ரேடியோ ஜாக்கி வேலை பார்த்து வருகிறார் அஸ்வின். இவருடைய அப்பா அவந்திகா மிஸ்ராவை அஸ்வினுக்காக பெண் பார்க்கிறார். எழுத்தாளராக பணியாற்றி வரும் அவந்திகா மிஸ்ரா, தனது கணவர் காதல் தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்.
இதனால் அஸ்வின் தனக்கு காதல் கதை இருப்பதாகவும் தனது காதலி தேஜு அஸ்வினி என்றும் கூறுகிறார். தேஜு அஸ்வினியை அவந்திகா பார்க்க வேண்டும் கூற, தேஜு அஸ்வினியுடன் அஸ்வின் ஒரு டீல் பேசி இருவரையும் சந்திக்க வைக்கிறார். ஒரு கட்டத்தில் தேஜு அஸ்வினி மீது காதல் வயப்படுகிறார் அஸ்வின்.
இறுதியில், நாயகன் அஸ்வின் தனக்கு பெண் பார்த்த அவந்திகா மிஸ்ராவை திருமணம் செய்தாரா? காதலிக்க ஆரம்பித்த தேஜு அஸ்வினியை திருமணம் செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அஸ்வின், காதல் கதைக்கு ஏற்ற தேர்வு. அஸ்வினும் காதல் காட்சிகளில் ஓரளவிற்கு நடிக்க முயற்சித்திருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகிகளாக வரும் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா மிஸ்ரா ஆகியோர் அழகாக வந்து சொன்ன வேலையை செய்திருக்கிறார்கள். சின்னத்திரை நிகழ்ச்சியில் கைகொடுத்த அஸ்வின், புகழ் காம்பினேஷன் இந்த படத்தில் பெரிய அளவில் ஒர்க்கவுட் ஆகவில்லை.காதல் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் ஹரிஹரன். முதல் பாதி கவர்ந்த அளவிற்கு இரண்டாம் பாதி கவரவில்லை. நிறைய காதல் காட்சிகள் படத்தில் வந்தாலும், பெரியதாக மனதில் ஒட்டவில்லை என்பது வருத்தம். காட்சிகளில் இடம் பெறும் வசனங்கள் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. ஒரு சில காட்சிகள் பார்க்கும் போது, அஜித் நடித்த வாலி மற்றும் சூர்யாவின் பூவெல்லாம் கேட்டுப்பார் படங்களின் காட்சிகள் நியாபகப்படுத்துகிறது.விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.