தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் வி சி ரவீந்திரன் தயாரிப்பில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் புகழ் இயக்குநர் ராம்குமாரிடம் துணை இயக்குநராக பணியாற்றிய சஜி சலீம் இயக்கத்தில், விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண் உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘விடியும் வரை காத்திரு’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
படத்தின் முதன்மை கதாபாத்திரங்களாக விதார்த், விக்ராந்த், கார்த்திக் குமார், வருண், சந்திரன், மஹாலக்ஷ்மி ஷங்கர், குவின்சி, வலினா பிரான்சிஸ், நிம்மி இம்மானுவேல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
“ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு நக்சலைட், அவர்கள் வந்த கார் மாறி செல்கின்றனர். இந்த பயணத்தின் போது ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் மையக்கரு. இதில் கார்த்திக் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார், விக்ராந்த் நக்சலைட் ஆக வருகிறார், மற்றும் விதார்த் முக்கியமான டிரைவர் கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். ஒரு சுவாரசியமான நேரத்தில் இந்த பயணத்தில் இணைகிறார் வருண்,” என்று ரவீந்திரன் தெரிவித்தார்.
படத்தில் உள்ள அனைத்து கதாப்பாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று ரவீந்திரன் மேலும் கூறினார்.
“ஜூலை 23 அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது. படப்பிடிப்பு முழுவதும் கோயம்புத்தூரில் 30 நாட்கள் நடைபெறவுள்ளது. ஒரு நாள் இரவில் நடைபெறும் சம்பவங்கள் என்பதால் அதிகமான காட்சிகள் இரவில் படமாக்கப் படவுள்ளன. முழு வீச்சில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அக்டோபர் இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
இந்த படத்திற்காக இயக்குநர் சலீம் பல விதமான புதிய யுக்திகளை கையாள உள்ளார் என்று ரவீந்திரன் தெரிவித்தார்.
‘விடியும் வரை காத்திரு’ திரைப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை சந்தோஷ் மேற்கொள்கிறார். மேலும் இசை – அஸ்வத், படத்தொகுப்பு – ஜெரோம் ஆலென், கலை – நர்மதா வேணி, ஆடை வடிவமைப்பு – மின்னி பாஸ்டின் ஆகியோர் கையாள்கின்றனர். அசோகன் ஜி நிர்வாக தயாரிப்பாளர் ஆவார்.