’96 – விமர்சனம்!

Reviews
0
(0)

உங்களில் எத்தனை பேர், அரைகுறையான காதலை உள்ளுக்குள் சுமந்து கொண்டு வேறொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்?. நீங்கள் அப்படிப் பட்டவர்கள் எனில், யோசிக்காமல் “96” படத்திற்கு போய் வாருங்கள். 2.30 மணி நேரம் கழித்து கண்டிப்பாக அழத் தோன்றும், தயங்காமல்.. முகத்தினை மூடிக் கொள்ளாமல் கொஞ்ச நேரம் அழுது விட்டு.. கண்ணீரைத் துடைத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்லுங்கள். நீங்கள் பொத்திப் பாதுகாத்த உங்களின் காதல் முழுமை பெற்று, பொக்கிஷமாய் மாறும்.

காதலுக்கு தொடக்கப் புள்ளி தேவைப்படுவது போல், முடிவு தேவைப்படுவதில்லை. அது ஒரு முடிவற்ற பயணமாய் தொடர்வதில் தான் ஆனந்தமே. இந்தப் படம் பார்க்கும் போதும், ராம் மற்றும் ஜானு இருவரும் அந்த இரவினைத் தாண்டியும் பயணிக்க வேண்டியவர்களாக நம்முள் நிறைந்து போகிறார்கள். காதல் மனித மனங்களை காரணங்களற்று கட்டிப் போடச் செய்யும் மாய உணர்வு, அதில் கட்டுண்டு அவிழ்த்துக் கொள்ள முடியாமலோ அல்லது விரும்பாமலோ வாழ்கிற பலநூறு மனிதர்களின் ஒற்றைக் கதை இந்த “96”.

விஜய் சேதுபதி “கே.ராமச்சந்திரன்”, திரிஷா “ஜானகி தேவி”. இவர்கள் இருவருக்குள்ளும் பூத்த 10-ஆம் வகுப்பு காதல், சில காரணங்களால் சந்திப்புகளற்று தொடர்கிறது. வெறும் நினைவுகளுடன் மட்டுமே நாட்களை நகர்த்தியவர்கள், கடைசிவரை ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளாமலே பிரிகிறார்கள். பிறகு 22 வருடங்கள் கழித்து, பள்ளித்தோழர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்கிற ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள். அந்த தருணத்தில் நடந்தேறும் உரையாடலில் இருந்து ஊற்றுத் தண்ணீராய் பிரவாகம் எடுக்கிற தூய அன்புப் பரிமாற்றங்கள், உண்மைகள், அழுகைகள், ஆறுதல்கள் என வரிக்கு வரி நெகிழ செய்யும் கவிதையாய் மாறியிருக்கிறது படம்.

விஜய் சேதுபதிக்கு “அல்வா” சாப்பிடுவது மாதிரி இது போல நடிப்பதெல்லாம். இதே 37 வயது முரட்டுத்தனமான குழந்தை கேரக்டரை வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்கு மனதில் இறங்கியிருப்பார்களா? என்பது பெரிய கேள்விதான். மனிதர் அசர வைக்கிறார். விஜய் சேதுபதியின் சிறு வயது தோற்றத்தில் நடித்திருக்கும் ஆதித்யா பாஸ்கர் பிரமாதம். தமிழ் சினிமாவின் “மார்க்கண்டேயி” என்று சிலர் திரிஷாவைப் பற்றி கூறுவார்கள், இது கொஞ்சம் அதீதமான ஒன்றோ என்ரு கூட சமயங்களில் தோன்றுவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் என்ன ஒரு அழகு, என்ன ஒரு நடிப்பு.. அவரின் புருவ இடுக்கில் இடம்பெற்ற ஒற்றைப் பொட்டாகவேணும் ஆகிவிட மனசு துடிப்பதனை வெளிக்காட்டி கொள்ளாமல் படம் பார்க்க மிகவும் சிரமமாகத் தான் இருந்தது. திரிஷா இனி ஜெஸ்சி இல்லை, ஜானு. அவருடைய சிறு வயது தோற்றத்தில் நடித்திருக்கும் கௌரி ஜி.கிருஷ்ணா கொள்ளை அழகுடன், நடிப்பாலும் மனதை நிறைக்கிறார்.

காதலையும், இளையாராஜாவையும் வேறுவேறாக பார்க்க முடியாது என்பதை இயக்குநர் பிரேம் குமார் ஆழமாக நம்புபவராக இருக்க வேண்டும். அதனால் தான் படம் நெடுகிலும் இளையராஜாவால் நிரப்புகிறார். அதிலும் குறிப்பாக ஜானகியின் பாடல்கள் இதமோ இதம். இப்படியாகப்பட்ட படத்திற்கு இசை எந்தளவிற்கு முக்கியம் என்பதை உணர்ந்து பின்னணி இசையினை கோர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா. பாடல்கள் ஒவ்வொன்றும் சூழ்நிலைகளின் கணம் கடத்தும் வரிகளுடன் அமைந்திருப்பது சிறப்போ சிறப்பு. “வசந்த காலங்கள்”, “தாபங்களே”, “இரவிங்கு தீவாய்” இம்மூன்று பாடல்களும் உமாதேவியின் தமிழாளுமையை பறைசாற்றும் முத்தான பாடல்கள். “காதலே காதலே” பாடல் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் காதல் சொட்டும் தேன்.

படத்தின் ஒளிப்பதிவின் நேர்த்தி அபாரமான உழைப்பினை பிரதிபலிக்கிறது, பிரமாதப்படுத்தியிருக்கிறார் சண்முகசுந்தரம். குறிப்பாக அறிமுக பாடல் அட்டகாசம். படத்தின் நீளத்தில் கொஞ்சம் கை வைத்திருக்கலாம் எடிட்டர் கோவிந்தராஜ். இறுதியாக “எல்லாப் புகழும் C.பிரேம் குமாருக்கே”. அருமையான வசனங்களைக் கொண்ட உரையாடல்கள் முழு படத்தையும் அழகாக்கி இருக்கிறார்.

“ராம் எங்க இருக்க?”

“உன்ன எங்க விட்டேனோ, அங்கேயே தான் இன்னும் இருக்கேன்”…

“உன்னக் கல்யாணம் பண்ணிக்க போறவள முதல்ல நான் பார்க்கணும். அவகிட்ட உன்ன நல்லா பார்த்துக்க் சொல்லணும்”.. என படம் நெடுகிலும் கவிதை, கவிதையாய் வசனங்கள். அல்டிமேட்.

படத்தில் ராம், சிறு வயதிலிருந்தே ஜானுவின் கண்களைப் பார்த்து பேசத் தயங்குபவானாக, வெட்கப்படுபவனாகவே இருப்பான். ஆனால், கிளைமேக்சில் ஜானுவின் கண்களை நேருக்கு நேராக ராம் பார்த்து பேசும் போது, அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் ராமின் கண்களை மூடிவிட்டு கடந்து போகும் ஜானு மிகப்பெரிய வலியை கடத்துகிறாள்.

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.