ஆராய்ச்சியாளரான ஜார்ஜ் மரியான், விலங்குகளை வைத்து மரபணு சோதனை நடத்தி வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் குடியிருக்கும் சதிஸ் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரை ஜார்ஜ் மரியான் வளர்த்து வரும் நாய் சதிஸை கடித்து விடுகிறது.
இதிலிருந்து நாயின் குணாதிசயங்கள் சதிசுக்கு வருகிறது. இதனால், சதிஸ் வாழ்க்கையில் பிரச்சனைகளும் மாற்றங்களும் ஏற்படுகிறது. மாற்று மருந்து தயாரான நிலையில் கடித்த நாய் காணாமல் போகிறது. இறுதியில் நாய் கிடைத்ததா? சதிஸ் மனிதனாக மாறினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வந்த சதிஸ் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியை விட சென்டிமென்ட், காதல், நடனம் என தனது திறமையை நிரூபித்திருக்கிறார். நாயாக குணாதிசயங்கள் வந்தவுடன் நாயைப் போல் சைகை செய்வது, பின்னர் உணர்ந்து வருந்துவது என நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் பவித்ரா லட்சுமி அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் வசனம் பேசி சிரிக்க வைத்திருக்கிறார். நாய்க்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் மிர்ச்சி சிவா ஒரு சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் இயக்குனர் கிஷோர் ராஜ்குமார். மெதுவாக ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக வேகமெடுத்து இறுதியில் சிரிப்போடு முடித்து இருக்கிறார். கதாபாத்திரங்களில் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். குறிப்பாக சதிஸின் திறமையை வெளியே கொண்டு வந்திருக்கிறார்.அஜீஷும் மற்றும் அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பு. குறிப்பாக பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவோடு பார்க்கும் பொழுது கண்களுக்கு மிகவும் பிரஷாக காட்சி அளிக்கிறது.