பெண்ணியம் கொண்ட ‘அயலி’ தொடரை தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்: தயாரிப்பாளர் குஷ்மாவதி!

cinema news

அண்மைக்காலமாக வரும் வெப் சீரிஸ் என்று சொல்லப்படுகிற இணைய தொடர்களில், தணிக்கை இல்லை என்கிற சுதந்திரத்தை மட்டும் சாதகமாக எடுத்துக் கொண்டு செயற்கையான ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காக அதீத வன்முறை, பாலுணர்ச்சி மிகுந்து பார்ப்பவர்கள் முகம் சுழிக்கும்படியான காட்சிகள் வசனங்கள் என்று உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இவற்றுக்கு மத்தியில் அண்மையில் வந்த ‘அயலி’ என்கிற இணைய தொடர் ஒரு மக்களுக்கான தொடராக மாறி பார்த்தவர்கள் பாராட்டி அடுத்தவர்களுக்கு தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து பரிந்துரைக்கும் படியான ஒரு தொடராக வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தொடர் இணைய வழியை நோக்கி வெகுஜன மக்களை ஈர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டிருந்ததே இந்தச் சிறப்புக்குக் காரணம்.இது ஜீ5 தமிழில் வெளியானது.

தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி என்கிற பெண்மணி இதைத் தனது ‘எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்’
(Estrella stories)
நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார் என்பது கூடுதல் பெருமை.பெங்களூருக் காரரான இவர், தமிழில் கலாச்சார மண்வாசனை கொண்ட கதையைப் புரிந்து கொண்டு இதைத் தயாரிக்க முன் வந்ததற்காகப் பலராலும் பாராட்டப்படுகிறார்.

Imageபொறுப்பின்றி எடுக்கப்படும் செயற்கையான பாவனை கொண்ட தொடர்களில் இருந்து மாறுபட்டு ஆண்களும் பெண்களும் குடும்பத்தினரும் பார்க்கும்படியான ஒரு இணையத் தொடராக அயலி புகழ்பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இந்தியச் சூழலில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்படுவதை,புறக்கணிக்கப்படுவதை,அலட்சியப்படுத்தப்படுவதை பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையில் சந்தித்து வந்துள்ளனர்.அந்தக் கசப்பான அனுபவத்தைக் கடந்துவிட்டுத்
தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே இந்தத் தொடரைப் பார்க்கும் பெண்கள் அனைவருக்கும் இது தங்கள் வாழ்க்கையுடன் தொடர்பு படுத்திக் கொள்ளும் ஒன்றாக மனநெருக்கம் கொண்டுள்ளது. அதனால் தான் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றுள்ளது என்று கூற வேண்டும்.பார்ப்பவர்கள் எண்ணங்களில் ஒரு செயலி போல் தூண்டத்தக்கது,இயங்கத்தக்கது தான் இந்த ‘அயலி’
அப்படிப்பட்ட இந்த அயலி தொடரின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ஒரு வெற்றி மகிழ்வு பகிர்வு என்ற வகையில் ஒரு சந்திப்பு நிகழ்வு சென்னையில் நட்சத்திர ஓட்டலில் நடந்தது.அதில் இயக்குநர் பாரதிராஜா கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருடன் இயக்குநர்கள் பாண்டியராஜ், சுசீந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.மூவரும் தேசிய விருது பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அயலி’ தொடரில் நடித்த நடிப்புக் கலைஞர்களுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சிறப்பு விருந்தினர் இயக்குநர் பாரதிராஜா நினைவுக் கேடயங்களை வழங்கினார்.

இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் எஸ். குஷ்மாவதி,

முதலில் அயலி தொடரை தயாரிக்க தனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5 நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும் போது,

” இந்தத் தொடரை எடுத்து இருக்கும் இயக்குநர் இப்படியும் கதை சொல்லலாம் என்ற முத்திரையைப் பதிந்துவிட்டார். பெண்ணியம் சார்ந்த தொடரை ஒரு பெண்ணான நான் தயாரிக்க எனக்கு வாய்ப்பளித்தற்கு Zee5-க்கு நன்றி கூறுகிறேன்.

Ayali Web Series Success Meet Stills - Moviewingz.com

மேலும் அயலி போன்ற தொடரைத் தயாரித்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்.அயலி தொடரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்த மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் .
1990களில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரத்தில் இருக்கும் வீரப்பண்ணை என்னும் கிராமத்தில் நிகழும் கதையே இந்த அயலி. இந்த கிராம மக்கள் பல நூறு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கும் சம்பிரதாயங்களையும் கட்டுப்பாடுகளையும் கைவிடாமல் வாழ்கின்றனர். அங்கிருக்கும் பழமை வாதிகள் மக்களை வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்கிறார்கள்.

பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் படிக்கக் கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது, உடனே திருமணம் செய்ய வேண்டும் என்றெல்லாம் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். அதையும் மீறி 13 வயதுச் சிறுமி தமிழு (தமிழ்ச் செல்வி) படிக்க நினைக்கிறாள். தன்னைப் பற்றி மட்டும் யோசிக்காமல், தன் சக தோழிகளின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற ஆசைப்படும் தமிழின் கனவு என்ன ஆனது என்பதே கதை.

ஒரு சமூகம் என்பது அதில் உள்ள பெண்களைச் சார்ந்தது, அப்பெண்ணும் படித்தால் மட்டுமே அந்தச் சமூகம் வளரும் என்ற கருத்தை அழகாக, ஆணித்தரமாக, யாரையும் புண்படுத்தாமல் அனைவருக்கும் புரியுமாறு சொன்னதில் இயக்குநர் முத்துக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார் .

தொடரின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்ககூடியதாக காட்சியமைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அவர்களுக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும்.
இத்தொடரில் நடித்த அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், சிங்கம்புலி, TSR, லிங்கா, லவ்லின், காயத்திரி, தாரா மற்றும் இதில் நடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.

அனைவரும் அவர்களின் கதாபாத்திரத்தை நேர்த்தியாக, எங்கும் மிகைப்படுத்தாமல், உணர்வு பூர்வமாக நடித்ததே இத்தொடரின் வெற்றிக்கு காரணம்” என்றார்.

ஒரு தயாரிப்பாளராக இருந்து கொண்டு தான் தயாரித்த படைப்பில் பணியாற்றிய அனைவரையும் சமமாக மதித்து உரிய அங்கீகாரம் கொடுத்துப் பாராட்டியது படக்குழுவினரை நெகிழ வைத்தது.

நிகழ்ச்சியில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது,

“இந்த கூட்டு முயற்சியில் அனைவரும் சிறப்பாகப் பணியாற்றி இருந்தார்கள். இயக்குநரைப் பாராட்டினால் அனைவரையும் பாராட்டினது போலத்தான்.அனைவரையும் பாராட்டினால் இயக்குநரைப் பாராட்டியது போல்தான்.இதில் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் என ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.மற்ற படங்களில் காமெடியனாக நடித்தவர்களைக் கூட இதில் கேரக்டர் ஆகப் பயன்படுத்தி யிருக்கின்றார்கள்.
பார்த்தவர்களுக்கு நல்ல அனுபவமாக இருந்தது.கேமராமேன், ஆர்ட் டைரக்டர், எடிட்டர் என எல்லாருமே சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்கள். 55 நாட்களில் இந்தத் தொடரை முடித்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு படத்துக்கான கால அளவு. இவ்வளவு விரைவாக முடித்தது சரியான திட்டமிடல் இருந்ததால்தான் சாத்தியப்பட்டிருக்க வேண்டும்.இதைப் பார்த்துவிட்டு என் உதவியாளர்களிடம் எல்லாம் நாம் பார்க்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்தப் பட குழுவில் இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வெளியிட்ட zee5 நிறுவனத்திற்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாரதிராஜா பேசும்போது,

” பூப்போல பொண்ணு பூப்படஞ்சா அவளைப் பூட்டுங்க வச்சி சாரைக்குள்ள “என்று ஒரு பாட்டு இருக்கிறது. இந்த சின்ன விஷயத்தை பெரிதாக்கி கொண்டு சமைந்த பெண்களை நமது சமுதாயத்தில் வெளியே விடுவதில்லை. அதையெல்லாம் உடைக்க வேண்டும் என்று தான் நான் நிறைய படங்களில் என்னால் முடிந்ததைச் சொல்லி இருக்கிறேன்.என்னுடைய படங்களில் பெண்கள் பூப்படைவதும் பூப்படைந்த பெண்கள் வெளியே வருவதையும் சொல்லி இருப்பேன்.

பல படங்களில் பெண்ணுரிமை பேச வைத்திருப்பேன். இந்தச் சிறப்பான தொடரை இயக்கிய இயக்குநர் முத்துக்குமாருக்கும் இந்தக் கதையை ஒப்புக்கொண்டு பெங்களூரில் இருந்து வந்து தயாரித்துள்ள தயாரிப்பாளர் குஷ்மாவதிக்கும் பணியாற்றிய கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்”என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசத் தொடங்கும் முன்,

யாரையும் முகம் பார்க்காமல் பேசக்கூடாது என்றவர்,முதலில் இந்தப் படக்குழுவினை பார்க்க விரும்புகிறேன் என்று கூறி அனைவரையும் அழைத்து ஒவ்வொருவருக்கும் கைகுலுக்கிப் பாராட்டி வாழ்த்தினார்.

Ayali Web Series Success Meet Stills - Moviewingz.com

சுசீந்திரன் பேசும்போது,
“இது ஒரு ஆவணப்படம். இது கொஞ்சம் தவறி இருந்தாலும் முழு ஆவணப் படமாக மாறி இருக்கும்.அப்படி மாறி இருந்தால் எல்லாராலும் ரசிக்க முடியாது .ஆனால் இதை சுவாரஸ்யமாக அனைவரும் ரசிக்கும்படி ஒரு படைப்பாக உருவாக்கி வழங்கியிருந்தார் இயக்குநர். ஒவ்வொரு எபிசோடின் முடிவிலும் அடுத்தது பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.அப்படி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.

கதாநாயகியாக நடித்திருந்த நடிகை அபியை என் மகள் மாதிரி நினைத்துச் சொல்கிறேன். இந்த மேடையில்தான் நான் இதைச் சொல்ல வேண்டும். உனக்கு நிச்சயமாக தேசிய விருது கிடைக்கும். மாநில விருது 100% கிடைக்கும்.அவ்வளவு அற்புதமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அபிக்கு 17 வயது தான் ஆகிறது .இந்தச் சின்ன வயதில் இவ்வளவு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். இது மாதிரி வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது. ஆனால் அபி உன்னை யாரும் கமர்சியல் படங்களுக்குக் கதாநாயகியாக அழைக்க மாட்டார்கள்.
இதைவிட அடுத்த ஒரு படம் செய்ய வேண்டும் என்றால் இதைவிட சிறப்பான ஒரு படம் செய்ய வேண்டும், வெற்றி பெற வேண்டும். தொடர்ந்து வெற்றியைக் கொடுக்க வேண்டும். உனது பலமும் பலவீனமும் உனக்குத் தெரியும். நீயே அதை உடைத்து கடந்து வெளியே வர வேண்டும்.

அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொரு படமும் வெற்றியாகவே கொடுக்க வேண்டும் .ஒரு படி தவறிவிட்டாலும் பெரிய தோல்வி ஆகிவிடும்.உலகத்தில் ஜெயித்தவர்கள் அனைவரும் உயரம் குறைவானவர்கள்தான் இங்கே இருக்கும் பாரதிராஜா அவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

இந்த அயலி தொடரை எடுத்திருக்கும் தயாரிப்பாளர் குஷ்மாவதியை நிச்சயமாகப் பாராட்ட வேண்டும்.இந்த மாதிரி ஒரு கதையைத் தயாரிக்க வேண்டும் என்று நினைப்பதற்கு சிந்தனை செய்வதற்கு தேர்ந்தெடுப்பதற்கே ஒரு ரசனை, தைரியம் வர வேண்டும். இதை ஏற்றுக்கொள்வார்களா இல்லையா என்றெல்லாம் யோசிப்பார்கள். ஒரு தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் நல்ல புரிதல் வேண்டும்.நல்ல இணக்கம் வேண்டும். ஏனென்றால் நான் வெண்ணிலா கபடிக்குழு கதையை பலரிடம் கூறினேன். அப்படி நான் கூறிய போது பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லவில்லை. யாருக்கும் புரியவில்லை.

வெண்ணிலா கபடி குழு தயாரிப்பாளர் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன். அதனால் அந்தக் கதை அவருக்குப் புரிந்தது ,அவர் தயாரித்தார்.
தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் உள்ள அந்த புரிதல் அந்த நல்லிணக்கம் சரியாக இருந்ததால் தான் இணைந்து இப்படிப்பட்ட ஒரு படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். சினிமாவில் அந்த நல்லிணக்கம் மிக மிக முக்கியமானது.அது இந்த படைப்பைத் திரையில் பார்க்கும் போது தெரிகிறது.

தமிழில் வெப் சீரிஸ் வெற்றி பெற்றதில்லை என்று சொல்லலாம். ஜீ டிவியைப் பொறுத்தவரை அவர்களின் முதல் வெற்றி விலங்கு தொடர். அடுத்தது அயலி என்று சொல்லலாம்.

பாரதிராஜா அவர்களை வைத்துக் கொண்டு இதே மேடையில் சொல்கிறேன். மண்ணின் மைந்தர் என்றால் அவர்தான். அவருடைய வேர்கள் தான் நாம். அயலி இயக்குநர் முத்துக்குமார். அவர் மாதிரி வளர்ந்து பெரிய இயக்குநராக வர வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.

இப்படி ஒரு கதை ரசனை உள்ள தயாரிப்பாளராக பலராலும் பாராட்டப்பட்டவராக தயாரிப்பாளர் எஸ்.குஷ்மாவதி தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ளார் எனலாம்.அவரது ‘எஸ்ட்ரெல்லாஸ் ஸ்டோரீஸ்’ நிறுவனத்தின் சார்பில் தரமான கதை உள்ள படைப்புகளை எதிர்பார்க்கலாம்