டூப் போடாமல் ஸ்டண்ட் காட்சியில் நடித்த நடிகர் சோமுவுக்கு நடிகர் விஷால் பாராட்டு!

cinema news
0
(0)
சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.
 இதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்து இருப்பார். இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார்.
 
 இந்தப் படத்தில் ஒரு முக்கியமான  காட்சியில் நடிகர் விஷால்  சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும். அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில்  அடிபட்டு  இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
 
படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால்  முதலில்  சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம்  என்று இயக்குநர் சரவணன்  திட்டமிட்டு இருந்தார்.
 
படப்பிடிப்பில் ஏனோ சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர்   நினைத்தார்.
 
ஆனால்  சோமு  சினிமாவுக்கு மிகவும் புதிது .அவர் சண்டைப் பயிற்சி மற்றும் இது போன்ற சாகச காட்சிகள் செய்வதில் பரிச்சயம் இல்லாதவர். இருந்தாலும் இயக்குநர்  சரவணன் நடிகர் சோமுவிடம்  இந்தக் காட்சியைப் பற்றி விளக்கிக் கூறிய பொழுது புதுமுக நடிகர் சோமு மிகுந்த ஆர்வத்துடனும் நான் இதைச் செய்கிறேன் என்று துணிச்சலுடன் முன்வந்தார்.
 
 இந்தக் காட்சியைப் படம் பிடித்த பொழுது   சோமு எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நீண்ட காட்சியில் நடிப்பதைப் பார்த்த விஷால் மிகவும்  வருத்தப்பட்டார்.உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து தன்னுடைய காரில் உள்ள தனது சொந்த பாதுகாப்பு சாதனங்கள், முன்புறம் போடும் பேட், பின்புறம் போடும் பேட் மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் அதை தன் கையாலேயே சோமுவுக்கு அணிவித்துள்ளார். எந்தவித ஒரு பின்பலமும் இல்லாமல் ஒரு குணசித்திர நடிகராக வந்த தனக்கு ஒரு முன்னணி  கதாநாயக நடிகரே தன் கையால் இதுபோன்ற உதவிகளைச் செய்ததைக் கண்ட சோமு, மிகவும் மனம் நெகிழ்ந்து போனார்.
 அதுமட்டுமல்லாமல் அன்று முதல் அவர் விஷாலின் தீவிர ரசிகராக மாறினார். ரசிகருக்கும் ஒருபடி மேலே போய் விஷாலைத் தன் சொந்த  அண்ணனாகக் கருதி அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்.
 
படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடைய ஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பரிசாகப் பெற்றார்.
 
படப்பிடிப்பிடத்தில்
 கூட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் நடிகர் விஷால் , ”  யாருடா நீ  இத்தனை நாள் எங்கடா இருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு ” என்று தன் மனதாரப் பாராட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.
 
தன நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சோமு  இப்பொழுது விஷாலின் அடுத்த  படமான ‘லத்தி’ மற்றும் ‘மார்க் ஆண்டனி ‘என இரு படங்களிலும் ஒரு நல்ல வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
 
நடிகர் சோமு, 2017 இல் வெளியான ‘வடசென்னை’ மற்றும் 2020 இல் வெளியான  ‘ சார்பட்டா’ படங்களிலும் சொல்லிக்கொள்ளும்படி சிறிய வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நடிகர் சோமு சினிமாவுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் வந்துள்ளார்.  கராத்தே பயிற்சி, குதிரை ஏற்றம், நீச்சல், நடனம், நடிப்பு பயிற்சி அனைத்தையும் பயின்று தேர்ச்சி பெற்ற பின் தான் களத்திற்கு வந்துள்ளார்.
 
ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.மேலும் நடிகர் சோமு ‘பொன்னியின் செல்வனி’ ல் ஒரு நல்ல  கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நடக்காமலே போய்விட்டது என்று கூறுகிறார்.
 
 தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக எப்படியாவது இயக்குநர் வெற்றிமாறன் எடுக்கும் வாடிவாசல் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்று தீராத முயற்சி செய்து வருகிறார் .அதற்காக காலை மாலை ஜிம்முக்குச் சென்று  தன்னுடைய உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
 
 ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக வேண்டும் என்பதையே தனது கனவாகக் கொண்டுள்ளார்.நடிகர் சோமுவின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்!

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.