தமிழ் திரையிசை ரசிகர்களிடையே ‘மாயோன்’ படத்தில் இடம்பெற்ற ‘மாயோனே..’ எனத் தொடங்கும் முதல் பாடலுக்கு பெரும் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர், இந்த படத்தில் இடம்பெறும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத்தொடங்கும் இரண்டாவது பாடலை வெளியிட்டிருக்கிறார்கள்.டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. இதில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என். கிஷோர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்தப் படத்தில் இசைஞானி இளையராஜா எழுதி, இசை அமைத்த ‘சிங்கார மதன மோகனா..’ என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீ பிரகாஷ் பாடியிருக்கிறார்.மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை பாசூரங்களைப் பாடி மக்கள் இறைவனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து தை திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாட தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்ற வகையில் அனைவரின் இல்லத்திலும் ஒலிக்க கூடிய பாடலாக ‘சிங்கார மதன மோகனா.. பாடல் உருவாகியிருக்கிறது.
நாம சங்கீர்த்தனம் பாணியில் தயாராகியிருக்கும் இந்த கிருஷ்ண பகவானைப் பற்றிய பக்தி பாடலைக் கேட்கும் பொழுதே இணைந்து பாடவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. இந்தப் பாடல் பொங்கல் திருநாளன்று இணையத்தில் வெளியாகிறது.‘மாயோனே. மணிவண்ணா..’ எனத் தொடங்கும் பாடல் வெளியான குறுகிய காலத்திற்குள் ஒன்றரை மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அதேபோன்றதொரு சாதனையை இசைஞானி இசையில் பாடகி ஸ்ரீநிதி பிரகாஷின் இனிய குரலில் வெளியாகிவிருக்கும் ‘சிங்கார மதனமோகனா..’ என்ற பாடலும் படைக்கும்.
இளைய தலைமுறையினரிடத்தில் ‘லவ் ஆந்தம்’, ‘யூத் ஆந்தம்’, ‘ப்ரண்ட்ஸ் ஆந்தம்’, ‘பார்ட்டி ஆந்தம்’, ‘ராக் ஆந்தம்’ போன்ற பல ஆந்தம் பாடல்கள் பெற்ற வரவேற்பை, பாடகி ஸ்ரீநிதி ஸ்ரீபிரகாசின் ஆன்மீக குரலில் வெளியாகியிருக்கும் ‘சிங்கார மதன மோகனா..’ எனத் தொடங்கும் ‘கிருஷ்ணர் ஆந்தம்’ பாடலும் பெறும் என திரையிசை ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.தமிழ் திரையிசை உலகில் கிருஷ்ணரைப்பற்றிய பாடலாக ‘முகுந்தா..முகுந்தா..’ என்ற தசாவதார பட பாடல் இடம்பிடித்திருந்தது. பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ‘சிங்கார மதன மோகனா.. ’என்ற பாடல் விரைவில் அனைவரின் மனதிலும், கிருஷ்ண பகவானைப் பற்றிய ஒப்பில்லா துதிப் பாடலாக இடம்பிடித்து புதிய சாதனையை படைக்கும்.