ராணுவ உளவாளியாக இருக்கும் சந்திரபோஸ் (எ) சர்தார் (கார்த்தி), தேசத்துரோகி என்று முத்திரைக் குத்தப்பட்டு என்ன ஆனார் என்றே தெரியாத நிலையில், அவரது மகன் போலீஸ் ஆய்வாளர் விஜய பிரகாஷாக (கார்த்தி), தன்னுடைய பணியை செய்கிறார். இவர் செய்யும் வேலைகளில் பப்ளிசிட்டியை அதிகம் எதிர்ப்பார்த்து அதனை சிறப்பாக முடிக்கிறார். இவர் செல்லும் இடங்களில் எல்லாம் தன் தந்தை தேச்த்துரோகி என்று கூற, இவர் இதற்காகவே தன் பணியை சிறப்பாக செய்து முடித்து பப்ளிசிட்டியால் நற்பெயர் கிடைக்க நினைக்கிறார். இதற்கிடையில் வழக்கறிஞராக வரும் ஷாலினியும் (ராஷிகண்ணா) விஜய பிரகாஷும் காதலிக்கிறார்கள்.
மறுபக்கம் தண்ணீரை வியாபாரமாக்கி அதனால் ஏற்படும் உடல் நலப் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் தன் மகனுடன் மங்கை (லைலா) எதிர்த்து போராடுகிறார். அச்சமயம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண மங்கை யாருக்கும் தெரியாமல், மிக முக்கியமான ஒரு கோப்புகளை எடுக்க முயற்சிக்கிறார். இது தெரியவர மங்கை மீதும் தேசத்துரோகி என்ற பட்டம் சுமத்தப்பட்டு, அவருடைய மகனுக்கும் விஜய பிரகாஷ் போன்ற அவமானம் ஏற்படுகிறது.இந்த வழக்கை கையில் எடுக்கும் விஜய பிரகாஷ் இந்த கோப்பை கண்டுபிடித்தாரா? தேசத்துரோகி பட்டத்தில் சிக்கி தவிக்கும் மங்கையை விஜய் பிரகாஷ் காப்பாற்றினாரா? இல்லையா? தண்ணீரால் பாதிக்கும் தன் மகனுக்கு நீதி கிடைத்ததா? இதில் அனைத்திலிருந்தும் இவர்கள் எப்படி மீள்கின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.இயக்குனர் சொல்ல நினைத்ததை இரு வேடங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி கார்த்தி நிரூபித்துள்ளார். படத்தின் விறுவிறுப்போடே கார்த்தியின் நடிப்பு பயணிப்பதால் பாராட்டும்படி அமைந்துள்ளது. கார்த்தியின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு சிறந்த படமாக சர்தார் இடம்பெற்றிருக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் கதாப்பாத்திரமாக கார்த்தி அசத்தியிருக்கிறார். வழக்கறிஞராக வரும் ராஷிகண்ணா அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். நீண்ட இடைவேளைக்கு பிறகு திரையில் வரும் லைலா அவரின் பணியை சரியாக செய்து முடித்துள்ளார்.உடல்நலக்குறைவால் பாதிக்கும் தன் குழந்தையின் நிலையை உலகறிய செய்ய போராடும் இடங்களில் பாராட்டை பெறுகிறார். தந்தை கார்த்தியின் மனைவியாக வரும் ரஜிஷா விஜயன் அவருக்கு கொடுத்த வேலையை காப்பாற்றியுள்ளார். மேலும் மாஸ்டர் ரித்விக், அவரின் குழந்தை நடிப்பை வெளிபடுத்தி பாராட்டை பெறுகிறார்.கதை மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தி விறுவிறுப்பை கூட்டி அனைவரின் பாராட்டுக்களையும் பெறுகிறார் இயக்குனர் பி.எஸ். மித்ரன். படத்தின் திரைக்கதை கூடுதல் பலமாக அமைந்து சுவாரசியப்படுத்துகிறது. சமூக பிரச்சனையை கையில் எடுத்து அதனை கமர்ஷியலாக சொல்ல நினைத்திருக்கிறார். ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் சர்தார் படத்தில் உள்ளது. முதல் பாதியில் திரைக்கதையின் மூலம் கட்டப்படும் முடிச்சி பார்வையாளர்களுக்கு இரண்டாம் பாதியில் கவனம் செலுத்த உதவியிருக்கிறது.இயக்குனர் காட்சிப்படுத்த நினைத்ததை ஒளிப்பதிவின் மூலம் அழகாக பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம்ஸ். படத்தில் இவரின் உழைப்பு சிறப்பாக இடம்பெற்றிருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசையில் பாடல்கள் கேட்கும் அளவிற்கு இல்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.