தனியார் ஐடி ஊழியர்களான நாயகன் ரியோ மற்றும் பால சரவணன் இருவரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஒருவரை அழைத்து வந்து நடனமாட வைப்பதாக கூறி ஒரு தொகையை பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்நிலையில், நடனமாடிய நடிகைக்கு கொடுக்க வேண்டிய பணம் வீட்டில் இருந்து காணாமல் போகிறது. மேலும், பால சரவணனின் தங்கையும் தொலைந்து விடுகிறார். வேலையும் நிறுவனத்தில் இருந்து பணத்தை திரும்பி கேட்க, ரியோவும், பால சரவணனும், தொலைந்த பணத்தையும் தங்கையையும் தேட ஆரம்பிக்கிறார்கள்.இறுதியில் தொலைந்த பணத்தை ரியோ, பால சரவணன் இருவரும் கண்டுபிடித்தார்களா? பால சரவணனின் தங்கைக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் ரியோ நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் கதாப்பாத்திரம் ரசிக்கும்படி உள்ளது. கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் நடிப்பில் எதார்த்தம். ரோபோ சங்கர், பால சரவணன், தங்கதுரை அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்கள். பல இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.காமெடி கலந்த நல்ல சிரிக்க வைக்ககூடிய திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ். சிறிய கதையை முழு நீள திரைக்கதையாக கொடுத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் காதுகளுக்கு இனிமையாக்கியுள்ளது.