full screen background image
Search
Tuesday 24 December 2024
  • :
  • :
Latest Update

சல்லியர்கள் பட இயக்குநர் கிட்டு வித்தை தெரிந்த ஆள் தான் ; இயக்குநர் சீனுராமசாமி பாராட்டு

ICW நிறுவனம் சார்பில் கலைமாமணி சேது கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது.

சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், ஆர்மி வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்ட தரணி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நாட்டுப்புற கலைஞர்களின் பறை இசையுடன் இந்த விழா துவங்கியது.

இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது,

“உண்மைக்கு நெருக்கமான இந்த நிகழ்வுகளை சினிமாவாக எடுக்க தைரியம் வேண்டும். அதை பணம் போட்டு தயாரிக்க இன்னும் அதிக தைரியம் வேண்டும்.. சவாலான இந்த விஷயத்தை இயக்குநர் கிட்டு, கருணாஸ் இருவரும் இணைந்து சாதித்துள்ளனர். மேதகு படத்திற்கு பிறகு இந்த படத்தில் கிட்டு நிறைய இம்ப்ரூவ் பண்ணியிருக்கிறார். இந்த படத்திற்கு பின்னணி இசை ரொம்பவே அழுத்தமாக அமைந்துள்ளது” என்று வாழ்த்தினார்.

அடுத்ததாக வரவேற்றுப் பேசிய இயக்குனர் கிட்டு, இந்த படத்தில் பணிபுரிந்த அனைவரையும் மேடைக்கு அழைத்து அறிமுகப்படுத்தி கவுரவித்தார். மேலும் மற்றவர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும் என்றும் நினைவிருக்கும் வரை நன்றி மறக்கக்கூடாது என தனது பெற்றோர் சொன்னதை தொடர்ந்து கடைபிடித்து வருவதாக கூறினார்.

பாடல் காட்சி மற்றும் டிரைலரை பார்த்த அனைவருமே கதாநாயகி சத்யா தேவியின் நடிப்பை தவறாமல் பாராட்டினார்கள். நாயகி சத்யாதேவி பேசும்போது, “இயக்குனர் கிட்டு என்ன சொன்னாரோ அதை சரியாக செய்துள்ளேன் என நினைக்கிறேன்” என்று கூறினார்.

சத்யா தேவியின் அர்ப்பணிப்பு உணர்வு பற்றி இயக்குனர் கிட்டு பேசும்போது,
“இவர் டிசிஎஸ் நிறுவனத்தில், தான் பார்த்து வந்த வேலையை ரிசைன் செய்துவிட்டு, இந்த படத்தில் நடிக்க வந்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் இந்த படத்திற்காக ரிகர்சலில் கலந்து கொண்டார். இவரது கதாபாத்திரம் ஒரு மருத்துவர் என்பதால், இவருக்கு மருத்துவம், ஆபரேஷன் குறித்து நிஜமான மருத்துவர்களிடம் இருந்து பாடம் எடுக்கப்பட்டது. அதுமட்டுமல்ல அறுவை சிகிச்சை சம்பந்தப்பட்ட காட்சிகளில் தையல் போட வேண்டும் என்பதற்காக ரிகர்சல் நாட்களில் கடைக்குச்சென்று லெக்பீஸ் வாங்கி வந்து அதை கிழித்து அதில் தைத்து பழக ஆரம்பித்தார். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்” என்று பாராட்டினார்.

அதைத்தொடர்ந்து படத்தின் நாயகன் மகேந்திரன் பேசும்போது,
“நான் மகான் அல்ல படத்தில் நீங்கள் பார்த்த அதே மகேந்திரன் தான்.. ஆனால் இந்த படத்தில் என்னை டோட்டலாக இயக்குனர் கிட்டு மாற்றிவிட்டார். எப்போதுமே ஆக்ரோசமாக நடித்த என்னை, குறிப்பாக எந்த ஒரு காட்சி என்றாலும் புருவத்தை தூக்கிய பழக்கப்பட்ட என்னை, ஒன்றரை மாதம் பயிற்சி அளித்து இந்த கதாபாத்திரமாகவே மாற்றினார்” என்று கூறினார்.

அசுரன் படத்தில் ஒரு அறிமுக நடிகராக அனைவரையும் கவர்ந்த கருணாஸின் மகன் கென் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். அவர் பேசும்போது, “என்னுடைய நண்பன் ஈஸ்வர் தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர்.. நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன்.. இந்த சல்லியர்கள் படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதைப்பற்றி புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இயக்குனர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதன்பிறகு கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம். இந்தப்படத்தில் நடிகர் திருமுருகன் சிங்கள ராணுவ வீரனாக வில்லனாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஒரு காட்சியை அவருக்கு திரையிட்டு காட்டியதும் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டார்” என்று கூறினார்.

கென்னின் நண்பனும் இசையமைப்பாளருமான ஈஸ்வர் பேசும்போது,
“எனக்கு இசையமைப்பதில்தான் நாட்டம் உண்டு என்பது கென்னுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதற்கு தொடர்பில்லாமல் நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு இந்தப்படத்தில் இசையமைக்க வரச்சொன்னார். என்னை இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய கருணாஸ் அங்கிள் மற்றும் இயக்குனர் கிட்டு இருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திருமுருகனை வரவேற்று இயக்குனர் திட்டு பேசும்போது, “இந்த படத்திற்குள் இவர் வந்ததும் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் உதவியாக இருந்து, கிட்டத்தட்ட ஸ்கிரிப்ட்டையே மாற்றிவிட்டார்” என்று பாராட்டினார்.

அதை தொடர்ந்து பேசிய திருமுருகன்,
“இதுவரை மிகப்பெரிய வெற்றிபெற்ற பல படங்களில் நான் துணை இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி உள்ளேன். ஆனால் யாருமே என் பெயரை இதுவரை வெளியே சொன்னதில்லை. ஈழத்தில் துயரப்பட்டவர்களை பார்த்து நான் கதறி அழுது இருக்கிறேன். ஆனால் இந்த படத்தில் அவர்களை துயரப்படுத்தும் ஒருவராக நடித்துள்ளேன். இந்த படத்தில் கருணாஸ் நடித்த ஒரு காட்சியை பார்த்தபோது என்னை அறியாமல் கதறி விட்டேன். படம் பார்க்கும் அனைவருக்குமே இந்த அழுகை நிச்சயம் வரும்” என்றார்.

இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது,
“வசிப்பிடம் இழந்து வாழும் ஆன்மாக்கள் இயக்குனர் கிட்டுவையும் கருணாஸையும் பாராட்டுவார்கள்.. மருத்துவராக இருப்பதே மாபெரும் போராட்டம். அதிலும் எதிரிகள் சுற்றிலும் இருக்கையில் மண்ணுக்காக போராடிய மனிதர்களை காப்பாற்றும் மருத்துவர்களின் பணி ரொம்பவே சவாலானது. பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வுக்காக போராடிய, சமூகத்திற்காக போராடிய அந்த மருத்துவர்களை பெருமைப்படுத்திய கருணாஸ், கிட்டு இருவருக்கும் என் நன்றிகள்..

23 நாட்களில் இந்த படத்தை எடுத்துள்ளார் என்றால் இயக்குநர் கிட்டு வித்தை தெரிந்த ஆள் தான். பிரபலமாக இருப்பது, வேறு புகழோடு இருப்பது வேறு.. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.. இதில் கருணாஸ் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.. கருணாஸுக்கு இது அடுத்த கட்டம்.. அவரது எல்லை விரிவடைந்து விட்டது. இந்த படத்தின் விளம்பரத்தில் என்னையும் இணைத்துக் கொண்டால் ஒரு அணில் போல என்னால் ஆன உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பேசும்போது,
“இந்த படத்தின் இயக்குனர் பெயரை கேட்டபோது முன்பு கிட்டு அண்ணாவுடன் பழகிய ஞாபகங்கள் நினைவுக்கு வந்து விட்டன. இந்த படம் கடந்த காலத்தைத் திரும்பிப்பார்க்க வைத்துவிட்டது. எண்பதுகளின் மத்தியில் இலங்கையில் போர் நடைபெற்றபோது காயம்பட்ட பெண் போராளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் நான் ஈடுபட்டிருந்தேன். அந்த ஞாபகம் வந்துவிட்டது.

பிரதமராக இந்திரா காந்தி இருந்தவரை விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக தான் இருந்தார். எப்படி பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேசை தனித்தனியாக பிரித்து கொடுத்தாரோ, அதேபோல தனி ஈழத்தை பிரித்து தரும் எண்ணத்தில்தான் அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அவரது மரணம் எதிர்பாராத ஒரு தேக்கத்தை கொண்டு வந்துவிட்டது. அவரது மகன் ராஜீவ் காந்தியும் அதை நோக்கித்தான் நகர்ந்தார். ஆனால் இங்குள்ள சிலர் தங்களது சுயநலம் காரணமாக தனி ஈழம் பெற்றுத்தந்து விட்டால் அதேபோல இங்கு இருப்பவர்கள் தனித்தமிழ்நாடு கேட்க ஆரம்பித்து விடுவார்கள் என்கிற குறுகிய நோக்கத்தில் சிந்தித்து ராஜீவ்காந்தியை திசைதிருப்பி விட்டனர். அதன் காரணமாக தனி ஈழம் என்கிற கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது. இங்கே தமிழர் வரலாறு குறித்த அறிவு பல பேருக்கு இல்லை.. இதுபோன்ற பல படங்கள் வந்தால்தான் அந்த நிலை மாறும். இந்த சல்லியர்கள் படம் பட்டி தொட்டி எங்கும் வெளியிட உதவி செய்ய தயாராக இருக்கிறேன்” என்றார்.

இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் பேசும்போது,
“இந்த படத்திற்கு இசை அமைத்துள்ள கென் கைக்குழந்தையாக இருந்த சமயத்தில் இருந்தே எனக்கு நன்றாக தெரியும். இந்த படத்தை வேண்டாமென அவர் சொல்லி விடுவாரோ என நினைத்தேன். ஆனால் சிறுவயதிலேயே இப்படிப்பட்ட ஒரு படத்துக்கு இசை அமைத்தது ஆச்சரியமான விஷயம்தான். ஒரு கதையை விட இதுபோன்ற நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் பார்க்கும்போது உலகில் எந்த ஒரு மூலையில் இருக்கும் ஒரு ரசிகனும் படம் பார்த்தால் சரியானதாக இருக்க வேண்டும். அந்த அளவுக்கு இதை ஆய்வுசெய்து படமாக இயக்கி உள்ளார் இயக்குநர் கிட்டு. நடிகர் கருணாஸ் ஒருவருடன் இணைந்து பயணிக்கிறார் என்றால் அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு குவாலிட்டி நிச்சயம் இருக்கிறது என புரிந்து கொள்ளலாம்” என்று கூறினார்.

நடிகர் சேது கருணாஸ் பேசும்போது,
“நான்கு நாட்களுக்கு முன்பு துபாயில் இருந்த சமயத்தில்தான் இயக்குநர் கிட்டு என்னை அழைத்து, மாவீரர் பிறந்தநாளில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தினால் நன்றாக இருக்கும் என கேட்டுக்கொண்டார். அப்படி குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த விழா. இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். ஆனால் இனிவரும் நாட்களில் எல்லாவிதமான தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும்.

இந்த இடத்தில் முக்கியமான ஒன்றை கூற கடமைப்பட்டுள்ளேன். இங்கே தமிழகத்தில் விஸ்காம் படித்த மாணவர்களுக்கு படிப்பை முடித்தபின் நல்ல தளம் கிடைப்பதில்லை. வருடத்திற்கு 2500 மாணவர்கள் படித்துவிட்டு வெளிவருகின்றனர். இவர்களுக்கு உதவிசெய்ய வேண்டிய சினிமாவில் உள்ள தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் பஜ்ஜி, வடை சாப்பிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.

1985லிருந்து ஈழத்தமிழர்களுக்காக என்னால் இயன்றவரை ஏதாவது செய்துகொண்டுதான் இருக்கிறேன். எனது சொந்தப்பணத்தில் 153 இலங்கை அகதி மாணவர்களை படிக்க வைத்தேன் என்பதை பெருமையாக சொல்கிறேன். இன்று அவர்கள் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் கூட பணிபுரிந்து வருகிறார்கள். இப்படி ஒரு கட்டமைப்பை உருவாக்கி பின்னால் வரும் கென், ஈஸ்வர் போன்ற இளைஞர்களிடம் கொடுத்து விடுகிறேன்.. அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும். இதுதான் என்னுடைய விஷன்.. இதற்கு எவ்வளவு செலவானாலும் பத்து பேரிடம் பிச்சை எடுத்தாவது அந்த பணத்தை கொடுப்பேன்” என்று கூறினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களான கொளத்தூர் மணி, பெ.மணியரசன், திருமுருகன் காந்தி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் போன்றவர்களும் இந்த சல்லியர்கள் படத்தை வாழ்த்தி பேசினார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு ; சேது கருணாஸ் & கரிகாலன்

இணை தயாரிப்பு ; நேசமணி ராஜேந்திரன் & ராவணன் குமார்

இயக்கம் ; கிட்டு

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

இசை , பிரவீண் குமார்

படத்தொகுப்பு ; சி,எம் இளங்கோவன்

கலை இயக்குனர் ; முஜிபூர் ரஹ்மான்

ஆக்சன் ; எஸ்.ஆர்.சரவணன்

விஎப்எக்ஸ் ; சதீஷ் சேகர்

மக்கள் தொடர்பு ; A.ஜான்