் திரையிட வேண்டாம் என எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தென் மாவட்டத்தில் நடக்கும் கதைக்களம் என்பதால் தென் மாவட்ட தலைவர்களில் ஒருவரான பசுபதி பாண்டியன் அவர்களின் புகைப்படம் சில காட்சிகளில் பின்னணியில் இடம்பெறுவது போல செய்திருந்தோம்சென்சாரில் கூட, இந்த படத்தில் நாங்கள் பயன்படுத்தி இருந்த தலைவர்களின் புகைப்படங்களை எல்லாம் அவர்கள் உருவம் தெரியாதவாறு மறைக்கும்படி கூறினார்கள். கதைக்கும் காட்சிக்கும் தேவைப்பட்டது என்பதாலேயே அவர்களது படங்களை இடம்பெறச் செய்தோம்..ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டதால் வேறுவழியின்றி சென்சார் அதிகாரிகள் சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டியதாகிவிட்டது. இந்த படத்தை பார்த்துவிட்டு, எதற்காக அந்த தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றன, குறிப்பிட்ட வசனங்கள் இடம் பெற்றுள்ளன என்பதை ஊடகங்கள் மூலமாக வெளியே தெரிந்தால் நன்றாக இருக்கும்” என்று வேண்டுகோள் வைத்தார்.