full screen background image
Search
Thursday 7 November 2024
  • :
  • :
Latest Update

வேலன்-MOVIE REVIEW

பொள்ளாச்சியில் செல்வந்தர் பிரபுக்கு மகனாக இருக்கிறார் முகேன். ஒழுங்காக படிக்காமல், பன்னிரெண்டாம் வகுப்பை 3 முறை எழுதி பாஸ் செய்ததால் இவர் மீது கோபப்பட்டு அதிகம் பேசாமல் இருக்கிறார் பிரபு. ஒருவழியாக கல்லூரிக்கு செல்லும் முகேன், அங்கு நாயகி மீனாட்சியை பார்த்ததும் காதல் வயப்படுகிறார்.மீனாட்சி கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் தன் காதலை மலையாளத்தில் ஒருவரை வைத்து கடிதம் எழுதி கொடுக்கிறார். அந்த கடித்தால் முகேனுக்கும், அவரது காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதே சமயம் கேரளா எம்.எல்.ஏ. ஹரிஸ் பெரடி, பிரபு மீது இருக்கும் பகையை தீர்க்க முயற்சி செய்கிறார்.இறுதியில் முகேன் காதலியை கரம்பிடித்தாரா? இல்லையா? ஹரிஸ் பெரடிக்கும் பிரவுக்கும் இடையே இருக்கும் பிரச்சனை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த முகேன், இப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். முகேனுக்கு இது சிறப்பான அறிமுகம் என்றே சொல்லலாம். முதல் படம் என்று தெரியாதளவிற்கு சிறப்பாக நடிப்பை கொடுத்திருக்கிறார். காமெடி, நடனம், ஆக்‌ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். காதலுக்காக உருகுவது, தந்தை பாசத்தில் சண்டை போடுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி கோவிந்தராஜன், அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முகேனுடன் செல்லமாக சண்டைபோட்டு கவனிக்க வைத்திருக்கிறார் ப்ரிகிடா. முதல் பாதியில் ராகுலும், இரண்டாம் பாதியில் சூரியும் காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்கள். பிரபு, ஹரிஸ் பெரடி, தம்பி ராமையா ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

காதல், காமெடி, பாசம் என்று கமர்சியல் அம்சத்துடன் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் கவின். நேர்த்தியான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை மிகவும் கலர்ப்புல்லாக இவரது கேமரா படம் பிடித்து இருக்கிறது. கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக முகேன் பாடிய சத்தியமா என்ற பாடல் முணுமுணுக்க வைத்திருக்கிறது.