சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம், வருமான வரி தாக்கல், வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. சமீபத்தில் இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் என அறிவித்தது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஆதார் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஆதார் அட்டை பெறுவது தொடர்பாக விதிமுறைகள் 27 மற்றும் 28-வது பிரிவுகளின் கீழ் சுமார் 81 லட்சம் ஆதார் எண்கள் முடக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அந்தந்த மாநிலங்களில் உள்ள ஆதார் மையங்களில் உள்ள அதிகாரிகள் ஆதார் எண்களை இவ்விதிகளின் படி முடக்க முடியும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் 11.45 லட்சம் பான் அட்டைகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஆதார் அட்டை ஆக்டிவாக உள்ளதா? என்பதை பரிசோதிக்க https://resident.uidai.gov.in/aadhaarverification இணையதளத்தில் சென்று ஆதார் எண்களை சரி செய்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.