சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். பாரதிராஜாவின் உதவியாளரான இவர், மண் மணம் மாறாமல் அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.ஆர்.எஸ். இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், திரைப்படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார்.
